மத்திய அரசின் திருத்தி அமைக்கப்பட்ட மின் திட்டத்தின் மூலம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் ரூ.9.8 கோடி மதிப்பில் 124 டிரான்ஸ்பார்மர்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி திருச்செந்தூர் சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில் 45, காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் 48, ஆறுமுகநேரி பேரூராட்சிப் பகுதியில் 31 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படுகின்றன. குறைந்த மின் அழுத்த பிரச்சினையை நிவர்த்தி செய்தல் மற்றும் புதிதாக மின் இணைப்புகளை வழங்குதல் ஆகிய இத்திட்டத்தின் மூலம் ஆறுமுகநேரி உப மின் நிலையத்தில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்களை அமைத்து மேம்படுத்துதல், காயல்பட்டினத்தில் புதிய துணை மின்நிலையம் அமைத்தல் ஆகிய பணிகளும் அடங்கும்.
ஆறுமுகநேரி பேரூராட்சிப் பகுதியில் இதுவரை 17 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று போலீஸ் நிலையம் அருகிலும், மேலத்தெருவிலும், மெயின்பஜார் பத்திரகாளி அம்மன் கோவில் அருகிலும் 3 டிரான்ஸ்பார்மர்கள் திறக்கப்பட்டன. மெயின்பஜாரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.பிரபாகரன் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி உதவி செயற்பொறியாளர் சே.சவுந்தர்ராஜன், மின் மேம்பாட்டு திட்ட உதவி செயற்பொறியாளர் எஸ்.சந்திரன், உதவி பொறியாளர் கே.பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் அ.கல்யாண சுந்தரம் புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார். உதவி செயற் பொறியாளர் எஸ்.வெங்கடேசன், பணியாளர்கள் மோகன், சீமான் சிவக்குமார், ச.கணேசன், வார்டு கவுன்சிலர் சி.முருகானந்தம், அரிமா சங்க நிர்வாகி பி.ஆதிசேஷன், குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன் |