தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தாராளமாக நிதி தந்து உதவுமாறு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் புதுப்பள்ளியில், நேற்று (04.12.2015. வெள்ளிக்கிழமை) காலையில் நடைபெற்ற நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில், பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ இவ்வேண்டுகோளை முன்வைத்து, விரும்புவோர் - ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மவ்லவீ ஏ.கே.அபூமன்ஸூர் மஹ்ழரீ வசம் நிதியளித்து உதவலாம் என்றார். தன்னிடம் ஒப்படைத்தாலும் அதற்கான பொறுப்பாளர்களிடம் சேர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
அதுபோல, நேற்று மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ உரையில் - கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ - தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் இவ்வேண்டுகோளை அறிவித்தார். |