சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - KCGC அமைப்பின் வெள்ள நிவாரணக் குழுவின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணப் பொருட்களை வினியோகத்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில், இன்று வினியோகமும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்த உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களையும் ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூன்றாவது கூட்டம்:
குழுவின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று (08.12.2015. திங்கட்கிழமை) 18.30 மணி முதல், 21.30 மணி வரை, சென்னை கீரீம்ஸ் சாலையிலுள்ள அலுவலகத்தில், குளம் முஹம்மத் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
ஆடிட்டர் ரிஃபாய், அப்துஸ் ஸமத், எஸ்.இப்னு ஸஊத், எம்.எம்.அஹ்மத், குளம் முஹம்மத் தம்பி, சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், எம்.எம்.செய்யித் இப்றாஹீம், ‘நெட்காம்’ புகாரீ, கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிவாரணப் பொருட்களை ஈரோட்டில் கொள்முதல் செய்வதற்காக தனது சொந்த அலுவல்களை ஒதுக்க வைத்துவிட்டு, சுமார் 4 நாட்கள் இதற்காகப் பணியாற்றியதோடு, தற்சமயம் சென்னையில் KCGC வெள்ள நிவாரணக் குழுவினருடன் 3 நாட்கள் வரை தங்கி, வினியோக ஏற்பாடுகளை இணைந்து செய்து வரும் கரூர் இம்தியாஸ் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மொத்தம் பெறப்பட்ட 10 லட்சம் ரூபாய் தொகைக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதோடு, அவற்றை - ஆடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி - முறைப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பொதி என்ற அடிப்படையில் பொதியிடத் தீர்மானிக்கப்பட்டது.
வினியோகப் பொறுப்புக் குழு:
நிவாரணப் பொருட்கள் வினியோகத்தின்போது, இடைஞ்சல்களை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் தேவையற்ற தலையீடுகள், வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியிலேயே சேரிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து இடைஞ்சல் தரும் நிலை ஆகியவை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதோடு, இத்தடைகளைத் தாண்டி, பொருட்களை - உரியவர்களுக்கு முறைப்படி கொண்டு சேர்ப்பதற்காக, பின்வருமாறு 8 பகுதிகளுக்கு தனித்தனி பொறுப்பாளர்களைக் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது:-
(1) சூளைமேடு - கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
(2) புளியந்தோப்பு - ஜான் பாஷா
(3) சிஐடீ நகர் – கே.எம்.டீ.முஹம்மத் தம்பி
(4) அத்திப்பேட்டை – அப்துஸ் ஸமத்
(5) ஜாஃபர்கான்பேட்டை (சூளைபள்ளம்) - கே.எம்.டீ.முஹம்மத் தம்பி
(6) ஊரப்பாக்கம் - இம்தியாஸ்
(7) எருக்கஞ்சேரி - எஸ்.இப்னு ஸஊத்
(8) அயனாவரம் பேருந்து நிலையம் - அப்துஸ் ஸமத்
வினியோகம்:
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட 10 லட்சம் ரூபாய் அனுசரணைத் தொகை மொத்தத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி, 20 தன்னார்வலர்களைக் கொண்டு பொதியிடப்பட்டது.
அப்பணி நிறைவுற்றதும், சுமார் 30 சதவிகித நிவாரண பொதிப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எஞ்சிய பொருட்களை நாளை (டிசம்பர் 09 புதன்கிழமை) முதல் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது - இன்ஷாஅல்லாஹ்!
அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதிகளில், சிற்சிறு இடைஞ்சல்கள் இருந்தபோதிலும் – பொறுப்பாளர்கள் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டோரிடம் முறைப்படி சேர்ப்பித்தனர்.
இனியும் இப்பணிகளுக்காக யாரேனும் அனுசரணையளித்தால், பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகமும் தொடர்ந்து நடைபெறும் என்பதை இதன்மூலம் அன்புடன் அறியத் தருகிறோம்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று, “காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) துவக்கத்தில் தனித்தே திட்டமிட்டிருந்தது. ஆனால், அதன் ஒருங்கிணைப்புப் பணிகளின் மீது நம்பிக்கை - நல்லெண்ணம் கொண்டதன் அடிப்படையில் உலக காயல் நல மன்றங்களும், தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து தொகைகளைத் தந்தாலேயே இவ்வளவு கொள்முதலும், வினியோகமும் இறையருளால் சாத்தியமாயிற்று.
இவ்வகைக்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் ஈருலக நற்பேறுகளையும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |