காயல்பட்டினத்தில் இறக்கும் முஸ்லிம் மக்களை, அவரவர் ஜமாஅத் பள்ளிவாசல் மையவாடிகளில் அடக்குவர். நகரின் பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்படாமலேயே தொடர்ந்து புதிய சாலைகளை அமைத்ததன் விளைவாக, நகரின் பல வீடுகளும், சில பள்ளிவாசல்களின் மையவாடிகளும் தரைமட்டத்தை விட தாழ்வான நிலைக்குச் சென்றுவிட்டன.
இதனால், மழைக்காலங்களில் இறப்பு ஏற்படும்போது, அந்த பள்ளிவாசல்களின் மையவாடியில் தரைக்கும் மேலாக தண்ணீர் தேங்குவதால், மண்ணறை தோண்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நேரங்களில், இறந்த சிலரின் உடல்கள் தங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த மையவாடியில் அடக்கம் செய்ய இயலாமல், மேட்டுப் பகுதியிலுள்ள வேறு பள்ளிவாசல் மையவாடிகளில் அடக்கப்பட்டுள்ளன.
“இங்குதான் அடக்க வேண்டும்” என்ற நிலையிலிருப்போர், தரைக்கு மேல் நிறை மணலைப் பரத்தி, அதில் மண்ணறையைத் தோண்டி அடக்கம் செய்த நிகழ்வுகளும், உண்டு. இதுகுறித்து கவலை எடுத்துக்கொண்ட - நகரின் சமூக ஆர்வலரும், காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவரும், நகரில் இறப்போரை அடக்கம் செய்வதில் நிறைவான சேவையாற்றி வருபவருமான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, தாழ்வான மையவாடிகளில் தரைமட்டத்திற்கு மேல் உயர்த்தி, அவசரகால மையவாடிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக முன்வைத்த செய்தியை, காயல்பட்டணம்.காம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
எனவே, மழைக்காலங்களில் இறப்போரை அடக்கம் செய்வதற்காக என - தரைமட்டத்திலிருந்து உயர்வாக சிறப்பு மையவாடியைக் கட்டமைக்க நகரின் சில பள்ளிவாசல்களில் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
குருவித்துறைப் பள்ளியில், மழைக்கால சிறப்பு மையவாடி அமைக்கும் பணி அண்மையில் துவக்கப்பட்டது. தற்போது அப்பணி நிறைவுற்று, மையவாடி ஆயத்த நிலையிலுள்ளது.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|