காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 10, 2009 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 2695]
செவ்வாய், பிப்ரவரி 10, 2009
செந்தூர் விரைவுத் தொடர்வண்டி: அமைச்சர் லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
திருச்செந்தூர் முதல் சென்னை வரையிலான செந்தூர் விரைவுத் தொடர்வண்டி துவக்க விழா 08.02.2009 அன்று மதியம் 3:30 மணியளவில், திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வண்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
லாலு வருகை தாமதம்:
முன்னதாக அன்று மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அமைச்சர் லாலு டெல்லியிலிருந்து திருச்செந்தூர் வந்து சேருவதற்கு காலதாமதம் ஆனதால் நிகழ்ச்சி துவங்கும் நேரம் தாமதமானது.
டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வரை ஹெலிகாப்டரிலும், அங்கிருந்து திருச்செந்தூருக்கு குண்டு துளைக்காத காரிலும் வந்தார்.
திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டி துவக்க விழாவுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழக அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், கீதாஜீவன், குமரி அனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
காயலர்கள் கொந்தளிப்பு:
அமைச்சர் வருவதற்கு சற்று முன், திருச்செந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளின் சரித்திர முக்கியத்துவங்கள் குறித்தும், திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டி நிற்கும் இடங்கள் குறித்தும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தப்பட்டது. காயல்பட்டணம் நகரின் பெயர் அவ்வுரையின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை.
சுற்றுப்புறப் பகுதிகளில், காயல்பட்டணத்தை விடவும் தூரமான பகுதிகள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கப்பட்ட அவ்வுரையில் காயல்பட்டணம் பற்றிய சிறு செய்தி கூட இடம்பெறாததையும், திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டி நிறுத்தம் பற்றிய செய்தியில், காயல்பட்டணம் தொடர்வண்டி நிலையத்தின் பெயர் இடம்பெறாததையும் கண்ணுற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பாளர் மவ்லவீ ஹாமித் பக்ரீ, மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப், பாங்காக் காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் உள்ளிட்டோரும், காயல்பட்டணம் பொதுமக்களும் உரையை நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பி, அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
பின்னர் அவர்களைத் தனியே அழைத்துப் பேசிய தொடர்வண்டித் துறை அதிகாரி, இந்நிகழ்வு கவனக்குறைவாக ஏற்பட்டதென்றும், உடனடியாக உரைக் குறிப்புகள் திருத்தி வாசிக்கப்படும் என்றும் தெரிவிக்கவே, அவர்கள் அமைதியாயினர்.
பின்னர் சிறிது நேரத்தில் திருத்தப்பட்ட உரை வாசிக்கப்பட்டது. அதில் காயல்பட்டணம் பெயரும் இடம்பெற்றது.
முன்னிலை வகித்தோர் உரை:
அமைச்சர் கீதா ஜீவன் தனதுரையில், தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை புதிய இருப்புப்பாதை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் தனதுரையில், காயல்பட்டணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்றும், உலகளவில் பல்கிப் பரவி வியாபாரம் செய்து வரும் அவர்களின் தொடர்வண்டி நிலையத்தில் இவ்வண்டியின் நிறுத்தம் மிகவும் அவசியம் என்று பேசினார்.
மத்திய இணையமைச்சர் வெ.ராதிகா செல்வி தனதுரையில், காயல்பட்டணம் உள்ளிட்ட நிறுத்தங்கள் போக, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட நிலையங்களிலும் இவ்வண்டியை நிற்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உரை:
பின்னர் மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-
மக்களாட்சி:
இந்தியாவில், தற்போது காங்கிரஸ் தலைமையில் நடைபெற்று வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மக்களுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக உள்ளது.
இதற்கு முன் அடல்ஜி அவர்களின் ஆட்சி நடைபெற்றது. நாட்டில் இந்தத் தொடர்வண்டித் துறை அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பிற துறைகளாலும் நாட்டு நிதி நிலமை பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. ஆனால், அவர்கள் இந்தியா ஒளிர்கிறது... என்று நாடு முழுக்க சூளுரைத்தனர்.
ஆனால், இன்றோ நாம் இந்த மக்களுக்காக நிறையவே செய்திருக்கிறோம்... இன்னும் செய்யவிருக்கிறோம்... இதன் பலன்களை அனுபவிக்கும் நீங்கள்தான் இதுபற்றி நிறையவே தெரிந்திருக்கிறீர்கள்@ எனவே நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை...
அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரை அனுமதியோம்:
நாட்டில் அமைதி இருந்தால்தான் வளம் பெருகும்@ அமைதி குலைந்தால் வளம் அழியும். எனவே, அந்த அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயல்வோரை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன் அத்வானி ரதயாத்திரை நடத்தினார். பிஹாரைக் கடந்து அந்த யாத்திரை செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு நடந்தால், தடுக்கப்படும்@ நடத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று அன்றைய பிஹார் முதல்வராக இருந்து நான் அறிவித்தேன். ஆனால் தடையை மீறி அவர்கள் ரதயாத்திரை நடத்தியபோது, நான் அத்வானியை கைது செய்து சிறையில் அடைத்தேன்...
தேர்தல் வரும்போதெல்லாம் இவர்கள் ராமரை கையிலெடுப்பார்கள். இப்போதும் கையில் எடுத்திருக்கிறார்கள். வரும் தேர்தலிலும் இவர்களை மக்கள் அனுமதிக்கப் போவதில்லை.
உங்கள் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சி:
தற்போது மன்மோகன் சிங் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மக்களாட்சியாக மலர்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் கேட்பவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டி நிறுத்தம் குறித்து கோரிக்கை விடுத்தார்கள். கேட்கும் இடங்கள் அனைத்திலும் நிறுத்தப்படும். புதிய வழித்தடங்கள், ஆய்வுக்குப் பின் நிறைவேற்றித் தரப்படும். இன்னும் என்னிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றப்படும்.
வாரம் 5 நாட்கள் செந்தூர் விரைவுத் தொடர்வண்டி:
இன்று அறிமுகப்படுத்தும் இந்த தொடர்வண்டிக்கு, உங்கள் கோரிக்கையை ஏற்று செந்தூர் விரைவுத் தொடர்வண்டி என்று பெயரிடுகிறேன்.
வாரம் ஒருமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த வண்டி வாரம் 5 தினங்கள் இயக்கப்படும்.
தேவையைப் பொருத்து, வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மாடு மேய்த்தவன்:
நான் இந்த நாட்டின் பெரிய பொருளாதார நிபுணரோ, பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவரோ கிடையாது. சாதாரணமாக ஆடு, கிடாய், மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன்தான்... நான் ஓர் ஏழையாக இருந்த காரணத்தால் எனக்கு இந்த நாட்டின் ஏழைகளுடைய எண்ண ஓட்டங்கள், ஏக்கங்களை உணர்ந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசினார். அவர் பேசி முடித்த பின், திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டியான செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை பச்சை சிக்னல் கொடுத்து, பச்சைக் கொடியசைத்து இயக்கி வைக்க, வண்டி புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக, வண்டியின் முகப்பில், இந்து மத முறைப்படி பூஜை செய்யப்பட்டது. வண்டியின் முகப்பில் திருச்செந்தூரைக் குறிக்க முருகன் கோயில் படமும், சென்னை எழும்பூரைக் குறிக்க, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் புகைப்படமும் நிறுவப்பட்டிருந்தன.
செந்தூர் விரைவுத் தொடர்வண்டி துவக்க விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் தொடர்வண்டி நிலைய வளாகத்தைச் சுற்றி, அமைச்சர் லாலு பிரசாத் யாதவை வரவேற்கும் வகையில் ஏராளமான டிஜிட்டல் பதாதைகள் நிறுவப்பட்டிருந்தன.
விழாவில், ஏராளமான காயலர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
முதல் வண்டியில் காயலர்கள்:
துவக்க வண்டியாக இருந்த காரணத்தால், விழா நிறைவுற்ற பின்புதான் புறப்பட வேண்டிய நிலையில் செந்தூர் விரைவுத் தொடர்வண்டி இருந்தபோதிலும், காயலர்கள் ஆர்வத்துடன் இந்த வண்டியில் சென்னைக்குப் பயணம் செய்தனர்.
முன்பதிவில் இடமில்லை:
இந்த வண்டிக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்ட பத்தே நிமிடங்களில் அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதனால், அதன் பிறகு வந்தவர்களுக்கு இடமில்லாது போயிற்று.
காயல்பட்டணத்தில் வரவேற்பு:
திருச்செந்தூர் - சென்னை விரைவுத் தொடர்வண்டி திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு, காயல்பட்டணத்தை அடைந்தபோது, அங்கு காயல்பட்டணம் நகர தி.மு.க. செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் நகர பிரமுகர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக நின்று வழியனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின் மாலை 4:45 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
|