காயல்பட்டினம் நகராட்சியின் ஜூன் 2014 நகர்மன்ற கூட்டத்தில், தீர்மானம் எண் 819 வாயிலாக, நகரின்
41 இடங்களில் - தலா 3 லட்சம் மதிப்பீட்டில் (மொத்த மதிப்பீடு - 1.23 கோடி ரூபாய்) - உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்திட அனுமதி
வழங்கப்பட்டது.
ஜூன் 2014 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான பொருள்
அதே கூட்டத்தில், தீர்மானம் எண் 808 வாயிலாக, நகரின் 22 சாலைகளுக்கு (மொத்த மதிப்பீடு - 1.35 கோடி ரூபாய்) அனுமதியும்
வழங்கப்பட்டது.
ஜூன் 2014 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான பொருள்
கடந்த ஆண்டே அனுமதி வழங்கப்பட்ட இப்பணிகளுக்கு, 13 மாதங்கள் கழித்து, இவ்வாண்டு ஜூலை 24 அன்று ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனுமதி வழங்கப்பட்ட 41 இடங்களில், 9 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 29.50 லட்சம் ரூபாய்),
அனுமதி வழங்கப்பட்ட 22 சாலைகளில், 8 சாலைகளை அமைக்கவும் (மொத்த மதிப்பீடு - 38.05 லட்சம் ரூபாய்) - தற்போது ஒப்பந்தப் புள்ளிகள்
கோரப்பட்டுள்ளன.
[ஜூன் 2014இல் ஒப்புதல் கொடுக்கப்பட்ட 22 தெருக்களில், 6 தெருக்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 2014 இல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அவைகளுக்கு (மதிப்பீடு - 43.15 லட்ச ரூபாய்) நவம்பர் 2014 கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த 6 தெக்ருகளில் - ஆரம்பள்ளி தெரு தவிர்த்து, பிற தெருக்களில் பணி சில வாரங்களுக்கு முன் நிறைவுற்றுள்ளது என தெரிகிறது. ஆரம்பள்ளி தெரு சாலைப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மீதி இருந்த 16 தெருக்களில், 8 தெருக்களுக்கு தற்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.]
ஜூலை 24 அறிவிப்புபடி, ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 4 வரை விபரங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும், ஒப்பந்தப்
புள்ளிகளை ஆகஸ்ட் 5 மாலை 3 மணிவரை சமர்ப்பிக்கலாம் என்றும், ஒப்பந்தப் புள்ளிகள் அன்று மாலை 3:30 அளவில் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது..
ஆகஸ்ட் 5 விடுமுறை தினமாக அமைந்து விட்டால், அடுத்த வேலை நாளில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 5 - தூத்துக்குடி பனிமயமாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு
உள்ளூர் விடுமுறை தினமாகும். எனவே - நேற்று திறக்கப்பட வேண்டிய ஒப்பந்தப் புள்ளிகள், இன்று திறக்கப்படும் என தெரிகிறது.
ஓர் ஆண்டுக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பீட்டு தொகை அடிப்படையில் 13 மாதங்கள் கழித்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது சில ஐயங்களை எழுப்பினாலும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்னரே, யாருக்கு டெண்டர் வழங்கப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டு விட்டதாக சில புகார்கள் எழுந்துள்ளன.
ஒப்பந்தப்புள்ளியில் கலந்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த சில ஒப்பந்ததாரர்களிடம், வீணாக இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்றும், யாருக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவும், அவ்வாறு கலந்துக்கொண்டு வைப்பு தொகையை மீண்டும் பெற வீணாக அலைய வேண்டியிருக்கும் என்றும் நகராட்சி சம்பந்தப்பட்ட ஒரு சிலரால் தெரிவிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்களை - ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தில் இருந்து காயல்பட்டணம்.காம் இணையதளம் பதிவிறக்கம் செய்தது. அதில் பல்வேறு முரண்பாடுகளும், குறைப்பாடுகளும் காண முடிந்தது. அது குறித்த விரிவான தகவல்கள், விரைவில் வெளியிடப்படும்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 2:45 pm / 6.8.2015] |