காயல்பட்டினம் நகர்மன்றத்தின் துணைத் தலைவர் எஸ்.எம்.முஹைதீன் என்ற மும்பை முஹைதீன் ஆவார். இவர் - கடந்த 2013ம் ஆண்டு, காயல்பட்டினம் சதுக்கை தெருவை சார்ந்த சமூக ஆர்வலரும், நகரின் மூத்த அ.தி.மு.க. உறுப்பினருமான மொஹிதீன் சதக்கத்துல்லாஹ் என்ற மீசை மொஹிதீன் மீது ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.
அதில் - ஜூன் 26, 2013 அன்று மதியம் 1:30 மணியளவில், குத்துக்கல் தெருவில் உள்ள மொஹிதீன் பள்ளிக்கு அருகே தான் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்ததாகவும், அவ்வேளையில் மீசை மொஹிதீன் - தன்னை அவதூறாக பேசியதாகவும், தன்னை மிரட்டியதாகவும், அப்போது அங்கு 17வது வார்டு உறுப்பினர் அஜ்வாது இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் - இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 294 (அவதூறான பேச்சு) மற்றும் 506 (கொலை மிரட்டல்) ஆகியவை கீழ், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு (குற்றம் எண் 217/13), திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2.5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
வழக்கின் விசாரணையின் போது, இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு தான் செல்லவே இல்லை என்றும், இது பொய்யான குற்றச்சாட்டு என்றும், மீசை மொஹிதீன் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவுற்று, நேற்று (டிசம்பர் 1) - தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் - குற்றம்சாட்டப்பட்ட மீசை மொஹிதீன் நிரபராதி என்றும், அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|