டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம், இன்று காலையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், உறுப்பினர்களான ஏ.டீ.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகராட்சி மேலாளர் ஆகியோரும், புதுப்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.
அரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.உஸைர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ பிரார்த்தனை செய்து, சிறப்புரையாற்றினார்.
சமூக ஒற்றுமையை வலியுறுத்திப் பேசிய அவர், நகர்மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இன்று ஒன்றுபட்டு இயங்குவது போல, நகராட்சியின் அனைத்துப் பணிகளிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனிதனுக்குக் கொடுக்கப்படும் பொறுப்புகளும், பதவிகளும் அவர்களைச் சோதிப்பதற்காக இறைவன் கொடுத்த அமானிதம் என்றும், அதைத் தவறான முறையில் பயன்படுத்தினால், இறைவனின் விசாரணைக்கும், கடுமையான தண்டனைக்கும் ஆளாக நேரிடும் என்று கூறிய அவர், மக்கள் நலன் கருதி, ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புகளை உணர்ந்து, கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து, இனி எஞ்சியிருக்கும் காலத்தில் சிறப்புற பணியாற்றுமாறு காயல்பட்டினம் நகர்மன்றத்தின் தலைவர், உறுப்பினர்கள் அனைவரையும் தான் உரிமையுடன் கேட்டுக்கொள்வதாக அவர் பேசினார்.
மழைக்காலங்களில் ஏற்படும் வைரஸ் காய்ச்சல்கள், தொற்றுநோய்கள் குறித்தும், அவை வருமுன் காப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் பேசினார்.
பின்னர் நிலவேம்புக் குடிநீர் வினியோகம் துவங்கியது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், புதுப்பள்ளி ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.உஸைர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்து வினியோகத்தைத் துவக்கி வைத்தார்.
மார்க்க அறிஞர் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு, ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.உஸைர் வழங்கினார்.
தொடர்ந்து, முன்னிலை வகித்த நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும், வந்திருந்த பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர். பொதுமக்களுள் பலர், நிகழ்விடம் வர இயலாமல் தம் வீடுகளில் இருப்போருக்காக பாத்திரங்களிலும் நிலவேம்புக் குடிநீரைப் பெற்றுச் சென்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, 05ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ம.ஜஹாங்கீர், புதுப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செய்திருந்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |