இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடந்தேறிய கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருநாள் ஊதிய நன்கொடையாக 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதுடன், இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 20 உறுப்பினர்கள் அனுசரணையாளர்களாக இணைந்துள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
கத்தர் காயல் நல மன்றத்தின் 24ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆகியன, 03.07.2015 வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், கத்தர் - தோஹா அல்ஜதீதிலுள்ள மாஸா ரெஸ்டாரெண்ட்டில் நடைபெற்றது.
பெயர் பதிவு:
நிகழ்விட நுழைவாயிலில், உறுப்பினர் பதிவு மற்றும் சந்தா சேகரிப்பு ஆகிய பணிகளை, பொக்கு ஹுஸைன் ஹல்லாஜ், மன்றப் பொருளாளர் அஸ்லம், துணைப் பொருளாளர் ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் ஆகியோர் செய்தனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற செய்மூஸா, கே.வி.ஏ.டீ.கபீர் ஆகியோர் முன்னிலை வகிக்க, மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எச்.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். சொளுக்கு முஹம்மத் இப்றாஹீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மறைந்தவருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், நடப்பு உறுப்பினர் - நூர் முஹம்மதின் தந்தையுமான செய்யித் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மர்ஹூம் அவர்களின் மண்ணறை - மறுமை நல்வாழ்விற்காக ஹாஃபிழ் நூஹ் ஸாஹிப் துஆ பிரார்த்தனை செய்தார்.
‘கவிக்குயில்’ ஃபாயிஸ் இஸ்லாமிய இன்னிசை பாடினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
தொடர்ந்து, கத்தரில் புதிதாகப் பணியாற்ற வந்துள்ள
(1) அபூ சுல்தான் (கோமான் தெரு),
(2) அபூ உபைதா ஃபைஸல் (கொச்சியார் தெரு),
(3) ஷாஹுல் ஹமீத் (நெய்னார் தெரு),
(4) அலாஉத்தீன் (சித்தன் தெரு),
(5) அப்துல் ஃபத்தாஹ் (அம்பல மரைக்கார் தெரு)
ஆகியோர், மன்றத்தின் புதிய உறுப்பினர்களாக கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இக்ராஃ புதிய தலைவருக்கு சால்வை:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் புதிய தலைவராக - கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைப் பாராட்டி, மன்றத்தின் சார்பில் மூத்த உறுப்பினர் சோனா முஹ்யித்தீன் அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
அவரது பணி சிறக்க அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தமது மனப்பூர்வமான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் பங்கேற்றோர் உறுதியளித்தனர்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட - நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் துவக்கமாக வரவேற்றுப் பேசிய அவர், நிர்வாக வசதி கருதி - மன்றத்தின் செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய மாற்றம் குறித்து பொதுக்குழுவில் தெரிவித்து, பங்கேற்றோரின் ஒப்புதலைப் பெற்றார்.
வருங்கால செயல்திட்டங்கள்:
மன்றத்தால் காயல்பட்டினத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ள ‘மாடித்தோட்டம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஹீலர் பாஸ்கர் அவர்களை வரவழைத்து - வாழ்வியல் பயிற்சியளித்தல், இக்ராஃவின் ஒருங்கிணைப்புடன் மன்றத்தால் நடத்தப்படவுள்ள TNPSC, UPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு, ஆண்டுக்கு இரு முறை கல்வி - வேலைவாயப்பு வழிகாட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்திட்டங்கள் குறித்து அவர் விளக்கிப் பேசினார். ஆறுமுகநேரியில் இயங்கி வரும் Young Pioneer Association - YPA (இளம் முன்னோடிகள் சங்கம்) சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சிகளை, அவர்களைக் கொண்டே காயல்பட்டினத்திலும் நடத்திடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வாழ்த்தியோருக்கு நன்றி:
இக்ராஃவின் புதிய தலைவராக தன்னைத் தேர்ந்தெடுத்தமைக்காக இக்ராஃவின் பொதுக்குழுவிற்கும், அதற்காக வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்துலக காயல் நல மன்றங்கள், கல்வி ஆர்வலர்கள், கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார். மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் மேலான ஒத்துழைப்புடன், தனது பொறுப்புக் காலத்தில் இக்ராஃவின் மேம்பாட்டிற்காக இயன்றளவுக்கு சிறப்புற செயல்பட ஆயத்தமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இக்ராஃ வளர்ச்சிக்கா 8 பேர் குழு:
இக்ராஃவுக்கு இது பத்தாம் ஆண்டு என்பதால், அதன் வளர்ச்சி தொடர்பாக பொதுமக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்புள்ளதாகக் கூறிய அவர், அதைப் பூர்த்தி செய்வதற்காக - மன்றத் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை, முஹம்மத் முஹ்யித்தீன், ‘கவிமகன்’ காதர், கத்தீப் மாமுனா லெப்பை ஆகியோரடங்கிய 8 பேர் குழுவை நியமித்துள்ளதாகவும், தனது தலைமையின் கீழான இக்ராஃவின் அனைத்து செயல்திட்டங்களையும் இக்குழு பொறுப்பேற்று செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன் துவக்கமாக - நடப்பாண்டில் இக்ராஃ மூலம் நிறைய கல்விச் சேவைகளைச் செய்வது குறித்து கலந்தாலோசிக்க, இதுவரை 4 முறை குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாட்ஸ்அப் குழுமம்:
இக்ராஃவின் தலைமைப் பொறுப்பையேற்று இதுகாலம் வரை சிறப்புற செயல்படுத்தி, வழிகாட்டிகளாகத் திகழும் - இக்ராஃவின் அனைத்து துணைத்தலைவர்களுக்கும் நன்றி கூறிய அவர், அனைத்துலக காயல் நல மன்றங்களின் முறையான கலந்தாலோசனையை விரைவாகப் பெற்று, அதன்படி வழிநடத்திட, இக்ராஃவின் தலைவர், துணைத்தலைவர்கள், இக்ராஃ நிர்வாகத்தில் பங்கேற்காத காயல் நல மன்றங்களிலிருந்து இக்ராஃவுக்காக தலா ஒரு பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கி, Whatsapp குழுமம் ஒன்று துவக்கப்பட்டு, அதன் மூலம் கருத்துக்கள் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இக்ராஃ துணைத்தலைவர்களுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்தாலோசனையில், மாணவர்கள் தம் வருங்கால முன்னேற்றம் குறித்து குறிக்கோள் (Attitude) வைத்திருக்க வேண்டும் என்றும், குறிக்கோள் இல்லாது போனால் அது அவரது மொத்த முயற்சியையும் வீணாக்கிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு, அதற்காக இக்ராஃ மூலம் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து பெரிதும் வலியுறுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
மாணவர்களின் தன்னார்வத்தின் அடிப்படையில் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்றும், நடப்பாண்டின் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியுடன் இணைத்து இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இக்ராஃவின் கடந்த 9 ஆண்டு கால பருவத்தில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை மாணவ-மாணவியர் 556 பேருக்கு - கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு, ஐ.டீ.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளுக்காக கல்வி உதவித் தொகையாக 69 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பயனாளிகளில் பெரும்பான்மையோர் மாணவியர் என்றும் கூறினார்.
20 அனுசரணையாளர்கள்:
நடப்பாண்டு - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக நன்கொடை வழங்கிட, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் அதன் உறுப்பினர்களிலிருந்து 20 அனுசரணையாளர்கள் ஆயத்தமாக உள்ளதாகவும், அவர்களிடமிருந்து 1 லட்சம் ரூபாய் இவ்வகைக்காக பெறப்படும் என்றும், வருங்காலத்தில் இன்னும் அதிகளவில் பங்களிப்பு செய்திட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்காக தொடர்ந்து பற்றாக்குறையில் இருப்பதைத் தவிர்த்து, நிரந்தர வருமானம் ஏற்படுத்திடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கல்வி ஆர்வலர்களை அதிகளவில் உறுப்பினர்களாக இணைப்பதன் மூலம், அவர்களிடமிருந்து பெறப்படும் வருடாந்திர சந்தா தொகையைக் கொண்டு இக்குறையை ஓரளவுக்குப் போக்கலாம் என்றும் கூறினார்.
தற்போதுள்ள கல்லூரி கல்விக் கட்டணங்களின் உயர்வைக் கருத்திற்கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் கடனுதவியாகவும், பெண்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு ரூபாய் 7 ஆயிரம் திருப்பத் தேவையற்ற உதவித்தொகையாகவும் வழங்கலாம் என்றும், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட Professional Courses - உயர் பட்டப் படிப்புகளுக்காக உலக காயல் நல மன்றங்கள் ஒருங்கிணைந்த முறையில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான சாதக நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Dislexia:
மாணவ-மாணவியரின் கற்றல் திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் Dislexia தொடர்பாக, அத்துறை சார்ந்த மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் விஜயராகவன் அவர்களைக் கொண்டு, பொதுநல ஆர்வலர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களின் அனுசரணையுடன் நகரில் விரைவில் மருத்துவ நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Spoken English:
தம்மாம் காயல் நல மன்றத்தின் தலைமையின் கீழ் இக்ராஃ இருந்தபோது, மாணவர்களுக்கு Spoken English திறமையை அதிகப்படுத்துவதற்காக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அது தொடர்ந்து இக்ராஃவின் கீழ் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இக்ராஃவுக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக, ஒரு Foundation துவக்கப்பட்டு, அதன் மூலம் விரைவில் கட்டிடப் பணிகளைத் துவக்கிட ஆவன செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வாறாக மன்றத் தலைவரின் உரை உள்ளடக்கம் அமைந்திருந்தது.
வருங்கால மணமக்களுக்கு வாழ்த்து:
விரைவில் நடைபெறவுள்ள தமது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மன்றத்தினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையில், (1) கத்தீப் ஜியாத், (2) ஜெய்னுத்தீன், (3) முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகிய வருங்கால மணமக்கள், தமது திருமண அழைப்பிதழை மன்றத் தலைவரிடம் அளித்தனர். அவர்களது மணவாழ்வு சிறக்க மன்றம் வாழ்த்திப் பிரார்த்திப்பதாக தலைவர் கூறினார்.
கத்தரில் வேலைவாய்ப்பு பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு:
கத்தரில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்று வரும் காயலர்களின் கவனத்திற்காக பின்வருமாறு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது:-
அன்பார்ந்த காயலர்களே! கத்தர் நாட்டில் ஏதேனும் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்று வருவதாக இருந்தால், பணியில் சேர ஒப்புதல் அளிக்கும் முன், கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரிடம் விசாரித்தோ அல்லது மன்றத்தின் ‘kwaqatar2020@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டோ - அந்நிறுவனம் குறித்த சரியான விபரங்களைப் பெற்ற பின் பணியில் சேர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போதிய விபரம் பெறாமல் தற்போது கத்தரில் சில நிறுவனங்களில் பணியாற்ற வந்துள்ள காயலர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சூழலைத் தவிர்ப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
வாழ்த்துரை:
மன்றத்தின் நலப்பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, முன்னிலை வகித்த மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டீ.கபீர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில், கத்தர் நாட்டின் ஜபல் அல் நூர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜுரைஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினர் செய்யித் முஹ்யித்தீன் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பின்னர், சிறப்பு விருந்தினர் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
கத்தர் காயல் நல மன்றத்தின் இந்த அருமையான வருடாந்திர பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள என்னை அழைத்து வாய்ப்பளித்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு முதல் முறையல்ல! கடந்தாண்டும் இதே நிகழ்வில் நான் பங்கேற்றுள்ளேன்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான புதிய முகங்களைக் காண்கிறேன். இந்த அதிகரிப்பு மன்றப் பணிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
கடந்த ஆண்டிலிருந்து எனது நிறுவனத்தில் உங்கள் ஊரைச் சேர்ந்த 3 பேர் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டில் கூடுதலாக ஒருவரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்.
காயலர்களுடன் கடந்த பத்தாண்டுகளாக நான் நெருங்கிப் பழகி வருகிறேன். அவர்கள் என்னைத் தங்களுள் ஒருவராகவே பாவித்து வருகின்றனர். அவர்கள் மூலம், கத்தர் காயல் நல மன்றத்தின் பணிகள் குறித்துக் கேள்வியுற்று வியப்படைந்துள்ளேன்.
உங்கள் ஒற்றுமை என்னைப் பெரிதும் மகிழ்வித்திருக்கிறது. இனி வருங்காலங்களில் எனது நிறுவனத்தில் - தகுதியுள்ள இன்னும் பல காயலர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க ஆவன செய்யப்படும்.
உங்கள் யாவரின் மக்கள் நலப் பணிகள் சிறந்தோங்க வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு சிறப்பு விருந்தினர் உரையாற்றினார்.
இஃப்தார் - தொழுகை இடைவேளை:
மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் காயல்பட்டினம் கறிகஞ்சி, பேரீத்தம்பழம், வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் பரிமாறப்பட்டன.
செயலர் உரை:
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, இரண்டாம் அமர்வு துவங்கியது. மன்றச் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் உரையாற்றினார்.
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ் அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கத்தர் காயல் நல மன்றத் தலைவருக்கு அவர் வாழ்த்து கூறினார்.
(1) கல்வி, (2) மருத்துவம், (3) சமூக நலம் மற்றும் அவசரகாலம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஏராளமான நகர்நலப் பணிகள் இதுகாலம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இனி வருங்காலங்களிலும் செய்யப்படவுள்ளதாகவும் கூறிய அவர், இப்பிரிவுகளின் கீழ் இதுகாலம் வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
(I) கல்வி:
(1) இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினத்தில் பங்களிப்பு.
(2) கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்காக கடந்தாண்டில் 4 மாணவர்களுக்கு இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை.
(3) நடப்பாண்டு இக்ராஃவின் தலைமைப் பொறுப்பை கத்தர் காயல் நல மன்றம் ஏற்றுள்ளதால், இக்ராஃவின் அனைத்துத் தேவைகளையும் மன்றத்தின் தேவைகளாகக் கருதி, உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும். அந்த வகையில், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வகைக்காக இதுவரை 20 அனுசரணையாளர்கள் மன்றம் சார்பில் தமது பங்களிப்பை உறுதி செய்துள்ளனர்.
(4) அரசுப் பள்ளிகளில் 06 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஏழை மாணவ-மாணவியருக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 100 பயனாளிகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. ரமழான் நிறைவுற்றதும் இத்திட்டம் நிறைவடையும்.
(5) இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து ‘தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட்’ நடத்தி வரும் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கத்தர் காயல் நல மன்றத்தின் ‘காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கான பொது அறிவு வினாடி-வினா’ நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கூடுதலாக கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வனைத்து நிகழ்ச்சிகளும், வரும் ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விடுமுறையில் தாயகம் செல்லும் மன்ற அங்கத்தினர் தமது ஒத்துழைப்பை நிறைவாக வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
(6) காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகரின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள புத்தகங்களைப் பாதுகாப்பதற்காக அலமாரி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
(II) மருத்துவம்:
(1) உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ஷிஃபா மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருகிறது.
(2) நகரில் பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை இலவச முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோயை அதன் துவக்க நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது என்பதைக் கருத்திற்கொண்டு, நடத்தப்படும் இம்முகாமில் தம் குடும்பத்தினர் அனைவரையும் பங்கேற்கச் செய்வது அனைவரின் கடமையாகும்.
(3) மருத்துவ நிபுணர்களின் கருத்துப் படி, 40 வயதைக் கடந்த மகளிர் யாவரும் கர்ப்பப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான வருடாந்திர பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
(4) ஹீலர் பாஸ்கர் அவர்களைக் கொண்டு நகரில் வாழ்வியல் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அவரது ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
(5) பொதுமக்கள் ரசாயண நஞ்சு கலக்கப்படாத உணவுகளை உண்ண வேண்டும் என்ற அடிப்படையில், தமது வீடுகளின் மாடி உள்ளிட்ட - கிடைக்கும் சிறு இடங்களில் காய்கறிகள், கீரைகளைப் பயிரிடுவதற்காக, ‘மாடித்தோட்ட விழிப்புணர்வு’ நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
(III) சமூக நலம் & அவசரகால உதவி:
(1) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு கழிப்பறை கட்டுவதற்காக, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையிடமிருந்து பெறப்பட்ட வேண்டுகோளை ஏற்று, அதற்காக உதவி வழங்கப்பட்டுள்ளது.
(2) சிவன் கோவில் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் (தைக்கா பள்ளி) கழிப்பறை கட்டுவதற்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
(3) தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் - நகர பள்ளிகளின் இமாம் - முஅத்தின் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
(4) மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கி வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு வருடாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு செயலரின் உரையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
பொருளாளர் உரை (வரவு-செலவு கணக்கறிக்கை):
தொடர்ந்து, மன்றப் பொருளாளர் முஹம்மத் அஸ்லம் உரையாற்றினார். கடந்த ஓராண்டு காலத்திற்கான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் தாக்கல் செய்து, அது குறித்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்குத் தேவையான விளக்கங்களை அளித்து, ஒப்புதலைப் பெற்றார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றி செயல்படுத்தப்பட, உறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை நிலுவையின்றி செலுத்திடுமாறும், தற்காலத்தின் தேவை மற்றும் சூழலைக் கருத்திற்கொண்டு, சந்தா தொகையை கனிசமாக உயர்த்தி வழங்க முயற்சிக்குமாறும் அவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
குலுக்கலில் பரிசு:
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அதில் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியை, ‘கவிமகன்’ காதர் தனக்கேயுரிய நகைச்சுவை பாணியில் நடத்தினார்.
(1) ‘கவிக்குயில்’ ஃபாயிஸ், (2) முஹ்யித்தீன் தம்பி, (3) ஷாஹுல் ஹமீத் ஆகியோர் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
நடப்பு நிகழ்ச்சியில், ‘ஒருநாள் ஊதிய நன்கொடை’ வழங்கும் திட்டத்தின் கீழ் - மூடி உறையிடப்பட்ட பெட்டியில் நிதி சேகரிக்கப்பட்டது. இவ்வகைக்காக ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் தொகை சேகரமானது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்காக தனியொரு குலுக்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், (1) செய்யித் மூஸா, (2) முஹ்யித்தீன் தம்பி, (3) நூருத்தீன் ஆகிய உறுப்பினர்கள் பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து, குழுப்படம் எடுக்கப்பட்டது.
‘கவிமகன்’ காதர் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
தொடர்ந்து பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடு:
அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி, ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, கே.எம்.டீ.ஷேக்னா லெப்பை, பொக்கு ஹல்லாஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃப்தாருடன் கூடிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (23ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[படம் இணைக்கப்பட்டது @ 22:58 / 12.07.2015] |