காயல்பட்டினம் நகர மாணவ-மாணவியரின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, அபூதபீ காயல் நல மன்றம், இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியுள்ளன.
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம். இதற்கு உறுதுணையாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு காயல் நல மன்றங்களும் இக்ராஃவுடன் இணைந்து பல கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் அபூதபீ காயல் நல மன்றம் நமது நகரின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் சிறந்த மனநலப் பயிற்சியாளரைக் கொண்டு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்திட தீர்மாணித்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறித்து சமீபத்தில் 12-12-2015 அன்று இக்ராஃ மூலம் கூட்டப்பட்டிருந்த காயல் நகரின் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்குமெனவும், இதற்காக தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறையளித்து அனைத்து ஆசிரியர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்வதாகவும் பள்ளித் தலைமையாசிரியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த நிகழ்ச்சியை இறையருளால் 09-01-2016 சனிக்கிழமையன்று நடத்துவதென்று அன்றே உறுதி செய்யப்பட்டிருந்தது.
ஆசிரியர்களுக்கான அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சி:
அதன்படி கடந்த 09-01-2016 சனிக்கிழமையன்று காயல்பட்டினம், சதுக்கைத் தெருவிலுள்ள, ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்திட அபூதபீ காயல் நல மன்றமும் இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ஏற்பாடுகள் செய்திருந்தன.
அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு ''செதுக்கும் செம்மல்கள்'' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சி நடை பெற்றன.நிகழ்ச்சிக்கு அபூதபீ காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் தலைமை தாங்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.புஹாரி, மூத்த செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர், சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை செண்பகவள்ளி, முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அபூதபீ காயல் நல மன்றத்தின் உறுப்பினர் மவுலவி ஹாஃபிழ் நஹ்வி எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் வரவேற்புரையாற்றினார். அபூதபீ காயல் நல மன்றத்தின் உறுப்பினர் எல்.டி.இபுராஹிம் நிகழ்ச்சி பற்றியும் கருத்துரை வழங்குபவர் பற்றியும் அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சி துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் LIFE IMPROVEMENT MIND ENGINEERING (LIME) நிறுவனரும், மன நலப்பயிற்சியாளருமான திரு ஆர்.கணேஷ் M.A., கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.
கருத்துரையின் தலைப்புகள்:
இன்றைய மாணவர் மனநிலை!
மாணவரின் மனைநிலை!
இன்றைய ஆசிரியரின் இடர்கள்!
மாணவர்களை முடக்கும் மின்னணுப் பொறிகள்!
வகுப்பறைகள் வரையறைகள் அல்ல!
மாணவரிடையே மறைந்திருக்கும் மாமேதைகள்!
மாணவருக்கான மந்திரச் சொற்கள்!
கண்டிப்பும், கனிவும் கலந்ததோர் அணுகுமுறை!
பெற்றோர் - ஆசிரியர் -மாணவர் - ஓர் முக்கிய முக்கோணம்!
ஆரா அணுகுமுறையின் அற்புத விளைவுகள்!
மேனிலைப்பள்ளி மாணவரைக் கையாளும் முறை!
துவக்கமாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து புகழ்ந்துரைத்த அவர், பல்வேறு நாடுகளில் பணியாற்றும் இந்த நகரைச் சேர்ந்தவர்கள், தங்களது பணிகளையும், ஒய்வு நாட்களையும் ஒதுக்கி வைத்து விட்டு இது போன்ற அருமையான மக்கள் நலப்பணிகளை, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தற்போதைய கால கட்டத்தில் இது போன்று காண்பது அரிது.எனவே அவர்களுக்காக கைதட்டி நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம் என்று கூறி அனைவர்களையும் கைதட்டி வாழ்த்தச் செய்தார்.
அமெரிக்காவில் விஞ்ஞானிகளுக்கு அடுத்ததாக மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் மதிக்கப்படுபவர்கள், பிரான்ஸ் நாட்டில் நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய ஒரே தகுதி பெற்றவர்கள், ஜப்பான் நாட்டில் துரதிஷ்டவசமாக இவர்களை கைது செய்ய வேண்டி வந்தால் அரசாங்கத்திடம் அனுமதி பெறப்படவேண்டும்,கொரியாவில் மத்திய அமைச்சர்களுக்கு இணையாக சலுகை -அதிகாரம் பெற்றவர்கள். இவர்கள் யார் தெரியுமா. ஆம். இவர்கள்தான் ஆசிரியர்கள் என்று கூறி ஆசிரியர்களின் உன்னதத்தை புகழ்ந்து பேசிய அவர், நீங்கள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல நான் வரவில்லை. மாறாக எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைச் சொல்லவே நான் வந்திருக்கிறேன் என்று கூறி விட்டு,
ஆசிரியர்களுக்கான கடமைகள்,பொறுப்புகள், ஆசிரியர்கள் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், ஆசிரியர்களின் பணி எந்த அளவுக்கு மகத்தானது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உணர்வு பூர்வமாக விளக்கினார். உரையின் இடையிடையே தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளையும், புகைப்படங்களையும் காணொளிக் காட்சியின் மூலம் விளக்கினார். மாணவ-மாணவியர்களின் உணர்வுகள், அவர்களை அன்புடன் நடத்துகையில் காணும் பலன் குறித்து விளக்கினார்.
உணர்வுகள் எப்படிப்பட்டது என்பது குறித்து விளக்குகையில், கொலம்பியாவில் ஒரு பெண் தான் வளர்த்த சிங்கத்தை குட்டியாக இருக்கும் போதே அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் ஒப்படைத்திருந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து அந்த மிருகக்காட்சி சாலைக்கு சென்ற அவர், அந்த சிங்கத்தின் அருகில் வந்து கம்பியை தட்டுகிறார்.தூங்கிக் கொண்டிருந்த அந்த சிங்கம் முகத்தைப் பார்க்காமலேயே உடனடியாக எழுந்து கம்பியினூடே தனது முன் கால்களை உயர்த்தி அந்தப் பெண்மணியை கட்டியணைத்து தடவிக்கொள்கிறது. அந்தப் பெண்மணியும் அந்த சிங்கத்தை அணைத்து தடவிக்கொடுக்கிறார். இந்த நிகழ்ச்சியை காணொளி மூலம் காண்பித்து விளக்கிய அவர், ''சிங்கத்துக்கே இவ்வளவு அன்பு இருக்கும்போது, குழந்தைகளிடம் அன்பு இருக்காது என்று நினைப்பது அசிங்கம்'' என்று உணர்ச்சிகள் பொங்க விளக்கினார்.
ஒரு ஆசிரியரை மாணவனுக்குப் பிடிக்காமல் போனால் அவர் எடுக்கும் பாடமும் பிடிக்காமல் போய் விடுகிறது. இது நடைமுறையில் கண்ட உண்மையாகும் என்றும், மாணவர்களை வார்த்தெடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும், மாணவர்களை பயமுறுத்தியோ, மிரட்டியோ நமது வழிக்குக் கொண்டு வரமுடியாது என்றும், அவர்களை தட்டிக்கொடுத்து சாதிக்கலாம் என்றும் பல்வேறு உவமைகளோடு எடுத்துரைத்தார்.
மேலும் தற்போது மாணவர்களை அடிக்கக் கூடாது என்று அரசாங்கம் கூறி விட்டதாலும், மாணவர்கள் இதைச் சுட்டிக்காட்டி மிரட்டுவதாலும் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.
இறுதியில் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் மதியம் 1 மணியளவில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் எல்.கே.மெட்ரிக் மேனிலைப் பள்ளியிலிருந்து 55 ஆசிரியைகளும், சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப் பள்ளியிலிருந்து 41 ஆசிரியைகளும், முஹியித்தீன் மெட்ரிக்மேனிலைப்பள்ளியிலிருந்து 21 ஆசிரியை மற்றும் 6 ஆசிரியர்களும், எல்.கே. மேனிலைப்பள்ளியிலிருந்து 13 ஆசிரியர்களும், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 16 ஆசிரியைகளும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 8 ஆசிரியைகளும் (160 ஆசிரியர்கள்) கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மது ஹசன், ரியாத் காயல் மன்றத்தின் தலைவர் ஹாஜி ஏ.ஹெச்.முஹம்மது நூஹு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெற்றோருக்கான கருத்தரங்கம்:
இரண்டாவது நிகழ்வாக ''தடைகளைத்தாண்டி....'' என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான மாபெரும் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் மாலை 05:15 மணிக்கு துவங்கியது.
நிகழ்ச்சிக்கு அபூதபீ காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் தலைமை தாங்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ .எஸ்.ஜரூக், துணைச் செயலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, மற்றும் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.செய்யது இபுராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். மஹ்லரா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர் (எல்.டி.இபுறாஹீம் அவர்களது அருமை மகனார்) எம்.ஐ.முஹம்மது ஷாகிர் கிராஅத் ஓதினார். அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஹமீது யாஸிர் வரவேற்புரையாற்றினார். அபூதபீ காயல் நல மன்றத்தின் உறுப்பினர் எல்.டி.இபுராஹிம் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றியும் கருத்துரை வழங்குபவர் பற்றியும் அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது.
இதிலும் காலை நிகழ்ச்சியைப் போன்றே LIFE IMPROVEMENT MIND ENGINEERING (LIME) நிறுவனரும், மன நலப்பயிற்சியாளருமான திரு ஆர்.கணேஷ் M.A., கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.
கருத்துரையின் தலைப்புகள்:
வாலிபப் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் பிள்ளைகளின் படிப்பிற்கு நீங்கள் எவ்வகையில் உதவலாம்?
பிள்ளைகளுடனான தகவல் தொடர்பு!
பெற்றோர் - ஆசிரியர் -மாணவர் - ஓர் முக்கிய முக்கோணம்!
மனநலம்!
மனநலத்தைப் பாதிக்கும் செல்ஃபோன்/ தொலைக்காட்சி/ இணையதளம்!
உணர்ச்சிகள்! வார்த்தைகள்! உணர்வுகள்!
மனோதத்துவ முறைப்படி சில பயிற்சிகள்!
மன அமைதி பெறுவது எப்படி?
ஆகிய தலைப்புகளின் கீழ் மிகவும் தெளிவாகவும், விளக்கமாகவும் உரையாற்றினார்.
மக்ரிப் பாங்கைத் தொடர்ந்து தொழுகைக்காகவும், தேநீர் இடைவேளைக்கும் 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. ஆண்கள் அருகிலுள்ள பள்ளிக்குதொழச் சென்றனர். பெண்களின் தொழுகைக்காக பெண் தன்னார்வலர்களால் நிகழ்விடத்திலேயே ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
தொழுகை, தேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சி மீண்டும் 7 மணியளவில் தொடங்கியது. குழந்தை வளர்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்தவுடன்தான் துவங்குகிறது என்ற என்னத்திற்கு மாற்றாக குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அனைத்தையும் உணர்வதாகவும், இதனை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருப்பதாகவும், எனவே கருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி குர்ஆன் ஒதுமாரும், அல்லாஹ்வை தவறாது வணங்குமாறும், இதனால் உள்ளம் அமைதி பெற்று சைத்தான் வெளியேறி விடுவான் என்றும், இதுதான் குழந்தை வளர்ப்பின் முதல் படி எனவும் உதாரணங்களோடு விவரித்தார்.
மேலும் இஸ்லாம் தழைத்தோங்கிய இந்த நகரில் பாங்கு ஒலிக்கப்படும்போது அனைவரும் அமைதிகாப்பதையும், அதன் ஏற்ற, இறக்கமான அலைவரிசை மனதிற்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. இந்த சூழலை வேறு எந்த இடத்திலும் காண இயலாது என்றார்.
மேலும் ''நிகழ்ச்சியின் துவக்கத்தில் இப்ராஹிம் அவர்களது மகனான சிறுவன் குர்ஆன் வசனத்தை ஓதியதை மிகவும் ரசித்தேன். அதன் விளக்கம் எனக்கு புரியாவிட்டாலும் நான் ஒரு ஆன்மீகவாதி என்ற அடிப்படையில் அது ஏதோ ஒரு தத்துவத்தைத்தான் சொல்லும் என்பதை புரிந்துகொள்கிறேன். அதே சமயம் இன்னொன்றையும் கவனித்தேன்.
அதாவது அந்த சிறுவன் குர்ஆன் வசனத்தை ஓதி விட்டு கீழே இறங்கிச் செல்கையில் இருவர் அவனை தன்னருகில் அழைத்து அவனது நெற்றியில் முத்தமிட்டதைப் பார்த்தேன். அவர்களுக்காக நீங்கள் யாவரும் கை தட்டி வாழ்த்துங்கள். காரணம் இப்படித்தான் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்; உற்சாகப்படுத்த வேண்டும். அதாவது குழந்தை 8 வயதை அடைவதற்கு முன்பாக 1,48,000 முறை “உன்னால் முடியாது” என்று பெற்றோர்களால் சொல்லப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படியானால் நமது பிள்ளைகள் எப்படி அஞ்சாமல் செயலாற்ற முடியும். எப்படி முன்னேற்றத்தை அடைய முடியும். எனவே அதுபோன்று செய்யாமல் நமது பிள்ளைகளை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்'' என்றார்.
மேலும் ''பிள்ளைகள் சரியாகப் படிக்காவிட்டால் ''உனக்கு அறிவில்லை'' என்று திட்டாதீர்கள். எல்லாக் குழந்தைகளும் அறிவுடன்தான் பிறக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். படிக்காத எத்தனையோ பேர் மேதைகளாகவும், பிரபலமானவர்களாகவும் திகழ்ந்துள்ளதை வரலாற்றை புரட்டினால் தெரியும்'' என்று விளக்கி விட்டு, ஆடிஸம் குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் விளக்கினார்.
பிள்ளைகள் மொபைல் ஃபோனில் பேசும் போதும், தொலைக்காட்சி பார்க்கும்போதும் மறைமுகமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறிய அவர் அதே சமயம் பிள்ளைகளை தேவையில்லாமல் சந்தேகப்படக்கூடாது என்பதையும், அவர்களது நியாயமான சுதந்திரத்தை அனுமதிக்குமாறும், புத்திமதி என்ற பெயரில் பிள்ளைகளை கஷ்டப்படுத்தக் கூடாது என்றும், தங்களது பிள்ளைகளின் உடல் வளர்ச்சியைப் பார்க்கும் பெற்றோர்கள் அவர்களது உள்ளத்தின் வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். உரையின் இடையிடையே தொடர்புடைய பல்வேறு நிகழ்வுகளையும், புகைப்படங்களையும் காணொளிக் காட்சியின் மூலம் அற்புதமாக விளக்கினார்.
இறுதியில் பெற்றோர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உதாரணங்களுடன் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கருத்துரை வழங்கிய திரு ஆர்.கணேஷ் அவர்களுக்கு நினைவுப் பரிசு அபூதபீ காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மற்றும் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஹமீது யாஸிர் ஆகியாரால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது நன்றி கூற, மவுலவி ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இரவு 09:00 மணியளவில் நிறைவுற்றது. இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் அருமையான நிகழ்வாக இருந்ததாக கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துச் சென்றனர்.
இரண்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அபூதபீ காயல் நல மன்றத்தின் உறுப்பினர் எல்.டி.இபுராஹிம் மற்றும் மவுலவி எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் உட்பட பலரும் சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |