இந்திய வானிலை மையம் - தூத்துக்குடி மாவட்டத்தில், டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில், கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் - சில முன்னேற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவ மழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் 62 வரவேற்பு மைய்யங்கள் அமைக்கப்பட்டிருந்ததில் தற்போது 6 வரவேற்பு மையங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 19 பேரூராட்சிகளில் தலா ஒரு வரவேற்பு மையமும், 12 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2, நகராட்சியில் தலா 2 மற்றும் தூத்துக்குடி நகராட்சிப் பகுதியில் 15 முகாம்கள் ஆக மொத்தம் 62 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
இது தவிர கடலோர கிராமங்களான காயல்பட்டினம், சிலுவைப்பட்டி, தருவைக்குளம், வேம்பார் மற்றும் கீழ்த் திருசெந்தூர் ஆகிய 5 கிராமங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் (MULTIPURPOSE EVACUATION CENTRES) தற்பொழுது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவும்,
பெரியதாழை, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், குலசேகரபட்டினம், மணப்பாடு, பழைய காயல், பட்டினமருதூர், தருவைக்குளம், வேப்பலோடை, கீழ அரசடி, வைப்பார், பெரியசாமிபுரம், பச்சையாபுரம், முள்ளக்காடு (பகுதி 1) மற்றும் முள்ளக்காடு (பகுதி 2), தூத்துக்குடி மற்றும் மாப்பிள்ளையூரணி ஆகிய 17 கடற்கரை கிராமங்களில் புதியதாக வரவேற்பு மையங்கள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு 8.12.2015 முதல் 22 கடலோர கிராமங்களில் அவை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மாவட்டத்திலுள்ள வரவேற்பு மையங்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள், அவர்களது தொலைபேசி எண்கள் குறித்த விபரங்கள் மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in இல் What's New பகுதியிலும், Collector, Thoothukudi District முகநூலிலும் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், 10.12.2015 மற்றும் 11.12.2015 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான கன மழை பெய்வதற்கான (ISOLATED HEAVY RAIN) வாய்ப்புகள் இருக்குமென்று தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு அவ்வாறு கனமழை பெய்து வெள்ளம் சூழக்கூடிய நேரங்களில், பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள வரவேற்பு மையங்களை பயன்படுத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்மையங்களில் குறைந்தது 1000 நபர்களுக்கு உணவு சமைத்து வழங்கவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, ஜெனரேட்டர் வசதி ஆகியவனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மையங்களை பயன்படுத்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மீனவர்கள், மீன் வளத்துறை மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்படும், எச்சரிக்கை அறிவிப்பின்படி செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவசர காலங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 யை பயன்படுத்தி தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். |