கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதியைத் தாராளமாகத் தந்துதவுமாறு, காயல்பட்டினம் நகர பொதுமக்களை, “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு” கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன.
இதற்காக, காயல்பட்டினத்தில் தொண்டு நிறுவனங்கள் தனித்தனியாக களமிறங்கிய நிலையில், அவர்களை ஒருங்கிணைத்து, “காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரண கூட்டமைப்பு” எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டு, பணிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் நிவாரண நிதியைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டு, இந்த நான்கு வாகனங்களுக்கும் தனித்தனி குழு நியமிக்கப்பட்டது.
நிவாரணப் பணிகளைத் திட்டமிட்ட படி செய்திடுவதற்காக, பொதுமக்களிடமிருந்து நிதியைச் சேகரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பது என்றும், உடைகள் உள்ளிட்ட பொருட்களைப் பெறுவதில், தகுதியானவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்செய்தியைப் படிக்கும் உலகளாவிய காயலர்கள், தத்தம் இல்லத்தாருக்குத் தகவல் தெரிவித்து, நிவாரண உதவிகளைச் சேகரிக்க வரும் இக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்யுமாறும், உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் இத்தகவலை எடுத்துக் கூறி, அவர்களையும் இப்புனிதப் பணியில் பங்கெடுக்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பயனாக, நமக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் கருணையுள்ள அல்லாஹ் காப்பாற்றியருள்வானாக! இம்முயற்சியில் இணைந்து பணியாற்றும் / பங்களிக்கும் யாவருக்கும் ஈருலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |