வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் நாளன்று, காயல்பட்டினம் பள்ளிகளின் ஆசிரியர் - பெற்றோருக்கான பயிற்சி முகாமை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணையுடன் நடத்தவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 36ஆவது செயற்குழு கூட்டம், 11.12.2015. வெள்ளிக்கிழமை மாலையில், செயற்குழு உறுப்பினர் டாக்டர் விளக்கு செய்யித் அஹ்மத் தலைமையில், தலைவர் அல்ஹாஜ் வீ.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை முன்னிலையில், பொதுச்செயலாளர் அல்ஹாஜ் மக்பூல் அஹ்மத் இல்லத்தில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பங்கேற்றோரின் விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மழை வெள்ள நிவாரணப் பணியாற்றியோருக்கு பாராட்டு:
அண்மையில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில், தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஈடுபட்ட நமதூரைச் சேர்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும், தன்னார்வ களப்பணியாளர்களையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டி, அவர்களின் நல்வாழ்விற்காக துஆ செய்கிறது.
தன்னலமற்ற இவ்வரிய சேவைகள் மூலமாக, முஸ்லிம் சமுதாய மக்களைப் பற்றி, முஸ்லிமல்லாத மக்களிடையே ஆழமான நல்லெண்ணம், புரிந்துணர்வு, மரியாதை ஏற்பட்டுள்ளதை இக்கூட்டம் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் 2 - மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 90 ஆயிரம் உதவி:
அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் மூலமாக 50 ஆயிரம் ரூபாயும், கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்து வரும் “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்”பின் மூலமாக 40 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 90 ஆயிரம் ரூபாயை அவசர கால நிதியுதவியாக அனுப்பியதற்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 3 - விபத்துக்குள்ளானவருக்கு 60 ஆயிரம் ரூபாய் உதவி:
அண்மையில் விபத்துக்குள்ளான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணியின் மருத்துவச் செலவினங்களுக்காக, மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து அளித்த 60 ஆயிரம் ரூபாய் தொகையை, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் வழங்கியதற்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 4 - ஷிஃபாவுக்கு புதிய பிரதிநிதி:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவி கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பிற்கு, அபூதபீ காயல் நல மன்றத்தின் பிரதிநிதியாக, முன்னாள் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அவர்களை - அவர்களது ஒப்புதலுடன் இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 5 - ஆசிரியர்-பெற்றோர் பயிற்சி முகாம்:
மன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம்ஆ நாளன்று காலையிலும், மாலையிலும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோருக்கான பயிற்சி முகாமை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணையுடன் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (35ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |