உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
சமுதாய அமைப்புகள் சிலவற்றின் சார்பில் துவக்கத்தில் ஆண்டுதோறும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதனடிப்படையில் - காயல்பட்டினம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டு வந்தன.
அந்த வழமைப்படி, இன்று டிசம்பர் 06ஆம் நாளை முன்னிட்டு காயல்பட்டினம் பிரதான வீதி, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, நெசவுத் தெரு, பேருந்து நிலைய வணிக வளாகம், எல்.எஃப்.வீதி உள்ளிட்ட வணிக வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பரிமார் தெரு மீன் சந்தை அடைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்கடைகள் சில திறந்துள்ளன. தனியார் வேன் - கார் - ஆட்டோ வாகனங்கள் இயங்கவில்லை. பாதுகாப்பிற்காக ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவுமில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காயல்பட்டினத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கு வார விடுமுறை. எனினும், ஞாயிறு அன்றும் திறக்கும் பல கடைகள், இன்று டிசம்பர் 06 - பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் என்பதால் அடைக்கப்பட்டிருந்தன. காட்சிகள் வருமாறு:-
எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் சார்பில், இன்று மாலையில் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, கண்டன உரையாற்றவுள்ளனர்.
கடந்தாண்டு (2014) பாபரி மஸ்ஜித் இடிப்பு நாளன்று நகரில் நடைபெற்ற கடையடைப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[எழுத்துப்பிழை திருத்தப்பட்டது @ 22:35 / 07.12.2015]
|