நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, வெள்ள அபாயத்தை சமாளிக்க பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று நெல்லை, தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டனர்.
கனமழை
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள், குளங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும், நாளையும் (13, 14–ந் தேதிகளில்) கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து உள்ளது.
எனவே தாமிரபரணி கரையோர பகுதிகள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மீண்டும் வெள்ள அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை மீட்பதற்கு வசதியாக மீன்வளத்துறை மூலம் 10 நாட்டுப்படகுகள் தயார் நிலையில் லாரிகளில் ஏற்றி வைக்கப்பட்டு உள்ளன. அந்த படகுகளில் சென்று மீட்பதற்கு வசதியாக 40 மீனவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பேரிடர் மீட்பு படை
முதன்முறையாக தற்போது, மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நெல்லை, தூத்துக்குடிக்கு வந்து இருக்கிறார்கள்.
உதவி கமாண்டர் பி.வைரவநாதன் தலைமையில் மொத்தம் 110 பேர் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர்கள் 3 குழுக்களாக உள்ளனர்.
அவர்கள், மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமாரை சந்தித்து, வெள்ள மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன்பிறகு ஒரு குழுவினர் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கும், மற்றொரு குழுவினர் ஆத்தூர் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் முகாமிட்டுள்ளனர்.
நவீன உபகரணங்கள்
இது குறித்து உதவி கமாண்டர் பி.வைரவநாதன் கூறியதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதன்முறையாக பேரிடர் மீட்பு படை வந்துள்ளது. 110 பேரும் நீச்சல் பயிற்சி பெற்றவர்கள். உயிர்காக்கும் முதல் உதவி பயிற்சியும் பெற்றவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களால், எளிதில் மக்களை மீட்டு வர இயலும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு பஸ், லாரி மற்றும் இலகுரக வாகனம் ஒன்றும் உள்ளது. குழுவுக்கு தலா 5 ரப்பர் படகுகள் வீதம் 15 படகுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன. ஒரு படகில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை மீட்டு வரமுடியும். சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த படகில் எளிதாக செல்ல முடியும்.
25 முதல் 30 அடி ஆழத்தில் தண்ணீருக்குள் மூழ்கியவர்களை தேடக்கூடிய உபகரணங்களும் எங்களிடம் உள்ளன. தண்ணீருக்குள் இருந்து தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களும் உள்ளன. அதே போன்ற செயற்கைகோள் செல்போனும் உள்ளது. 200 உயிர்காக்கும் ஆடைகள், 200 உயிர்காக்கும் மிதவைகளும் உள்ளன. இதன் மூலம் மக்களை எளிதில் மீட்க வாய்ப்பாக இருக்கும். எங்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான அனைத்து உணவுப் பொருட்கள், மருந்துகளையும் நாங்கள் தயார் நிலையில் வைத்து உள்ளோம். இதனால் எந்த நேரத்திலும் யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்பு பணியை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவோம்.
இவ்வாறு உதவி கமாண்டர் பி.வைரவநாதன் கூறினார்.
தகவல்:
தினத்தந்தி
கூடுதல் புகைப்படம்:
தி ஹிந்து |