ஷவ்வால் (1436) மாத அமாவாசை ஜூலை 16 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 1:24 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் காலை 6:54.
ஜூலை 16 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:41 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:54. காயல்பட்டினத்தில் சூரியன் மறைந்து 13 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைகிறது. மேலும் சந்திரன் மறையும்போது, பிறையின் வயது சுமார் 12 மணி நேரம். எனவே - காயல்பட்டினத்தில் - வெறுங்கண்கள் கொண்டு அன்று பிறையை காண இயலாது.
ஜூலை 16 அன்று வெறுங்கண்கள் கொண்டு - தென் பசிபிக் கடல் பகுதிகள் எளிதாகவும், தென் அமெரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால், எளிதாகவும் பிறையை காணலாம்.
தென் அமெரிக்க கண்டத்தின் ஏனைய பகுதிகளிலும், மத்திய அமெரிக்க கண்டம், மெக்சிகோ, அமெரிக்க நாட்டின் தென் பகுதி, ஆப்ரிக்கா கண்டத்தின் தென் பகுதிகளில் தொலை நோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
ஜூலை 17 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:41 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:40. சூரியன் மறையும்போது பிறையின் வயது 36 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 59 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் - எளிதாக பிறையை காணலாம்.
கனடா, ஐரோப்பா, சீனா, ஆகிய பகுதிகளின் வட பகுதி, ரஷ்ய நாட்டின் தென் பகுதி ஆகியவற்றில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும், உலகின் இதர பகுதிகளில் - வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும் காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு - ஜூலை 17 - ஷவ்வால் 1, நோன்பு பெருநாள் தினமாகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 16 (அமாவாசை) அன்று ரமழான் 29 பூர்த்தி ஆகிறது. அன்று - தென் பசிபிக் கடல் பகுதிகள் எளிதாகவும், தென் அமெரிக்க கண்டத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால், எளிதாகவும் பிறையை காணலாம். அவ்வாறு பிறை காணப்பட்ட தகவல் வந்தால் ஜூலை 16 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்து, ஜூலை 17 அன்று ஷவ்வால் மாதம் (நோன்பு பெருநாள்) துவக்குவர். அவ்வாறு தகவல் கிடைக்கவில்லையெனில் - ஜூலை 17 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 18 அன்று ஷவ்வால் மாதம் (நோன்பு பெருநாள்) துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூலை 16 (அமாவாசை) அன்று ரமழான் 28 பூர்த்தி ஆகிறது. எனவே அவர்கள் ஜூலை 17 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்வர். ஜூலை 17 அன்று காயல்பட்டினத்தில் பிறையை எளிதாக காணலாம். அவ்வாறு கண்டால், அவர்கள் ஜூலை 17 அன்று ரமழான் 29 பூர்த்தி செய்து, ஜூலை 18 அன்று ஷவ்வால் மாதம் (நோன்பு பெருநாள்) துவக்குவர்.
ஜூலை 17 அன்று வானிலை சூழல் காரணமாக பிறை தென்படவில்லையென்றால், அவர்கள் ஜூலை 18 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 19 அன்று ஷவ்வால் மாதம் (நோன்பு பெருநாள்) துவக்குவர்.
|