சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - KCGC அமைப்பின் வெள்ள நிவாரணக் குழுவால், சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, அதன் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்த உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களையும் ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டாவது கூட்டம்:
குழுவின் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (06.12.2015. ஞாயிற்றுக்கிழமை) 11.00 மணி முதல், 13.30 மணி வரை, சென்னை எழும்பூரிலுள்ள ஹோட்டல் அசோகாவில், எஸ்.இப்னு ஸஊத் தலைமையில் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
ஆடிட்டர் ரிஃபாய், குளம் இப்றாஹீம், அப்துஸ் ஸமத், எம்.எம்.அஹ்மத், எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், குளம் முஹம்மத் தம்பி, சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், எம்.என்.இஃப்ஹாம் ஷாதுலீ, எம்.எம்.செய்யித் இப்றாஹீம், தங்கள் ஹபீப், கிதுரு முஹ்யித்தீன், ‘நெட்காம்’ புகாரீ, ‘Bean N Bread’ அஹ்மத், எம்.ஐ.ஸதக்கத்துல்லாஹ், பீ.ஏ.கே.சுலைமான் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன:-
தீர்மானம் 1 - காயல்பட்டினம் வெள்ள நிவாரணக் குழுவிற்கு நன்றி:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை, KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் மூலம் செய்திட தீர்மானித்துள்ள “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் குழு”விற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - ஒவ்வொரு நாளும் கலந்தாலோசனை:
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிமாற்றம் செய்திட, ஒவ்வொரு நாளும் 18.30 மணி முதல் 19.30 மணி வரை, சென்னை எழும்பூரிலுள்ள ஹோட்டல் அசோகாவில் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - கூட்டங்களில் ஆர்வலர்கள் பங்கேற்கலாம்:
அன்றாடம் நடத்தப்படும் - KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், சென்னையிலிருக்கும் உலக காயல் நல மன்ற அங்கத்தினர், இத்திட்டத்தில் ஆர்வமுள்ள தனிநபர்கள் அனைவரும் தம்மை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு, கலந்துகொள்ளலாம்.
தீர்மானம் 4 - நன்கொடை சேகரிப்பு முறைகள்:
வங்கிக் கணக்கு மூலம் நன்கொடை செலுத்த விரும்புவோருக்காக, வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் நேரடியாக பங்களிப்பு செய்ய விரும்புவோர் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் வசமும், காயல்பட்டினத்தில் நேரடியாக பங்களிக்க விரும்புவோர் எல்.டீ.சித்தீக் வசமும் பங்களிப்புத் தொகையை வழங்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - தனிக் குழுக்கள்:
(1) நிதிநிலை கட்டமைப்பு மற்றும் பொருட்கள் கொள்முதலுக்காக, Materials & Budget,
(2) அன்றாடப் பணிகளைத் திட்டமிடுவதற்காக, Planning And Logistics,
(3) பாதிக்கப்பட்டோருக்கு பொருட்களை வினியோகிப்பதற்காக Distribution
என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தீர்மானம் 6 - முதற்கட்ட கொள்முதல் பொருட்கள்:
முதற்கட்டமாக,
1000 நைட்டிகள்,
1000 போர்வைகள்,
500 பாய்கள்,
1000 டீ-ஷர்ட்டுகள்,
1000 கைலிகள்,
500 கொசுவர்த்திச் சுருள்கள்,
2000 மெழுகுவர்த்திகள்,
10000 தண்ணீர் பாக்கெட்டுகள்,
500 ப்ரெட் ரொட்டிகள்,
1000 பிஸ்கட் பாக்கெட்டுகள்,
1000 ரஸ்க் பாக்கெட்டுகள்
ஆகிய பொருட்கள் ஈரோட்டில் கொள்முதல் செய்யப்படுகிறது. பொருட்கள் அங்கிருந்து சரக்கு வாகனம் மூலம் நாளை சென்னைக்கு வந்து சேரும். இப்பொருட்களுக்கான மொத்த செலவு மதிப்பு சுமார் 6 முதல் 7 லட்சம் வரையிலாகும்.
தீர்மானம் 7 - நிவாரணப் பொதி:
முதற்கட்ட நிவாரணப் உதவிகள் (உணவு) ஏற்கனவே வினியோகிக்கப்பட்டுவிட்டது.
மழை வெள்ளத்தால் உடமைகள் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, குடியிருக்க வழியின்றி தவிக்கும் பொதுமக்களுக்காக, அடுத்த சில நாட்களுக்குத் தேவையான - அரிசி, பருப்பு, பால் மாவு, தேயிலைத் தூள் உள்ளிட்ட - 750 ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்களை - அவர்களுக்கு வழங்கப்படும் உடைகளுடன் (Dresses) இணைத்து, ஒரு குடும்பத்திற்கு ஒரு பொதி என்ற விகிதத்தில் வினியோகிக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 8 - வினியோக நாட்கள்:
நடப்பு டிசம்பர் 07, 08 ஆகிய நாட்களில் (திங்கள், செவ்வாய்) இப்பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு முறைப்படி வினியோகிக்கப்படும்.
தீர்மானம் 9 - தாராள நிதி தேவை:
சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பல தொண்டு நிறுவனங்களும் களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களின் அனுசரணையுடன் - KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவும் தன் பங்கிற்கு இப்பணியைச் செய்கிறது.
இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும், பாதிக்கப்பட்டோருள் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கே செல்லும் வகையில் உள்ளது. எந்தளவுக்கு நிதி பெறப்படுகிறதோ அந்தளவுக்கு, பொருட்கள் வழங்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் நிலை உள்ளதால், பொதுமக்கள் போர்க்கால அடிப்படையில் இவ்வகைக்காக தாராளமாக நிதியளித்து உதவிட இக்கூட்டம் அன்புடன் வேண்டுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமையாசிரியை பாராட்டு:
ஹோட்டலில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த மேசைக்கு அடுத்த மேசையில், பணி நிறைவு பற்ற பள்ளி தலைமையாசிரியை ரஸாரியோ சாமுவேல், அவரது கணவர் சாமுவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களான அவர்கள், கூட்ட நிகழ்வுகளை முழுக் கவனத்துடன் அவதானித்து, நிறைவில் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்து, வாயார வாழ்த்திச் சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் முதல் கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |