ஹாங்காங் நாட்டில் வசித்து வரும் சீனர் ஜாக் சின் (வயது 70). கனடா, ஹாங்காங் நாடுகளின் கல்வித் துறையில் பல்லாண்டுகளாகப் பணியாற்றியவர் இவர்.
ஹாங்காங் நாட்டிலுள்ள காயலர்கள் உள்ளிட்ட தமிழர்களுக்கு சீன மொழியைக் கற்பது கடினமாக இருந்த காலச் சூழலில், தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்துள்ள இவர், தாமாக முன்வந்து - அங்குள்ள ஹாங்காங் இளம் இந்திய நண்பர் குழு நடத்தும் மொழி வகுப்பில், தமிழர்களுக்கு சீன மொழியை தமிழ் வழியிலேயே கற்றுக் கொடுக்கிறார்.
தன் இளமைப் பருவத்தில் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தமையால், பிறப்பால் சீனரான இவருக்கு தமிழ் மொழியுடன் நல்ல தொடர்பு உள்ளது.
தற்சமயம் பணி நிறைவு பெற்றுள்ள இவர், தான் வாழ்ந்த இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணப்பட்டு வந்துள்ளார். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வந்துள்ள இவர், நாளை (09.02.2016. செவ்வாய்க்கிழமை) மாலையில் காயல்பட்டினம் வருகை தரவுள்ளார்.
நாளை 16.30 மணி முதல் 18.30 மணி வரை நகரின் முக்கிய இடங்களைப் பார்த்த பின், 19.00 மணிக்கு, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், ஹாங்காங் வாழ் காயலர்கள் சார்பாக வரவேற்பளிக்கப்படவுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவருடன் பொதுமக்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ள பொதுமக்கள் - குறிப்பாக, ஹாங்காங் வாழ் காயலர்கள் இதையே அழைப்பாக ஏற்று, குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் - ஹாங்காங் YIFC Academy for Education & Enrichment அமைப்பின் சார்பில், அதன் பிரதிநிதி தைக்கா உபைதுல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
10.02.2016. புதன்கிழமையன்று காலையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஒன்றுகூடலின்போது அவர் மாணவர்களிடையே சில நிமிடங்கள் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YIFC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |