காயல்பட்டினம் சித்தன் தெருவிலுள்ள மஹான் சின்ன முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்குளின் 133ஆம் ஆண்டு நினைவு கந்தூரி நிகழ்ச்சிகள், நடப்பு ஆகஸ்ட் 04, 05, 06 (செவ்வாய், புதன், வியாழன்) நாட்களில் நடைபெற்றன.
இம்மூன்று நாட்களிலும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. செவ்வாய் மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சுப்ஹான் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்று 20.30 மணியளவில், “வழிகாட்டும் வலிமார்கள்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ உரையாற்றினார்.
புதன்கிழமை மாலையில் முஹ்யித்தீன் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்று 20.30 மணியளவில், “நபிகளாரின் மறைவான ஞானங்கள்” எனும் தலைப்பில், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ உரையாற்றினார்.
கந்தூரி நாளான வியாழக்கிழமையன்று 16.45 மணியளவில், மஹான் சின்ன முத்துவப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. அன்று 19.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் - காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
அன்று 20.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித சொற்பொழிவாற்றினார்.
பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷெய்கு அலீ மவ்லானா ஸாஹிப் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளை, முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நெறிப்படுத்தினார். ஏற்பாடுகளை, சின்ன முத்துவாப்பா தைக்கா தலைவர் பண்ணை எஸ்.ஏ.எம்.முஹம்மத் காஸிம், துணைத்தலைவர் பண்ணை எஸ்.ஏ.எம்.ஜஃபர் ஸாதிக், செயலாளர்களான பண்ணை ஏ.எம்.அஹ்மத் ஷெய்கு ஸலாஹுத்தீன், பண்ணை எம்.கே.ஷெய்கு அப்துல் காதிர் மவ்லானா ஆகியோர் செய்திருந்தனர். |