DCW தொழிற்சாலையின் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு - பிப்ரவரி 3 அன்று ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28 அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா தனது துவக்கக் வாதங்களை நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து DCW தொழிற்சாலையின் சார்பாக பெங்களூரை சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.ஜி.ராகவன் - தனது வாதங்களை, ஜனவரி 29
மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தேதிகளில் எடுத்து வைத்தார்.
வழக்கு தொடர்ந்தவர் என்பதால் - எதிர் மனுதாரரின் வாதங்களை தொடர்ந்து, இறுதி வாதங்களை - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா, பிப்ரவரி 3 அன்று எடுத்து வைத்தார்.
இது குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள விபரங்கள்
வருமாறு:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா எடுத்து வைத்த இறுதி வாதங்களின் சாராம்சம் -
<><><> DCW சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் - தனது வாதங்களின் போது - KEPA அமைப்பு, 2000ம் ஆண்டு வரையில் வெளியான மெர்குரி
குறித்த ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது என்றும், 2002ம் ஆண்டு - DCW நிறுவனம் சார்பாக விஞ்ஞானி ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஜெர்மன்
நாட்டு விஞ்ஞானி டாக்டர் குருந்தர் ஸ்ட்ரேடன் ஆகியோர் தயாரித்த ஆய்வறிக்கையில் மெர்குரியினால் எந்த பாதிப்பும் இல்லை என
தெரிவித்திருப்பதாக கூறினார்.
இது முற்றிலும் தவறு; KEPA சார்பாக 2011ம் ஆண்டு வரை, மத்திய அரசின் நிறுவனமான CMFRI தயாரித்த ஆவணங்கள் தீர்ப்பாயத்தில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளதாகவும், அவை - சுற்றுச்சூழலில் பாதரசத்தின் தாக்கம் உள்ளது என்றும், அதற்கு காரணம் DCW தொழிற்சாலை தான் என்றும்
தெளிவாக கூறுகின்றன என எடுத்துரைத்தார். அது மட்டுமன்றி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொண்ட ஆய்விலும்
மெர்குரி தென்பட்டதை, KEPA வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
<><><> KEPA சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மத்திய அரசு நிறுவனம் CMFRI தயாரித்த ஆவணங்கள் என்றும், DCW தொழிற்சாலை சமர்ப்பித்துள்ள
ஆவணம், அந்நிறுவனமே ஏற்பாடு செய்து தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும் KEPA வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
<><><> மெர்குரி - நிலங்களில் இருந்தும், கடலிலும் இருந்தும் நீங்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும், மீன், குடிநீர் போன்ற மக்களின்
உணவு பழக்கங்கள் (FOOD CYCLE) மூலம் உடலுக்குள் அது சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.
<><><> இரு வெவ்வேறு வகையான திட்டங்களாக இருந்து, ஒரே விண்ணப்பம் மூலம் இந்த திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது தவறு என விளக்கிய
KEPA வழக்கறிஞர், 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பு (OFFICE MEMORANDUM), விளக்கம் வழங்கும் குறிப்பு என்றும், 2009 ம்
ஆண்டே, இது குறித்த சட்ட திருத்தம் வந்து விட்டது என்றும், அதன் அடிப்படையில் - இது குறித்த கேள்வி (பல திட்டங்கள் அமைந்த
விண்ணப்பமா, இல்லையா) விண்ணப்பத்திலேயே தனியாக உள்ளது என்றும், அந்த விண்ணப்பத்தை நிரப்பிய DCW நிறுவனம், இரு வெவ்வேறு
மாதிர் TORs தயாரித்திருந்தாலும், ஒரே குழுவின் முன்னரே, இந்த திட்டத்தினை சமர்ப்பித்தது தவறு என்றும் KEPA வழக்கறிஞர் கூறினார்.
<><><> நிலக்கரி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளும் போது, சாம்பல் (FLY ASH) பிரச்சனையுடன், மெர்குரி பிரச்சனையும் உருவாகுகிறது என்றும்,
வாதங்களின் போது - DCW தொழிற்சாலையின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், DCW நிறுவனம் - குறைந்த சாம்பல் கொடுக்கும் - இறக்குமதி
செய்யப்பட்ட நிலக்கரியை மட்டும் பயன்படுத்துகிறது என தெரிவித்தது உண்மைக்கு புறம்பானது என்றும், 2010ம் ஆண்டு, அதிக மாசு ஏற்படுத்தும்
உள்நாட்டு நிலக்கரி பயன்படுத்த DCW நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது என்றும், இந்த தகவல்கள் விரிவாக்க திட்டங்கள் பரிசீலிக்கப்பட்ட போது
மறைக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆவணத்தையும் வழங்கினார்.
<><><> வழக்கு நிறைவடையும் தருவாயில் புதிய ஆவணங்களை அறிமுகம்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என DCW வழக்கறிஞர் ஆட்சேபனை
தெரிவித்தார். இவை புதிய ஆவணங்கள் இல்லை என்றும், இந்த ஆவணம் DCW நிறுவனத்திடம் உள்ள ஆவணம் தான் என்றும், பொய்யான
தகவல்களை தீர்ப்பாயதிற்கு வழங்கும் போது - அதற்கான விளக்கங்களை ஆதாரத்தோடு வழங்க வேண்டி உள்ளது என KEPA வழக்கறிஞர்
தெரிவித்தார்.
<><><> PURE ENVIRO நிறுவனத்தின் விண்ணப்பம் பிப்ரவரி 22, 2011 அன்று நிராகரிக்கப்பட்டிருந்தாலும், ஜூன் 30 வரை ஆவணங்கள் தயாரிக்க
அதற்கு அனுமதி உள்ளது என DCW நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது வேடிக்கை என்றும், அந்த காலக்கெடு (ஜூன் 30, 2011), விண்ணப்பம்
நிலுவையில் உள்ளவர்களுக்கே பொருந்தும் என்றும், தகுதி இல்லை என விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யபப்ட்ட நிறுவனங்களுக்கு பொருந்தாது
என்றும் KEPA வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
<><><> DCW விண்ணப்பத்தில் (FORM-1) பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன என்பதனை மீண்டும் விளக்கினார். விண்ணப்பத்தில் வழங்கப்படும்
தகவல் அடிப்படையில் தான் EIA அறிக்கையில் வேண்டிய விபரங்கள் (TERMS OF REFERENCE) - EAC குழுவினால் வழங்கப்படுகிறது என்றும், அது
(FORM-1) தவறு என்றால் - அதன் பிறகு நடந்த அனைத்து விசயங்களும் தவறானதே என்றும் - இது குறித்த பல தீர்ப்புகளை
மேற்கோள்காட்டி - KEPA வழக்கறிஞர் விளக்கினார்.
<><><> PURE ENVIRO நிறுவனத்திற்கும், CHOLAMANDALAM நிறுவனத்திற்கும் DCW விரிவாக்கம் சம்பந்தப்பட்ட துறைகளில் EIA அறிக்கை தயாரிக்க
தகுதி இல்லை என்பதனை மீண்டும் விளக்கினார். அவ்வாறு தகுதி இல்லாதவர் தயாரித்த அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என தெளிவுப்படுத்திய
பல தீர்ப்புகளை KEPA வழக்கறிஞர் நினைவு கூர்ந்தார்.
<><><> DCW நிறுவனம், புது டில்லியில் அனுமதி பெற வழங்கிய வரைப்படத்தில் - CRZ இடத்தில் (சர்வே எண் 142), TCP தொழிற்சாலை வருகிறது
என்பது மறைக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வாண்டு (2016) ஜனவரியில் - தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த வரைப்படத்தில், திட்டமிட்டே, தீர்ப்பாயத்தை
ஏமாற்ற, DCW தொழிற்சாலை - TCP தொழிற்சாலை இடத்தினை மாற்றி காண்பித்துள்ளதாகவும், இரு வரைப்படங்களையும் - ஒன்றாக வைத்து,
நீதிபதி மற்றும் நிபுணர் உறுப்பினரிடம் நேரடியாக KEPA வழக்கறிஞர் விளக்கினார்
<><><> இந்த மோசடி கண்டுப்பிடிக்கப்படும் என்றும் சற்றும் எதிர்ப்பார்க்காத DCW தரப்பு வழக்கறிஞர், DCW தொழிற்சாலை நிர்வாகிகள் தீர்ப்பாயதிற்கு
வந்திருப்பதாகவும், அவர்கள் - CRZ இடத்தில், TCP தொழிற்சாலை அமைக்கப்படாது என உறுதி அளிப்பதாகவும் கூறினார்.
<><><> இதற்கு பதில் கூறிய KEPA வழக்கறிஞர், தவறான தகவல்களை வழங்கி அனுமதியை பெற்றுவிட்டு, கண்டு பிடிக்கப்பட்டப்பின், அந்த
இடத்தில் தொழிற்சாலை அமைக்க மாட்டோம் என கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், DCW தொழிற்சாலை சமர்ப்பிக்கும் எந்த
ஆவணத்தையும் நம்ப இயலவில்லை, ஒவ்வொரு ஆவணத்தையும் - துப்பு துலக்கும் முறையில் பார்க்க வேண்டி உள்ளது என்றும்
கூறினார்.
<><><> நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது என்றால், DCW கொடுக்கும் உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,
ஹாங்காங்கில் உள்ள ஒருவரை திருப்தி படுத்த முயற்சி செய்ய கூடாது என DCW வழக்கறிஞர் கூற, DCW நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு
கடுமையான எதிர்ப்பினை KEPA வழக்கறிஞர் பதிவு செய்தார்.
<><><> இவ்வாறு வெளிநாட்டு கை, வெளிநாட்டு கை என DCW வழக்கறிஞர் தொடர்ந்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த வழக்கில்
மனுதாரர்கள் சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதாலே இவ்வாறு கூறப்படுகிறது என்றும், நாடு இருக்கும் சூழலில் இது ஆபத்தான
குற்றச்சாட்டு என்றும், இந்த தீர்ப்பாய அறையில் உள்ள பலருக்கு - அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உறவினர்கள் உள்ளனர் என்றும், அவர்கள்
வாதிடும் வழக்கை எல்லாம் வெளிநாட்டு கை என கூறுவார்களா என்றும் வினவினார்.
<><><> ஹாங்காங்கில் மட்டும் இல்லாமல், உலகில் பல பகுதியிலும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், காயலர்களால் - காயல்பட்டினம்
சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த மனுக்கள் கொடுக்கப்பட்டது என்றும், மனுக்கள் கொடுத்த அவர்களும் இந்தியர்கள் என்றும், தங்கள் சொந்த ஊரின்
நிலைமை குறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவும், தீர்ப்பாயத்தை நாடவும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என்றும்,
வெளிநாட்டு கை என்ற வாதத்தை வைத்து, மனுத்தாரர்களை மிரட்டி - நீதிமன்றத்தை நாடாமல் யோசிக்க வைக்கும் செயல் என்றும் KEPA
வழக்கறிஞர் கூறினார்
<><><> கொட்டமடை காப்பு காடு குறித்து பேசிய KEPA வழக்கறிஞர், ஒரு காடு - காப்பு காடு (RESERVED FOREST) என அறிவிக்கப்பட்டு விட்டால்,
அது காப்பு காடு இல்லை என அறிவிக்க சட்டத்தில் (INDIAN FOREST ACT 1927, FOREST CONSERVATION ACT, 1980) சில வழிமுறைகள் உண்டு
என்றும், அவ்வாறு அறிவிக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டு என்றும், மாநில அரசோ, மத்திய அரசோ - கொட்டமடைக்காடு - காப்பு காடு
இல்லை என அறிவித்து வெளியிட்ட எந்த ஆவணத்தையும் DCW தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும், அடர்த்தியான மரங்கள்
அங்கு இல்லை என புகைப்படங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளார்கள் என்றும் நினைவு படுத்தினார்.
<><><> தாமிரபணி ஆற்றுக்கும், தொழிற்சாலைக்கும் உள்ள தூரத்தை நிரூபிக்க - வெறும் தாசில்தார் அறிக்கையை மட்டுமே, DCW நிறுவனம்
சமர்ப்பித்துள்ளது என்றும், இப்போது உள்ள தொழில் நுட்பத்தில் - யார் நினைத்தாலும், GOOGLE EARTH தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான
தூரத்தை அறியலாம் என்றும், நவம்பர் 2013இல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாமிரபணி ஆற்றுக்கும், தொழிற்சாலைக்கும் உள்ள தூரத்தை GPS
கருவி மூலம், IIT போன்ற நிறுவனங்கள் துணைக்கொண்டு அறிந்து, தகவல் வழங்க தெரிவித்த பிறகும், அவ்வாறு அறிக்கை வழங்குவதில் இருந்து
DCW நிறுவனம் விலக்கு கோரியதே, உண்மை வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் தான் என்றும் KEPA வழக்கறிஞர் கூறினார்
<><><> ஏன் காயல்பட்டினத்தில் மட்டும் புற்று நோய் குறித்த அச்சங்கள் வெளிவருகிறது என்ற கேள்விக்கு பதில் கூறிய KEPA வழக்கறிஞர், புற்று
நோய் பிரச்சனை அருகாமை ஊர்களிலும் உள்ளது என்றும், 2002ம் ஆண்டு வெளிவந்த கதிரவன் நாளிதழ் செய்தியில் - புன்னக்காயல், ஆறுமுகநேரி,
மூலக்கரை, காயல்பட்டினம் உட்பட 30 சுற்றுப்புற கிராமங்களில் புற்று நோய் உட்பட பல நோய்களின் தாக்கம் உள்ளது என கூறியிருப்பதாக
விளக்கிய KEPA வழக்கறிஞர், காயல்பட்டினத்தில் கடந்த பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விபரம், அவர்கள் விலாசத்தை
மட்டும் தவிர்த்து - தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து 2011ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களை - ரகசியம் பேணப்படும்
என்றால், சீல் வைக்கப்பட்ட உறையில், தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க தயார் என்றும், இதே தகவல் அடையார் புற்று நோய் மைய இயக்குனர் டாக்டர்
ஷாந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும், ஆய்வுகள் மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியம், அடையார் புற்று நோய் மையத்திற்கும், ஸ்ரீ
ராமச்சந்திர பல்கலைக்கழகத்திற்கும் எழுதிய பிறகு - ஏன், அதனை தொடரவில்லை என வினவினார்.
<><><> இது போன்று, கேரளா மாநிலத்தில் ஆரம்புல்லா பகுதியில் - விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட வழக்கில், அது குறித்த ஆவணங்கள் தயாரித்த நிறுவனம், தகுதி பெற்ற நிறுவனம் அல்ல என்ற காரணத்திற்காக - வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி 2014ம் ஆண்டு - இதே தீர்ப்பாயத்தில், இதே நீதிபதியால் (நீதிபதி ம.சொக்கலிங்கம்) ரத்து செய்யப்பட்டது என்றும், அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது என்றும் நினைவு கூறிய KEPA வழக்கறிஞர் - கேரளா வழக்கில் நீதிபதி ம.சொக்கலிங்கம் வழங்கிய தீர்ப்பு தான் இவ்விசயத்தில் தற்போது சட்டம் என்றும், அந்த தீர்ப்பில் நீதிபதி தெரிவித்த அனைத்து கருத்துக்களும், இந்த வழக்கிலும் பொருந்தும் என்று கூறி, மத்திய அரசு, DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தும், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்ய கூறியும், இத்தொழிற்சாலையினால் ஏற்பட்டுள்ள உடல்நலக் கேடு குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு - தீர்ப்பு வழங்கும்படி கூறி KEPA வழக்கறிஞர் டி.நாகசைலா, தனது இறுதி வாதங்களை நிறைவு செய்தார்.
இதனை தொடர்ந்து, மறுதினமே, எழுத்து பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவேண்டும் எனக்கூறி - தீர்ப்பை ஒத்திவைத்தார்நீதிபதி ம.சொக்கலிங்கம்.
அனைத்து தரப்பின் - எழுத்து பூர்வ வாதங்கள் (WRITTEN SUBMISSIONS), பிப்ரவரி 4 அன்று தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கபப்ட்டன. இவ்வழக்கை மே 2014 முதல் விசாரித்து வரும் நீதிபதி ம.சொக்கலிங்கம், பிப்ரவரி 16 அன்று ஓய்வு பெறுவதால், பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:15 / 12.2.2016] |