சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு KCGC மழை வெள்ள நிவாரணக் குழு மூலம் உதவிகள் வழங்கிய அனைவருக்கும், குழுவின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, KCGC செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், தன்முயற்சியிலும் - தாமாக முன்வந்து ஆர்வமுடன் பங்களிப்புச் செய்த அனைத்து காயல் நல மன்றங்கள், தன்னார்வலர்களின் உதவிகளைக் கொண்டும், நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு, பணிகள் நிறைவுறும் நிலையிலுள்ளது.
கணக்குகளைச் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பதற்கான - குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம், 14.12.2015 திங்கட்கிழமையன்று 19.30 மணி முதல் 21.30 மணி வரை, KCGC செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிஃபாய் தலைமையில், சென்னை - சேத்துப்பட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில் இதுவரை செய்து முடிக்கப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்து கூட்டத்தில் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - உதவிய உள்ளங்களுக்கு நன்றி:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு் தேவையான நிதியைத் தாமாக முன்வந்து தாராளமாக அனுப்பித்தந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களுடன் இணைந்து உதவி செய்த அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும், தன்னார்வம் கொண்ட நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் தங்கள் யாவரின் வாழ்விலும் எல்லா நல - வளங்களையும் தந்தருள இக்கூட்டம் மனதாப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - வரவு செலவு கணக்கறிக்கை:
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவால் இதுவரை பெறப்பட்ட அனைத்து நிதிகள், செலவு விபரங்கள் அடங்கிய வரவு - செலவு கணக்கறிக்கை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டம் அதற்கு ஒரு மனதாக ஒப்புதலளித்தது.
தீர்மானம் 3 - அனைவருக்கும் முறைப்படி தகவல்:
நிவாரண உதவிகளுக்காக பெறப்பட்ட நிதி, பொருட்கள் மற்றும் அவை பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து, அவரவர் மின்னஞ்சல் முகவரிகளுக்கு முறைப்படி தகவல் அனுப்பி வைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - பாதிக்கப்பட்டோர் மீள்குடியேற்றப் பணிகளுக்காக Whatsapp குழுமம்:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வினியோகிப்பதற்காக இதுவரை செயல்பட்டு வரும் KCGC Flood Relief Fund என்ற Whatsapp குழுமம், இன்னும் சில நாட்களில் கலைக்கப்பட்டுவிடும்.
பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தம் வீடுகளில் குடியேறத் தேவையான உதவிகளை இயன்றளவு செய்திடுவதற்காக, KCGC – Flood Rehabilitation எனும் பெயரில், Whatsappஇல் புதிய குழுமத்தைத் துவக்கி, பணிகளைத் துவக்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - 100 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்:
நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியமர்விற்கான பணிகள் துவக்கப்பட வேண்டியுள்ளது. இன்றளவும் வேலை வாய்ப்புகளின்றியும், தொழில் நிறுவனங்களை மீண்டும் துவக்க வழியின்றியும் தவிப்போருள் 100 பேரை துவக்கமாகக் கண்டறிந்து, அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிடவும்,
இதற்கான அனுசரணைத் தொகையை, தன்னார்வலர்களிடமிருந்து - அவர்களின் ஸதக்கா, ஜகாத் வகைகளிலிருந்து பெற்று, தனித்தனியே முறைப்படி கணக்குகளைப் பராமரித்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழுவிடம் கோரிக்கை:
காயல்பட்டினத்தில், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து இயங்கி வரும் தற்காலிக அமைப்பான காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழுவிடமிருந்து, சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியமர்வுக்குத் தேவையான அனுசரணைத் தொகையைப் பெறுவதற்கு முறைப்படி கோரிக்கை வைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, கஃப்பாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில்,
எஸ்.இப்னு ஸஊத்,
குளம் முஹம்மத் இப்றாஹீம்,
பீ.ஏ.கே.சுலைமான்,
எம்.எம்.அஹ்மத்,
வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல்,
நஸீம் பாபு,
‘நெட்காம்’ புகாரீ
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
‘மாஸ் கம்யூனிகேஷன்’ கே.எம்.டீ.முஹம்மத் தம்பி,
குளம் முஹம்மத் தம்பி,
எம்.எம்.செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ்,
கே.கே.எஸ்.ஸாலிஹ்,
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |