வரும் மார்ச் 10ஆம் நாளன்று விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மஹல்லா ஜமாஅத் விழிப்புணர்வு மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்த 50 வாகனங்களில் திரண்டு செல்வதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டணம் சதுக்கைத் தெருவிலுள்ள கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட நோக்கத்தை விவரித்த தோடு, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். முன்னதாக எஸ்.எம்.தைக்கா உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் அப்துல் ஹாலித், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.சேக் முஹம்மது, தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் எம்.சகாபுத்தீன், தூத்துக்குடி ஜவகர் நகர் கிளை செயலாளர் முஹம்மது நெய்னா,
ஏரல் நகர பொருளாளர் சாகுல் ஹமீது, சாத்தான்குளம் நகர தலைவர் மீராசாகிப், தெற்கு ஆத்தூர் நகர செயலாளர் செய்யது அப்பாஸ், குரும்பூர் நகர தலைவர் எம்.ஏ.சேக் பரீத் மற்றும் காயல் நகர 3-வது வார்டு மாவட்ட பிரதிநிதி எம்.கே.முஹம்மது அலி (ஹாஜி காக்கா), 5-வது வார்டு செயலாளர் என்.டி.அஹ்மது ஸலாஹுத்தீன், 4-வது வார்டு தலைவர் எம்.எல்.சேக்னா லெப்பை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். அவரதுவுரை பின்வருமாறு:-
விழுப்புரத்தில் மார்ச் 10 அன்று நடைபெறும் மஹல்லா ஜமாஅத் மாநில மாநாட்டின் நோக்கம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இது அரசிய ஆதாயத்திற்காக நடத்தப்படும் மாநாடு அல்ல. நமது சமுதாயத்தின் கட்டமைப்பை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். தமிழகத்தை பொறுத்த வரையில் 258 இயக்கங்கள் முஸ்லிம்கள் மத்தியில் உருவாகிவிட்டன. அவைகள் தாந்தோன்றி தனமாக செயல்படுகின்றன. மஹல்ல ஜமாஅத் தேவையில்லை. இயக்கங்கள் பெயரால் பள்ளி வாசல், தப்தர் போன்ற புதிய கொள்கைகளை புகுத்துகின்றனர். பாரம்பரியமாக நடந்து வந்த அனைத்தையும் அழிக்க துடிக்கின்றனர்.
உலகளாவிய அளவில் அரசியல் ஆதாயத்திற்காக யுத மதத்திலிருந்து மதம் மாரி இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொண்டதாக கூறி வந்தவர்கள் தங்களின் திட்டப்படி இஸ்லாத்தை சிதைக்கின்ற காரியத்தை மிகத் தீவிரமாக செய்து வருகின்றனர். அவர்களின் முன்னோடி முஸ்தப கமால் ஆட்டாதுர்க் அவர் எப்படி துருக்கியில் இஸ்லாத்தை சிதைத்து அதன் கலாச்சார சின்னங்களை அழித்து கிலாபத் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தாரோ, அவர் வழியில் இன்றைக்கு சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் திவிர வாத இயக்கத்தின் பெயரால் அபுபக்கர் பகுதாதி சமுதாயத்தை எப்படி வதைத்து கலாச்சார சின்னங்களை அழிக்கிறாரோ அப்படிதான் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். அதன் ஆரம்ப கட்ட பணிதான் பள்ளி வாசலை மையமாக கொண்ட மஹல்லா ஜமாஅத் கட்டுப்பாட்டை தகர்ப்பது.
இந்த ஆபத்தை நமது சமுதாயத்தின் மத்தியில் உணர்த்த வேண்டுமென்பதுதான் நமது பிரதான நோகம். மஹல்ல ஜமாஅத் என்பது 1437 வருடங்களுக்கு முன்னாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவியை உருவாக்கிய போது, சமூக கட்டமைப்பை அமைத்தார்கள். அதனை அடிப்படியாக கொண்டதுதான் பள்ளி வாசலை மையமாக கொண்ட ஜமாஅத். மஹல்லா ஜமாஅத் என நாம் அழைப்பது.
அந்த மஹல்ல ஜமாஅத் ஒரு அரசாங்கமாக செயல்பட வேண்டும். அங்கு மதரஸாக்கள் நடத்தப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். நம்முடைய பிரச்சனைகளை பேசி தீர்பதற்கு ஷரியத் பஞ்சாயத் நடத்தப்பட வேண்டும். ஏழை எளியோர்களுக்கு உதவ பைத்துல்மால்கள் உருவாக்கபட வேண்டும். மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். கல்வி வழிகாடுத்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். மீலாது விழாக்களை நடத்தி, சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த பணிகளை எல்லாம் மஹல்லா ஜமாஅத்துகள் செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்துவதற்காக 1977-ல் நம்முடைய பேராசிரிய பெருந்தகை எண்ணத்தில் உதித்து திருச்சியில் ஆரம்பம் செய்தார்கள், அதனை தொடர்ந்து மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாடு நடத்தப்பட்டு முன்மாதிரி மஹல்லாக்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதற்கு பிறகு பைத்துல்மால்களை பள்ளி வாசல்களில் உருவாக்கினார்கள். நம்மை பார்த்து கேரள மாநிலத்தில் பைத்துல் ரஹ்மான் என்று ஏற்படுத்தப்பட்டு வீடு இல்லாத ஏளியோர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள். தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கூட இருதய மற்றும் புற்று நோயாளிகளுக்கு பல உதவிகளை செய்து கொடுக்கிறார்கள், மஹல்லாக்களின் இந்த சேவை மனப்பான்மை விரிவடைய வேண்டும். மஹல்லாகள் அனைத்தும் தன்னிரைவு பெற்று திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே விழுப்புரத்தில் மார்ச் 10-தேதி மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாட்டில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க செய்யும் பெரும் பணி இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தது, அந்த பணியை வெற்றிகரமாக நாம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டணம் நகர 15-வது வார்டு தலைவர் ஆர்.பி.எஸ்.சம்சுத்தீன் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி சங்கர் மருத்துவமனையில் ஒரு மாதகாலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம்பெற இக்கூட்டத்தில் துஆ செய்யபட்டது.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 50 வாகனத்தில் மாநாடுக்கு செல்வது:
விழுப்புரம் நகரில் வரும் மார்ச் 10-தேதி நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஐம்பது வாகனங்களில் செல்வது என்றும், மஹல்லா ஜமாஅத் மாநில மாநாடு குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பர பணிகளை தீவிரப்படுத்துவது என்றும், மாநாட்டிற்கு மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், இளைஞ்சர்களை பெரும் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் ஆயத்த பணிகளை உடனே துவங்குமாறு மாவட்ட, நகர கிளை நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 – திமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய பாடுபடுவது.:
நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற பாடுபடுவது என்றும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை உடனடியாக மேற்கொள்ளவது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் 3 –தூத்துக்குடி மாவட்டத்தில் வாய்ப்புள்ள தொகுதி ஒன்றை பெற்றுதர வேண்டும்:
நடைபெறவுள்ள தமிழக சட்டபேரவை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாய்ப்புள்ள தொகுதி ஒன்றை பெற்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுவதற்கு ஆவனம் செய்யுமாறு மாநில தலைமையை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபுசாலி நன்றிக்கு பின், துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |