தாய்லாந்து நாட்டில், 17.07.2015 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) சார்பில் நடைபெற்ற பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, முந்திய நாள் இரவில், பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் - ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் - ஹாஃபிழ் சோனா அமீர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது.
நோன்புப் பெருநாளின் சிறப்புகள் குறித்து, மவ்லவீ ஹாஃபிழ் ஷாதுலீ ஃபாஸீ உரை நிகழ்த்த, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
பாங்காக் ப்ரில்லியண்ட் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் பெண்கள் பங்கேற்ற திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
பெருநாளன்று காலையில், பாங்காக் தமிழ் முஸ்லிம் பள்ளியில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. நிறைவில், அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிஃமாறிக்கொண்டனர். பின்னர் காயலர்கள் ஒன்றுகூடி படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பெருநாளன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் பாங்காக் தமிழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய பிரியாணி மற்றும் ப்ரெட் ஸ்வீட் - தமிழ் முஸ்லிம் சங்கத்தால் பரிமாறப்பட்டது. இதில் சுமார் 900 பேர் பங்கேற்றனர்.
பெருநாளன்று மாலையில், பாங்காக் லும்பினி பூங்காவில் அனைவரும் ஒன்றுகூடினர்.
இந்நிகழ்ச்சியில் - கடந்த 2 ஆண்டுகளாக பாங்காக் பள்ளியின் - தக்வா அமைப்பின் சார்பில் விவேகமாகவும், சிறப்புறவும் பணியாற்றிய செயற்குழு உறுப்பினர்களான கே.டீ.செய்யித் (ஜெம் பேலஸ்), வாவு ஏ.எஸ்.முஹம்மத் அலீ (ப்ரில்லியண்ட் ஜெம்ஸ்), எம்.எச்.அபுல் மஆலீ (சன் மூன் ஸ்டார்), என்.எஸ்.ஹனீஃபா (ஜம் ஜம் ஜெம்ஸ்) ஆகியோர் தக்வா சார்பில் பாராட்டப்பட்டனர்.
முஹம்மத் அலீ (சின்ஸியர் லங்கா) ஏற்பாட்டில், சிற்றுண்டியாக சுண்டல் - காஃபியும், இரவுணவாக இடியாப்ப பிரியாணியும் உண்டு மகிழ்ந்த பின், சிறிது நேரம் அரட்டையில் ஈடுபட்டவர்களாக மாறாத நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
பாங்காக்கிலிருந்து...
Soccer புகாரீ
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |