இனி வருங்காலங்களில் பயனாளிகளுக்கு உதவித்தொகையை பணமாக வழங்காமல், காசோலையாக வழங்குவதென, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் இயங்கி வரும் காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டம், 25.01.2016. திங்கட்கிழமையன்று 20.00 மணியளவில், பைத்துல்மால் கட்டிட மாடியிலுள்ள கூட்டரங்கில், பீ.எம்.டீ.ஹபீப் முஹம்மத் நடைபெற்றது.
அறக்கட்டளையின் அறங்காவலர்களான வி.ஐ.புகாரீ, டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, எஸ்.ஏ.ஜவாஹிர், வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஏ.எச்.நெய்னா ஸாஹிப், கே.எம்.ஸலீம், அஹ்மத் ஸுலைமான் ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், விரிவான கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) நமது ஆடிட்டர் அவர்கள், கூடுமான வரை பணப்பரிவர்த்தனைகளை காசோலை மூலம் ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதால், முதற்கட்டமாக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் பெயர்களிலுள்ள வங்கிக் கணக்கின் மூலம் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(2) நம் அறக்கட்டளையின் மூலம் நமதூர் கே.எம்.டீ. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயனாளிகளின் மருத்துவச் செலவினங்களுக்கு, காசோலை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது போல, வெளியூர் செல்லும் நமதூர் பயனாளிகளுக்கு மேல் சிகிச்சைக்காக வழிகாட்டவும், அங்குள்ள மருத்துவமனைகளுக்கு பணம் செலுத்தவும், சேவை மனப்பான்மை உடைய ஒருங்கிணைப்பாளரை நியமிப்பதென்றும், மேலும் இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் ஆறு மாத காலம் செய்வதென்றும், அது பயனளிக்கும் பட்சத்தில் தொடர்ந்து செய்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|