கடலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண நிதியாக காயல்பட்டினம் மக்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளதாகவும், புத்தாடைகள் - பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் என பல்லாயிரக்கணக்கில் ஆடைகளும், பாத்திரங்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (எ) ஹாஜி காக்கா வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுமக்களுக்கு அறிவிப்பு:
“காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு”வின் சார்பில், 08.12.2015. செவ்வாய்க்கிழமை (நாளை) முதல், 4 வாடகை சரக்குந்து (லாரி) வாகனங்களில், நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நகர்வலமாகச் சென்று, பொதுமக்களிடம் நிவாரண நிதியைச் சேகரிக்க தீர்மானிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரி - நகரின் அனைத்து பள்ளிவாசல்களது ஒலிபெருக்கிகள் வாயிலாகவும், உள்ளூர் செய்தி ஊடகங்கள் மூலமாகவும் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
களப்பணி:
திட்டமிட்ட படி, 08.12.2015. செவ்வாய்க்கிழமையன்று, காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவிலுள்ள எஸ்.இப்னு ஸஊத் இல்லத்திலிருந்து, நிவாணரப் பொருட்களைத் திரட்டுவதற்காக - பிரிவுக்கு இரண்டு வாகனங்கள் என 4 சரக்கு வாகனங்களில், நகரின் வட பகுதிகளில் ஒரு பிரிவினரும், தென் பகுதிகளில் மறு பிரிவினரும் களமிறங்கினர்.
பங்கேற்றோர்:
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பின் துணைத்தலைவர்களான எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான், ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, ஒருங்கிணைப்பாளர்களான வி.ஐ.புகாரீ, வி.டி.என்.அன்ஸாரீ, எம்.எல்.ஷேக்னா லெப்பை, யு.நவ்ஃபல், பொருளாளர்களான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான், செயலாளர்களான மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ‘பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட்’ பிரபு ஹபீப் முஹம்மத், எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், உலக காயல் நல மன்ற ஒருங்கிணைப்பாளர்களான எம்.எஸ்.செய்யித் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகிய நிர்வாகிகளும், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘ஹாங்காங்’ ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்டோரும், இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் - சமுதாயத்தின் அனைத்து அமைப்புகளது அங்கத்தினரும், தன்னார்வத்துடன் இளைஞர்களும், மாணவர்களும் களப்பணியில் ஈடுபட்டனர்.
மழையைப் பொருட்படுத்தாமல் தொடர் பணி:
10.30 மணிக்கு வாகனங்கள் கிளம்பின. அடுத்த சில நிமிடங்களில் மழை சாரலில் துவங்கி, கனமழையாக மாறியது. எனினும், குழுவில் அங்கம் வகித்த பெரியவர்கள் குடைகளை உயர்த்திப் பிடித்து வாகனங்களில் நின்றவாறு சென்றனர். இளைஞர் - மாணவர் குழுவினரோ இம்மழையைச் சாதகமாக எடுத்துக்கொண்டு, உடைகள் நனைவதைச் சிறிதும் கருத்திற்கொள்ளாமல், சாலைகளில் தேங்கியிருந்த நீர்களில் இறங்கியும், மழையில் நனைந்தும் வீடு வீடாகச் சென்று வாளியேந்தி நிவாரண உதவிகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தனர்.
13.00 மணியளவில் முதற்கட்ட களப்பணி நிறைவுற்றது. இரண்டாம் கட்ட களப்பணி, அதே நாளில் 16.30 மணிக்கு, மகுதூம் ஜும்ஆ பள்ளியிலிருந்து துவங்கி, நகரின் எஞ்சிய பகுதிகளைச் சுற்றி, பொருட்களைத் திரட்டியது. 20.30 மணியளவில் இரு பிரிவினரும் பெரிய நெசவுத் தெருவிலுள்ள தற்காலிக அலுவலகமான - எஸ்.இப்னு ஸஊத் இல்லத்தை வந்தடைந்தனர்.
கணக்கெடுப்பு:
காலையில் பெய்த மழையின்போது திரட்டப்பட்ட நன்கொடைப் பணங்கள் முழுவதும் மழையில் நன்கு நனைந்திருந்ததால், உடனடியாக தொகையைக் கணக்கிட இயலாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஹீட்டர் கொண்டு, நனைந்த பணத்தாள்கள் அனைத்தையும் நீண்ட நேரம் காய வைத்த பின், எண்ணும் பணி நடைபெற்றது. களப்பணியில் ஈடுபட்டோர் அனைவரும் கணக்கிடும் பணியிலும் இறுதி வரை இருந்தனர்.
விடுபட்ட பகுதிகளில் சேகரிப்பு:
விடுபட்ட நான்கு தெருக்களில், மறுநாள் (09.12.2015. புதன்கிழமை காலை முதல் மதியம் வரை நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டன. நகர்வலம் மூலமாக பெறப்பட்ட மொத்த தொகை சுமார் 6.75 லட்சம் ஆகும்.
மழலையரின் நெகிழ வைத்த நன்கொடை:
கையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கண்டதையும் வாங்கி வீணாக்கும் குழந்தைகள் உள்ள இக்காலகட்டத்தில், அரிதாக சில குழந்தைகள் தமக்குக் கிடைக்கும் பெருநாள் அன்பளிப்பு உள்ளிட்ட பணங்களை - தம் பெற்றோர் வழிகாட்டலுடன் உண்டியலில் சேகரித்து வந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 குழந்தைகள், தாம் சேகரித்த அவ்வுண்டியல்களை அப்படியே நிவாரணக் குழுவினரிடம் நன்கொடையாக ஒப்படைத்தனர். அவற்றை உடைத்துப் பார்த்தபோது, ஒவ்வொரு உண்டியலிலும் சுமார் ஆயிரம் ரூபாய் வரை இருந்தது. ஓர் உண்டியலில், “மறுமை” என்று எழுதி ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரூ. 30 லட்சம் சேகரிப்பு:
மொத்தத்தில் 50 லட்சம் ரூபாய் வரை சேகரித்தே ஆக வேண்டும் என “காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” திட்டமிட்டிருந்தது. எனினும், நகர்வலம் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை, நகரின் தனவந்தர்களிடம் பெறப்பட்ட தொகை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவியர் சேகரித்தளித்த 1 லட்சத்து 1 ஆயிரத்து 786 ரூபாய் தொகை, உலக காயல் நல மன்றங்கள் மூலமாகப் பெறப்பட்ட தொகை என மொத்தத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது.
ஆடைகள், பாத்திரங்கள் பிரித்தெடுப்பு:
இது தவிர, புத்தாடைகள் - பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் என பல்லாயிரக்கணக்கில் ஆடைகளும், நல்ல நிலையில் ஆயிரக்கணக்கான பாத்திரங்களும் சேகரிக்கப்பட்டு, பெரிய நெசவுத் தெரு அலுவலகம், ஜாவியா அரபிக்கல்லூரி ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பிரித்து வகைப்படுத்துவதற்கு, ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ், மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்ற வளாகம், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) ஆகிய இடங்களில், அவற்றின் நிர்வாகத்தினர் தன்னார்வத்துடன் தாமாக முன்வந்து பொறுப்பேற்று, செய்து முடித்துள்ளனர்.
கடலூரில் சிறப்புக் குழு கள ஆய்வு:
இவை ஒருபுறமிருக்க, கடலூரில் நிவாரணப் பொருட்களை முறைப்படி வினியோகிப்பது குறித்து திட்டமிடுவதற்காக,
(1) டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
(2) மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ,
(3) ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத்,
(4) வி.ஐ.புகாரீ,
(5) வி.டி.என்.அன்ஸாரீ,
(6) யு.நவ்ஃபல்
சிறப்புக் குழு அறிக்கை:
ஆகியோரடங்கிய குழுவினர் கடலூருக்கு நேரடியாகச் சென்று, இரண்டு நாட்களாக அங்குள்ள - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு செய்து வந்துள்ளனர். தமது ஆய்வறிக்கையை, 12.12.2015. சனிக்கிழமையன்று (நேற்று) 20.00 மணியளவில், பெரிய நெசவுத் தெரு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புக் குழுவினர் சமர்ப்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடலூருக்கு நேரடியாகச் செல்லவும், நிவாரணப் பொருட்களை வினியோகிப்பதோடு, இயன்றளவு களப்பணியாற்றவும் குழுவினரைத் தேர்ந்தெடுப்பதற்காக, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் இன்று (13.12.2015. ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
தகவல்களிலும், படங்களிலும் உதவி:
M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |