செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 92-வது செயற்குழு கூட்டம் கடந்த 22.01.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு, ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருட்பெருங்கிருபையால் செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 92-வது செயற்குழு கூட்டம் கடந்த 22.01.2016 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா ஷரபிய்யாவில் உள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து
நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ.எம்.எம்.மூஸா சாகிப் தலைமை ஏற்று நடத்த சகோ. எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல்காதர் இறைமறை ஓத சகோ. ஓ.ஏ.சி.கிஜார் சலாஹுத்தீன் வருகை தந்த அனைவரையும் அகமகிழ வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
சமீபத்தில் தாயகம் சென்று திரும்பிய செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே. செய்யது மீரான் நம் எல்லோரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று செயல்படுத்தும் முகமாக K.M.T. மருத்துவமனை நிர்வாகம் இரவு நேர அவசர மருத்துவ சேவைக்கு மருத்துவர்,உதவியாளர் மற்றும் செவிலியர்களை பணியமர்த்தி தேவைபட்டால் வீட்டிற்கு சென்று சிகிச்சையளிக்க சிறப்பு வாகனமும் ஏற்பாடு செய்தும் கடந்த 08-01-2016 முதல் இந்த நல்லதோர் சேவை தொடங்கியுள்ள விபரத்தையும் மற்றும் உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான “ஷிபா” வின் சிறந்த சேவையையும் அலுவலகம் சென்று சந்தித்து வந்ததையும் விபரமாக மன்றத்தில் எடுத்துரைத்தும் மன்ற உறுப்பினர்கள் அது விசயமாக வினவிய வினாக்களுக்கு நிறைவான பதில் தந்ததுடன், கடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களையும் மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மன்றம் சார்ந்த நிகழ்வுகளையும், மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார்.
துணைத்தலைவர் சகோ. மருத்துவர் முஹம்மத் ஜியாத் சமீபத்தில் தாயகம் சென்றதில் நமது ஷிபா அலுவலகம் சென்று நிர்வாகிகளை சந்தித்தும் அதன் சேவைதனையும் அறிந்து வந்ததும் மற்றும் ஊர் நடப்புகளையும் பதிவு செய்தார்.
சமீபத்தில் தமிழக தலைநகர் சென்னை மற்றும் கடலூரில் பெருமழையின் காரணம்மாக பெரும் வெள்ளத்தில் சிக்கி பேரிழப்புகளுக்குள்ளான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வண்ணம் உருவான காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பிற்கும் மற்றும் சென்னை கல்வி வழிகாட்டு அமைப்பிற்கும் நம் மன்ற உறுப்பினர்களிடம் நிதி திரட்டப்பட்டு தனித்தனியாக இரு அமைப்பிற்கும் உடனடியாக அனுப்பி கொடுத்ததும் இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் நமக்கு நன்றி கூறி துவா செய்து கொண்டதும் விபரமாக எடுத்துரைத்தும் இதற்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றம் சார்பாக மனமார நன்றிகளை செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் தெரிவித்து கொண்டார்.
செயற்குழு உறுப்பினர் சகோ. சீனா எஸ்.எச். மொக்தூம் முஹம்மது உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான “ஷிபா” அறக்கட்டளையாக பதிவு (Registration) செய்த நடப்பும், புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்ட விபரமும் மற்றும் அது சார்ந்த செய்திகளையும் மிக விளக்கமாக எடுத்து கூறினார்.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பெறப்பட்ட சந்தா மற்றும் நன்கொடைகள் மேலும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் மருத்துவர் முஹம்மது ஜியாத் முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. சமீபத்தில் விபத்தில் காயமுற்றவர், புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள், சிறுநீரக குழாய் அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு, இருதய நோயாளியின் தொடர் சிகிச்சை, மஞ்சக்காமாலை பி பாதிப்பு, கண் அறுவை சிகிச்சை 8 நபர்கள் என நோய் பாதிப்புக்கு ஆளான நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 16 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு
அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
பணி நிமித்தமாக ஜித்தா மாற்றலாகி வந்துள்ள தம்மாம் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோ ஓ.எப்.சாதுலி இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன்னை சுய அறிமுகம் செய்தும் இம் மன்றத்தின் பணி மிக போற்றத்தக்கது, நம் ஊர் மக்களுக்காக பலவித நற்சேவைகளை செய்து கொண்டிருக்கிறீர்கள். இம்மன்ற உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றங்கள் மிக ஆரோக்கியமான முறையில் அமைந்திருப்பதும் இவைகளை நேரடியாக பார்த்து பெருமிதம் கொள்வதாயும், உங்கள் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி துஆ செய்து அமர்ந்தார். சகோ. ஏ.எம். செய்து அஹமது நன்றி நவில சகோ. பி.எஸ்.ஜே.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் உறுப்பினர்களின் நல்ல பல கருத்து பரிமாற்றத்திற்கு பின் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் மற்றும் சகோ.எம்.எம்.எஸ். ஷேக் அப்துல்காதர் இருவரின் அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
தீர்மானங்கள்:
1. உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பு “ஷிபா” சமீபத்தில் ஒருமனதாக அறக்கட்டளையாக பதிவு (Registration) செய்யப்பட்டமைக்கும் மேலும் புதிதாக பொறுபேற்றுள்ள அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் (Trustees) மனமார்ந்த வாழ்த்துக்களை இம்மன்றம் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றது.
2. எங்களது மன்றங்களை போன்று உலக நல மன்றங்கள் மற்றும் சமூகநல விரும்பிகளின் நீண்டகால பேராவலாகவும் ,கோரிக்கையாகவும் இருந்ததுமான நமதூரில் நோயாளிகளுக்கு நேரடியாக இல்லம் சென்று சிகிச்சை அளிக்கும் இரவு நேர அவசர மருத்துவ சிகிச்சையை தனது வெள்ளியாண்டு விழா காணும் சமயம் நகர மக்களுக்கு அர்பணித்துள்ளமைக்கு காயல் மருத்துவ அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் ,கே எம் டி மருத்துவமனைக்கும் நன்றி கலந்த பாராட்டினை எம் மன்றம் உளமார தெரிவித்து கொள்கின்றது.
3. நம் மன்றத்தின் 35-ஆவது பொதுக்குழு கூட்டம் காயலர் சங்கம நிகழ்வாக மிக உற்சாகத்துடன் ' இஸ்திராஹா ' எனும் ஓய்வு இல்லத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் வழமைப்போல் எதிர்வரும் 04-03-2016,வெள்ளிக்கிழமை காலை 08-00 மணி முதல் இரவு 08-00 மணி வரை நனிசிறப்புடன் நடத்திடவும் இதற்கான எல்லாவித ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்திட தனித்தனியாக குழுக்களை ஏற்படுத்தி இதன் மேலதிக விபரங்களை உறுப்பினர்கள் அனைவருக்கும் உடன் அறிய தருவதற்கும் முடிவு செய்தும் அனைவர்களும் குடும்பம் சகிதம் கலந்து சிறப்பிக்கவும் அன்புடன் அழைக்கப்படுகிறது.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
28.01.2016.
|