வரலாறு:
காயல்பட்டினம் நகராட்சி மன்றம் அமைந்துள்ள பஞ்சாயத் வீதியில், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்கள் நிமிர்த்தம் வந்து செல்வோருக்கும் - அருகில் பள்ளிவாசல் இல்லாத காரணத்தால், ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லாத நிலை இருந்து வந்தது. தொழுகைக்காக இம்மக்கள் - சதுக்கைத் தெருவிலுள்ள மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளிக்கே செல்லும் நிலை இருந்தது. அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கும், மழைக்காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் செல்லும் பொதுமக்களுக்கு இது மிகவும் வசதி குறைவை ஏற்படுத்தியது. இவற்றின் காரணமாக, அங்கு இறைவழிபாட்டுத்தலம் - மஸ்ஜித் அவசியம் என அப்பகுதி மக்கள் கருதினர்.
அதனடிப்படையில், தோல்சாப் குடும்பத்தைச் சேர்ந்த - காலஞ்சென்ற ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ என்பவர் - அப்பகுதியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக, தனக்குச் சொந்தமான 7600 சதுர அடி நிலத்தை நன்கொடையாக அளித்து வக்ஃப் செய்திருந்தார்.
அடிக்கல் நாட்டு விழா:
அவ்விடத்தில், சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், ‘மஸ்ஜித் ஜீலானீ’ என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 25.01.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
திறப்பு விழா:
அப்பகுதி மக்களின் பெரும்பாலான பங்களிப்பு மற்றும் இதர பொதுமக்களின் நிதியைக் கொண்டு, 7600 சதுர அடி பரப்பில், சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, ஹிஜ்ரீ 1435 துல்ஹஜ் 09 - அரஃபா நாளன்று - அதாவது, 03.10.2014 வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் திறப்பு விழா கண்டது.
சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஃகலீஃபத்துல் குலபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ துவக்கமாக துஆ இறைஞ்சினார்.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ பள்ளிவாசலைத் திறந்து வைத்தார். விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தஹிய்யத்துல் மஸ்ஜித் எனும் காணிக்கைத் தொழுகையை நிறைவேற்றினர்.
பள்ளிவாசலுக்காக நிலம் வழங்கிய – பொருளாதார உதவிகளை வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் மறைந்தவர்களுக்காக கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அன்று மஃரிப் வேளையில், புதிய பள்ளிவாசலில் முதல் தொழுகையை, மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ வழிநடத்தினார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர், பள்ளியின் புதிய இமாம் மற்றும் பிலாலுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஸூஃபீ பின்வருமாறு நன்றிரையாற்றினார்:-
ஃகலீஃபத்துல் குலபா மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ துஆவைத் தொடர்ந்து, ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இவ்விழாவில், பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் உட்பட - நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம், சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
புதிய நிர்வாகம்:
இப்பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மஹல்லா ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம், 11.04.2015 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் பின்வருமாறு நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
கவுரவ தலைவர்:
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப்
தலைவர்:
ஹாஜி எம்.ஏ.பகாரீ
செயலாளர்:
ஹாஜி எம்.பி.ஏ.முஹம்மத் ஸலீம்
துணைச் செயலாளர்:
ஹாஜி எஸ்.ஏ.சி.இஸ்மாஈல் ஸூஃபீ
பொருளாளர்:
ஹாஜி எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர்
ரமழான் சிறப்பேற்பாடுகள்:
இப்பள்ளிவாசல் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளமையால், நடப்பாண்டில் இங்கு இஃப்தாருக்கு கஞ்சி தயாரிக்கப்படவில்லை. மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி கஞ்சி பெறப்படுகிறது. வரும் ஆண்டிலிருந்து சொந்தமாக கஞ்சி தயாரிக்க திட்டமுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இமாம் - பிலால் - தராவீஹ் இமாம்கள்:
இப்பள்ளியின் இமாமாக - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஊசி ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகன் ஹாஃபிழ் ஊசி எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரும், பிலாலாக - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தோல்சாப் முஹம்மத் லெப்பை அவர்களின் மகன் ஹாஜி தோல்சாப் எம்.எல்.முஹம்மத் ஷம்சுத்தீன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழானில், இஷா தொழுகை 21.00 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.15 மணிக்கும் துவக்கப்படுகிறது. தராவீஹ் தொழுகையை - காயல்பட்டினம் பஞ்சாயத் வீதியைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.டீ.முஹம்மத் லெப்பை என்பவரின் மகன் ஹாஃபிழ் எம்.எல்.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த அப்துர்ரஷீத் என்பவரது மகன் ஹாஃபிழ் எம்.ஆர்.அர்ஷத் அஹ்அத் ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்றனர்.
ரமழான் சிறப்பேற்பாடுகள்:
ரமழானில் அன்றாடம் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 50 முதல் 75 பேர் வரை இதில் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள், பழங்கள், அவ்வப்போது குளிர்பானம் பரிமாறப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு இஃப்தார் ஏற்பாடுகளுக்கு, எம்.என்.முஹம்மத் ஆரிஃப், எஸ்.எச்.பஷீர் அஹ்மத், எஸ்.டீ.ஷேக் முஹம்மத் ஆகியோர் ஏற்பாட்டுக் குழுவினராக இருந்து சேவையாற்றி வருகின்றனர்.
இஃப்தார் காட்சிகள்:
30.06.2015 அன்று இப்பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்:-
தகவல்களில் உதவி:
S.A.C. இஸ்மாஈல் ஸூஃபீ
படங்களில் உதவி (திறப்பு விழா படங்கள்):
A.R.ஷேக் முஹம்மத்
கள உதவி (இஃப்தார் நிகழ்ச்சி):
M.L.ஹஸன் பஸரீ
மஸ்ஜித் ஜீலானீ - ஜீலானீ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |