தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக முஸ்லிம் சமுதாய அமைப்புகள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்திலும் சமுதாய மற்றும் பொதுநல அமைப்புகள் நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வமைப்பினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, உதவித்தொகை மற்றும் பொருட்களை முறைப்படி வினியோகிக்க வேண்டும் என்று கருதிய - அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள், அதற்கான அவசரக் கூட்டத்தை, இன்று (05.12.2015. சனிக்கிழமை) 20.00 மணியளவில், காயல்பட்டினம் துஃபைல் காம்ப்ளக்ஸ் கேளரங்கில் நடத்தியது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், SDPI, ஐக்கிய சமாதானப் பேரவை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை, ஜாவியா பைத்துல்மால், ஐ.ஐ.எம்.பைத்துல்மால் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பிரபு ஹபீப் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராஅத்தைத் தொடர்ந்து, ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் வரவேற்றுப் பேசினார். எம்.எல்.ஷேக்னா லெப்பை, வி.டி.என்.அன்ஸாரீ, வி.ஐ.புகாரீ ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து அறிமுகவுரையாற்றினர்.
இக்கூட்டம், மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட்டப்பட்டமையால், கவனக்குறைவாக யாரேனும் அழைக்கப்படாமல் விடுபட்டிருப்பின் பொறுத்துக்கொள்ளுமாறும், அவர்களும் இணைந்து பணியாற்ற வருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
பின்னர், கடலூர் மற்றும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைந்த முறையில் திரட்டி வினியோகித்தல் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - தற்காலிக கூட்டமைப்பு துவக்கம்:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, பொதுநல அமைப்புகள் தனிப்பட்ட முறையில் பொருட்களைத் திரட்டுவதை விட, ஒருங்கிணைந்த முறையில் திரட்டினால், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதோடு, திரட்டப்படும் பொருட்களும் முறையாக வினியோகிக்க வாய்ப்பு ஏற்படும் என்ற அடிப்படையில், இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளின் கூட்டமைப்பாக, “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு” எனும் பெயரில் தற்காலிக அமைப்பைத் துவக்கி செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - நிர்வாகிகள் தேர்வு:
காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பிற்கு, பின்வருமாறு நிர்வாகிகளை இக்கூட்டம் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது:-
தலைவர்:
எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (எ) ஹாஜி காக்கா
துணைத்தலைவர்கள்:
(1) எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ
(2) ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான்
(3) ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத்
ஒருங்கிணைப்பாளர்கள்:
(1) எம்.எல்.ஷேக்னா லெப்பை
(2) வி.டி.என்.அன்ஸாரீ
பொருளாளர்கள்:
(1) வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(2) ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான்
செயலாளர்கள்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ (ஐ.ச.பேரவை)
(2) பிரபு ஹபீப் முஹம்மத் [PHM] (அரிமா சங்கம்)
(3) ‘காவல்துறை’ ஷேக் அப்துல் காதிர் (ஜாவியா பைத்துல்மால்)
(4) எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் (தமுமுக)
(5) அபூதாஹிர் (ததஜ)
(6) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (இ.யூ.முஸ்லிம் லீக்)
(7) எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் (காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்)
உலக காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளர்கள்:
(1) எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (தக்வா)
(2) எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்)
தீர்மானம் 3 - நிவாரணப் பொருட்களைத் திரட்டல்:
“காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் பிரசுரத்தை 06.12.2015. ஞாயிற்றுக்கிழமைக்குள் அச்சிட்டு, நகர் முழுக்க வினியோகிக்கவும், பெரியளவிலான வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்து, அனைத்து அமைப்பினரும் ஒன்றாகச் சென்று பொதுமக்களிடம் நிதி, நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பொருட்களை விட நிதியைத் திரட்டும் பணியில் கூடுதல் கவனம் செலுத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 4 - சென்னையில் KCGC அமைப்புடன் தொடர்புகொள்ளல்:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு செய்து வரும் “காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் - KCGC” அமைப்புடன் தொடர்புகொண்டு, சென்னைக்கான நிவாரணப் பொருட்களையும், தொகையையும் அவர்கள் மூலமாக வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - துவக்க நிதியளித்த பைத்துல்மாலுக்கு நன்றி:
நிவாரண நிதி சேகரிப்பைத் துவக்கும் வகையில், கூட்டத்தின்போதே 50 ஆயிரத்து ஒரு ரூபாய் நன்கொடையளிப்பதாக அறிவித்த, காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகத்திற்கு, இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைத்து அமைப்புகளும் இதுபோன்று தாராள நிதியைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 - பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
இச்செய்தியைப் படிக்கும் உலக காயலர்கள் அனைவரும், தத்தம் குடும்பத்தினருக்கு இத்தகவலை விளக்கி, உணவு - உடை ஆகியவற்றை விட, நிதி நன்கொடையை அதிகளவில் தரச் செய்யுமாறு இக்கூட்டம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டீ.ஏ.எஸ்.முஹம்ம்த அபூபக்கர் நன்றி கூற, ‘ஜப்பான்’ ஸுலைமானின் கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ் |