2015 - 2016ஆம் ஆண்டை, உடல் நல விழிப்புணர்வு ஆண்டாகக் கடைப்பிடிப்பதெனவும், அதற்கேற்ப நகர்நல செயல்திட்டங்களை வடிவமைத்திடவும், காயல் துபை நல மன்றம் (KADWA) சார்பில் திருச்செந்தூர் தோட்டத்தில் நடைபெற்ற இன்பச் சிற்றுலா ஒன்றுகூடலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமைப்பின் செயலாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் சார்பில், உள்ளூர் காயல்பட்டினத்தில் - மன்றத்தின் நகர்நலச் சேவைகளைச் செயல்படுத்திடுவதற்காக - துபையிலிருந்து விடைபெற்று நிரந்தரமாக காயல்பட்டினத்தில் வசிக்கும் ஆண்களை உறுப்பினர்களாகக் கொண்டு, “Kayal Dubai Welfare Association - KADWA” (காயல் துபை நல மன்றம்) எனும் பெயரில் தனியமைப்பு 25.05.2015 திங்கட்கிழமையன்று துவக்கப்பட்டது.
இவ்வமைப்பின் சார்பில், அதன் உறுப்பினர்கள் மற்றும் விடுமுறையில் காயல்பட்டினம் வந்திருக்கும் துபை காயல் நல மன்ற உறுப்பினர்கள் இணைந்து, 06.08.2015 வியாழக்கிழமையன்று அன்று, திருச்செந்தூர் தோட்டத்தில் இன்பச் சிற்றுலா சென்று வந்துள்ளனர்.
அன்று காலை 09.30 மணியளவில், காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளி அருகிலிருந்து வாகனம் புறப்பட்டு, 10.00 மணியளவில் நிகழ்விடம் சென்றடைந்தது. துவக்கமாக அனைவருக்கும் தேனீர் - சிற்றுண்டியும், காலை உணவும் பரிமாறப்பட்டது.
பின்னர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி துவங்கியது. துபை காயல் நல மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் துணி உமர் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
காயல் துபை நல மன்றத்தின் தலைவர் ராவன்னா அபுல் ஹஸன் - உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் “தூய்மை காயல்” கடற்கரைத் தூய்மை திட்டம் உள்ளிட்ட - அமைப்பின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து தனது தலைமையுரையில் விளக்கிப் பேசினார்.
துபை காயல் நல மன்ற தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, அமைப்பின் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.
இனி வருங்காலங்களில், KADWA அமைப்பின் சார்பில் நகருக்குத் தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் இயன்றளவுக்குச் செய்திட திட்டமுள்ளதாகக் கூறிய அவர், அதன் துவக்கமாக - நடப்பு 2015 – 2016ஆம் ஆண்டுகளை, “உடல் நல விழிப்புணர்வு” ஆண்டாக அறிவித்து, அதற்கான செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தலாம் என்று கூறினார்.
பின்னர், இதுகுறித்து பங்கேற்பாளர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அமைப்பில் அங்கத்தினராக அழைப்பு:
அமீரகத்தில் பணியாற்றிவிட்டு, ஊரிலிருக்கும் ஆண்களை உறுப்பினர்களாகக் கொண்டு, உள்ளூரில் நகர்நலப் பணிகளாற்றுவதற்காகத் துவக்கப்பட்டிருக்கும் காயல் துபை நல மன்றம் (KADWA) அமைப்பு குறித்து இயன்றளவுக்கு அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை தகவல் கிடைக்கப் பெறாத - தகுதியுள்ளவர்கள், இதையே அழைப்பாக ஏற்று, அமைப்பில் உறுப்பினராக நகர்நலப் பணிகளாற்ற இக்கூட்டம் அன்புடன் அழைக்கிறது. விருப்பமுள்ளோர், அமைப்பின் செயலாளரை, +91 99659 74253 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தீர்மானம் 2 - அடுத்த ஒன்றுகூடல்:
தற்போதைய ஒன்றுகூடல் நிகழ்ச்சி போல, நடப்பாண்டு டிசம்பர் மாதத்திலும் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. அதற்கான நேரம் மற்றும் இடம் குறித்து நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்.
தீர்மானம் 3 - உடல் நல விழிப்புணர்வு ஆண்டு:
துபை காயல் நல மன்றத் தலைவரின் ஆலோசனைப் படி, 2015 - 2016ஆம் ஆண்டை, உடல் நல விழிப்புணர்வு ஆண்டாகக் கடைப்பிடிப்பதெனவும், அதற்கான செயல்திட்டங்களை வடிவமைத்து, உரிய பருவத்திற்குள் செய்து முடிக்கவும், நகருக்குத் தேவையான நலப் பணிகளை இயன்றளவுக்கு அடுத்தடுத்து படிப்படியாகச் செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அனைவருக்கும் நெய்ச்சோறும், காயல்பட்டினம் பாரம்பரிய களறிக்கறி - கத்திரிக்காய் மாங்காங் மதிய உணவாகப் பரிமாறப்பட்டது. மாலையில் தேனீரும், சிறுகடியும் பரிமாறப்பட்டது. நிகழ்விடத்திலேயே ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகள் ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டன.
குளிப்பு, அதனைத் தொடர்ந்து உணவு, அதனைத் தொடர்ந்து அரட்டை என அன்றைய நாள் முழுக்க இன்பமயமாகக் கழிந்தது.
துஆவுடன் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில், KADWA உறுப்பினர்களும், அமீரகத்திலிருந்து விடுமுறையில் ஊர் வந்துள்ள - துபை காயல் நல மன்ற உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த ஒன்றுகூடலின் பயனாக, ஒரே இடத்தில் பணியாற்றிய அனைவரும் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதற்கு இடம் மற்றும் வாகன வசதி செய்து தந்த KADWA தலைவர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் ஹாஜி, ஒருங்கிணைப்புப் பணிகளை சிறப்புற செய்த செயலாளர் எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS) மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும், இதுபோன்று அடிக்கடி நடத்தப்பட வேண்டும் எனவும், இந்நிகழ்ச்சியின் பயனாக - நகர்நலப் பணிகளை இணைந்து செய்ய கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும், KADWA மகிழ்ச்சியுடன் கூறினர்.
குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
KADWA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |