காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 10, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3924]
புதன், பிப்ரவரி 10, 2010
அஸ்ஹரில் கைப்பேசி அலை தடுப்பான்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
கைப்பேசி கருவியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, காயல்பட்டினம் உட்பட இந்தியாவின் பெரும்பகுதிகளில் இந்த கைப்பேசிக் கருவி, மனித உடல் உறுப்பு போல - பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு மனித இனத்தின் அன்றாட வாழ்வை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
வீதியில் நடப்போர், விளையாட்டு மைதானங்களில் ஆடுவோர், வீடுகளில் இருப்போர், வியாபார நிறுவனங்களை நடத்துவோர் - அங்கு பணியாற்றுவோர் மட்டுமின்றி, உறங்குவோர், உணவு உட்கொள்வோர், இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவோர், வாகனங்களில் செல்வோர் என அனைவருக்கும் இந்த கைப்பேசிக் கருவி ஒரு தவிர்க்க முடியாத பொருளாகவே மாறிவிட்டது.
வழிபாட்டுத் தலங்களில் வணக்கம் செய்ய வருவோரையும் இந்தக் கைப்பேசிக் கருவி விட்டு வைக்காததையடுத்து, ~~செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்~~ என அங்கு தினமும் அறிவிக்கும் நிலையுள்ளது.
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கைப்பேசி உபயோகிப்பாளர்கள் சிலரின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளால், அவர்களுக்கு வரும் கைப்பேசி அழைப்பொலிகள் தொழுவோருக்கும் - தியானத்திலிருப்போருக்கும் தினமும் பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் உண்டாக்கி வருகிறது.
நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில், ~~தொழுகைக்காக உங்கள் வரிசைகளை சரிசெய்து கொள்ளுங்கள்~~ என்று கூறும் இமாம் - கூடவே, ~~செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்~~ என்றும் சொல்லத் தவறுவதில்லை.
~நீங்க என்னத்ததான் சொல்லுங்க... எங்க ஃபோன்ல ரிங் டோனாக சினிமாப் பாடல்களை வைத்திருப்போம்... சிரிப்பூட்டும் ஒலிப்பதிவுகளையும் வைத்திருப்போம்... சைலண்ட் மோடில் மட்டும் எங்கள் செல்ஃபோனை மாற்ற மாட்டோம்...~~ என்கிற ரீதியில் இருக்கும் சிலரது செயல்பாடுகளால், பெரும்பாலானவர்கள் தங்கள் வணக்க வழிபாடுகளில் ஓர்மையற்ற நிலையிலேயே இருக்கவேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காயல்பட்டினம் அல்-ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், கைப்பேசிக் கருவிகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும் அலை தடுப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 25,000 ரூபாய் மதிப்பிலான இக்கருவியை இயக்குவதன் மூலம், வரையறுக்கப்பட்ட அளவில் விரும்பும் தொலைவிற்கு கைப்பேசிகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய முடியும்.
இப்பள்ளிவாசலில், தினமும் ஐவேளை தொழுகைகளின்போது இகாமத் சொல்லப்படும் நேரத்தில் மின் விளக்குகள், மின் விசிறிகள் இயக்கப்படும்போது, இக்கருவியும் சேர்த்தே இயக்கப்படுகிறது. கூட்டுத்தொழுகை முடிவடைந்து, உபரித் தொழுகைகளும் ஓரளவுக்கு நிறைவேற்றப்பட்ட பின்னர், மின்விளக்குகள், மின்விசிறிகள் அணைக்கப்படும் நேரத்தில் இக்கருவியின் இயக்கமும் நிறுத்தப்படுகிறது.
இதனால், மறதியில் சிலர் தமது கைப்பேசியை அமைதிப்படுத்தாது போனாலும், அவர்களுக்கு வரும் அழைப்புகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு விடுகிறது. ஆமைதியான முறையில் அனைவரும் தொழவும் வாய்ப்பேற்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகரில், இப்பள்ளியிலேயே இக்கருவி துவக்கமாக நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|