கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, காயல்பட்டினம் ஜாவியாவின் இஃக்வானுஷ் ஷாதுலிய்யா சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்படவுள்ளதோடு, களப்பணியாற்றவும் 9 பேர் கொண்ட குழு புறப்படுகிறது. விபரம் வருமாறு:-
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன. அந்த வரிசையில், காயல்பட்டினம் ஜாவியாவின் இஃக்வானுஷ் ஷாதுலிய்யா குழுமம் சார்பில், பின்வரும் பட்டியல் படி, நிவாரணப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பட்டியலிலுள்ள ஆடைகளுள் பெரும்பாலானவை புதிதாக வாங்கப்பட்டவை என்றும், நகரில் பெறப்பட்ட ஆடைகளுள், புத்தாடை போன்று நல்ல நிலையிலிருக்கும் ஆடைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவையும் நிவாரணப் பொருட்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் இப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2 வாடகை சரக்குந்து வாகனங்களில், 9 பேர் கொண்ட இளைஞர் குழு களப்பணியாற்றும் நோக்குடன் கடலூர் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவி்த்தனர்.
அதன்படி, இன்று (07.12.2015. திங்கட்கிழமை) அதிகாலையில், ஜாவியா அரபிக்கல்லூரியின் முன் பகுதியிலிருந்து நிவாரணப் பொருட்களை உள்ளடக்கிய இரண்டு வாகனங்களும், 9 பேர் அடங்கிய தன்னார்வச் சேவகர்களும் கடலூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |