இந்தியாவின் 58ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில், 17 வயதுக்குட்பட்டோருக்கான சீனியர் பிரிவு இறுதிப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி சமனுடைப்பில் போராடித் தோற்றுள்ளது. விபரம் வருமாறு:-
17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள், ஜோலார்பேட்டை டான் பாஸ்கோ மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.
அரையிறுதிப் போட்டியில், கிருஷ்ணகிரி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்து எல்.கே.மேனிலைப்பள்ளி அணி விளையாடியது. எந்த அணியும் கோல் அடிக்காமல் போட்டி சமனில் முடிவுற்றதால், சமனடைப்பு முறை கையாளப்பட்டது. அதில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில், நெய்வேலி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியை எதிர்த்து எல்.கே.மேனிலைப்பள்ளி அணி விளையாடியது. இப்போட்டியிலும் ஈரணிகளும் முழு பலத்துடன் போராடிய போதிலும் கோல் எதுவும் அடிக்காததால், போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில், 3-2 என்ற கோல் கணக்கில் நெய்வேலி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. எல்.கே.மேனிலைப்பள்ளி அணி மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.
இறுதிப்போட்டியில் வென்ற அணி வீரர்களுக்கு தலா 1 ஆயிரத்து 200 ரூபாயும், இரண்டாமிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியினருக்கு தலா 800 ரூபாயும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.
எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களான ஜமால், செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் பயிற்சியாளர்களாகப் பணியாற்றினர். ஏ.எஸ்.எல்.செய்யித் இஸ்மாஈல் புகாரீ மேலாளராகப் பணியாற்றினார். இதற்கு முன் நடைபெற்ற சுப்ரடோ கோப்பைக்கான போட்டிகளிலும் இவரே மேலாளராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
எல்.கே.மேனிலைப்பள்ளி அணி விளையாடிய போட்டிகள் அனைத்தையும், திருப்பத்தூரில் தொழில் செய்யும் காயலர்களான சபூரா க்ரூப்ஸ் குழுத்தினர் திருப்பத்தூரிலிருந்து சென்று கண்டுகளித்ததுடன், அணியினருக்குத் தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் மனமுவந்து செய்ததை நன்றியுடன் நினைவுகூர்வதாக, எல்.கே.மேனிலைப்பள்ளி விளையாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படங்கள்:
பில்லு (எ) முத்து மொகுதூம்
தகவல்:
ஹிட்லர் சதக்
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|