தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன.
இதற்காக, காயல்பட்டினத்தில் தொண்டு நிறுவனங்கள் தனித்தனியாக களமிறங்கிய நிலையில், அவர்களை ஒருங்கிணைத்து, “காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரண கூட்டமைப்பு” எனும் பெயரில் தற்காலிக அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தில், நேற்று (06.12.2015. ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில் கூடியது.
சென்னையில் மழை வெள்ள நிவாரண உதவிகளுக்காக காயல்பட்டினம் மக்கள் ஒருங்கிணைந்த முறையில் - “KCGC மழை வெள்ள நிவாரணக் குழு” மூலமாக சிறப்புற செய்து வருகின்றனர். அதே போன்ற ஒருங்கிணைப்புடன் கடலூரிலும் நிவாரணப் பணிகளாற்றிட வேண்டும் இக்கூட்டத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்டது.
காயல்பட்டினத்திலிருந்து சேகரிக்கப்படும் நிவாரணத் தொகைகள் மற்றும் பொருட்களை, கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகித்திட கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதாயின், அங்கு இயங்கி வரும் ‘KCGC மழை வெள்ள நிவாரணக் குழு” மூலம் செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட படி செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள தனவந்தர்களைச் சந்திக்க, பெரியவர்களைக் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. நிவாரண நிதி சேகரிப்பு குறித்த தகவல்களடங்கிய பிரசுரம் வெளியானதும், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் நிவாரணப் பொருட்களைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டு, இந்த நான்கு வாகனங்களுக்கும் தனித்தனி குழு நியமிக்கப்பட்டது.
நிவாரணப் பணிகளைத் திட்டமிட்ட படி செய்திடுவதற்காக, பொதுமக்களிடமிருந்து நிதியைச் சேகரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிப்பது என்றும், உடைகள் உள்ளிட்ட பொருட்களைப் பெறுவதில், தகுதியானவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இச்செய்தியைப் படிக்கும் உலகளாவிய காயலர்கள், தத்தம் இல்லத்தாருக்குத் தகவல் தெரிவித்து, நிவாரண உதவிகளைச் சேகரிக்க வரும் இக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்யுமாறு, கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நன்றியுரைக்குப் பின், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |