கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதி மற்றும் பொருட்களைத் திரட்டுவதற்காக நகர்வலம் வருகையில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளைத் தராமல் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு” கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நகர்வலமாகச் சென்று, பொதுமக்களிடம் நிவாரண நிதியைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நகர்வலத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில், மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ முன்னிலையில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாளை (டிசம்பர் 08) நகர்வலமாகச் சென்று நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்து, செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ், நாளை காலை 10.00 மணிக்கு நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்காக - “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் குழு” அங்கத்தினர் ஒரு பிரிவுக்கு 2 வாகனம் என மொத்தம் 4 வாகனங்களில் இரண்டு பிரிவுகளாக, அனைத்து தெருக்களுக்கும் வருகை தருவர்.
நிவாரணப் பணிகளைத் திட்டமிட்டு செய்வதற்கு நிதி பங்களிப்பே முதன்மையானது என்பதால், அதை நாடியே குழுவினர் உங்களிடம் வருவர். ஒவ்வொரு வீட்டிலிருந்தும், அவரவர் தகுதிக்கேற்ப பங்களிப்புகள் இருப்பது நலம். காயல்பட்டினத்திலிருந்து வழங்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களில், நகரின் ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
கடலூரில் நிவாரணப் பணிகளைச் செய்து வரும் குழுவினரை இன்று நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, பாக்கெட்டுகளில் உள்ள உணவுப் பொருட்கள், பாத்திரங்கள் ஆகியன மிக முக்கியமாகவும், பெருமளவிலும் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட ஆடைகளை தயவுசெய்து தர வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“நிவாரணப் பணிகளை வழங்குவது, அவர்கள் இல்லாதவர்கள் என்பதற்காக அல்ல! இழந்தவர்கள் என்பதற்காகவே!!” என்ற வாசகம் அனைவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது.
எனவே, நல்ல நிலையில் வாழ்ந்து வந்த அவர்கள் ஏதோ இன்று இறைவன் நாட்டப்படி இந்நிலைக்கு ஆளாக நேர்ந்துள்ளது. அவர்களின் கவுரவம், கண்ணியத்திற்கு சிறிதும் பங்கம் ஏற்படாவண்ணம் நமது நிவாரணப் பணிகள் அமைய வேண்டியது அவசியம்.
எனவே, பயன்படுத்தப்பட்ட ஆடைகளை தயவுசெய்து யாரும் தர வேண்டாம் என்றும், பணம், பாத்திரம், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பண்டங்கள் ஆகியனவே தேவைப்படுவதால், அவற்றை மட்டுமே தந்துதவுமாறும் தங்கள் யாவரையும் உரிமையுடன் வேண்டுகிறோம். முறையாக இஸ்திரி செய்து மடித்துத் தரப்படும் - புத்தாடைக்கு ஒப்பான ஆடைகள் பரிசீலனைக்குப் பின் பெற்றுக்கொள்ளப்படும்.
எனவே, இச்செய்தியைப் படிக்கும் உலகளாவிய காயலர்கள், தத்தம் இல்லத்தாருக்குத் தகவல் தெரிவித்து, நிவாரண உதவிகளைச் சேகரிக்க வரும் இக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பளிக்கச் செய்யுமாறும், உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் இத்தகவலை எடுத்துக் கூறி, அவர்களையும் இப்புனிதப் பணியில் பங்கெடுக்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் துயர் நீக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் பயனாக, நமக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் கருணையுள்ள அல்லாஹ் காப்பாற்றியருள்வானாக! இம்முயற்சியில் இணைந்து பணியாற்றும் / பங்களிக்கும் யாவருக்கும் ஈருலகிலும் நிறைவான நற்கூலிகளை வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |