திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தொழிலதிபர் அருள்ராஜா தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து ஒருபக்கம் பேச்சு வார்த்தையை தொடங்கினாலும், மற்றொரு புறம் கட்சியில் இருந்து போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. தி.மு.க.வில் கடந்த மாதம் (ஜனவரி) 24ம் தேதி விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. முதலில் மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்தாலும், பின்னர் வேகம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
விருப்ப மனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், நேற்று தை அமாவாசை நாளில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் - தொண்டர்கள் போட்டிபோட்டு விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகம் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து பலர் ஆதரவாளர்களுடன் கார், வேன், பஸ் போன்றவற்றில் வந்திருந்ததால், வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல், அண்ணா அறிவாலய வளாகத்தில் நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரது ஆதரவாளர் தொழிலதிபர் அருள்ராஜா என்பவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் திருச்செந்தூர் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்:
www.tutyonline.com
|