காயல்பட்டினம் நகராட்சியின் நவம்பர் மாத சாதாரண கூட்டம், நவம்பர் 30 அன்று நடைபெற்றது. 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமளி காரணமாக நிறுத்தப்பட்ட இக்கூட்டத்தைத் தொடர்ந்து, எஞ்சிய பொருட்கள் குறித்து விவாதித்து தீர்மானமியற்றுவதற்காக, டிசம்பர் 04 அன்று கூட்டத்தை நடத்த - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் பெருவாரியான உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
டிசம்பர் 04 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) கூட்டம் தொடரும் என்ற தகவலை - நகர்மன்றத் தலைவரும், சில உறுப்பினர்களும் ஆணையரிடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, நேற்று காயல்பட்டினம் புதுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், மேலாளர் அறிவுச் செல்வன் ஆகியோரிடமும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இவ்வளவும் இருக்க, நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர்களும் நேற்று மாலை 03 மணிக்கு நகர்மன்றத்திற்குச் சென்றபோது, கூட்டத்திற்கு எந்த ஏற்பாட்டையும் ஆணையர் செய்யவில்லை. இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் இதர அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம்” என்றும், “மினிட்ஸ் புத்தகத்தைக் கொடுக்க வேண்டாம்” என்றும் ஆணையர் தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஆணையரிடம் கேள்வியெழுப்ப நகர்மன்றத் தலைவர் அவரின் அறைக்குச் செல்ல முற்பட்டபோது, கூட்டத்திற்காக இருக்கைகளில் நகர்மன்ற உறுப்பினர்களும், பார்வையாளர்களாக பொதுமக்களும் அமர்ந்திருக்க, அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே ஆணையர் நகராட்சி வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.
பிறகு நகர்மன்றத் தலைவர், நகராட்சி அதிகாரி ஒருவர் வசம் இருந்த மினிட்ஸ் புத்தகத்தை, அவதிக்கிடையில் பெற்று, கூட்டத்தை நடத்தினார். பந்தல் எதுவும் அமைக்கப்படாததால், நகராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த வெளியில், மரத்தடியில் - காகங்களின் “எச்ச மழை”க்கிடையே கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
நகர்மன்றத் தலைவரிடம் மினிட்ஸ் புத்தகத்தை வழங்கிய அதிகாரி மீதி நடவடிக்கை எடுக்கப்போவதாக ஆணையர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆணையரின் இந்நடவடிக்கைகள் குறித்து, பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஒரு சிலர், ஆணையர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாத நகர்மன்றக் கூட்டத்தை நடத்திடுவதற்காக, அஜெண்டா விநியோகம் செய்ய, ஆணையரை - மாதத் துவக்கத்திலேயே நகர்மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இருந்தும் அவர் அஜெண்டாவை விநியோகம் செய்யாமல் இருந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு உறுப்பினருக்கும், உயரதிகாரிகளுக்கும் - நகர்மன்றத் தலைவர், பதிவு தபால் மூலம் நவம்பர் மாதக் கூட்டப் பொருளை அனுப்பியதன் அடிப்படையில், இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தின் அசைபடப் பதிவுகளை உள்ளடக்கிய விரிவான செய்தி விரைவில் இத்தளத்தில் வெளியிடப்படும்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |