அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில், கடந்த மாதம் 14ம் தேதியன்று, நீங்களும் சாதிக்கலாம் என்ற மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு:
அரசு பொது தேர்வுகள் மற்றும் முழுஆண்டுத் தேர்வுகளை மாணவ மாணவியர் எதிர்நோக்கி உள்ளனர். இத்தேர்வுகளில் நமதூர் மாணவக் கண்மணிகள்
அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நன்நோக்கில் 'நீங்களும் சாதிக்கலாம்' என்ற நிகழ்ச்சி கடந்த 14-02-
2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9:30 மணி முதல், பிற்பகல் 01:00 மணிவரை நமது அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில்
வைத்து நடைபெற்றது - அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஜாமிவுல் அஜ்ஹர் ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமதூர் மாணவ மாணவியர்
வருகை தந்து பயன் பெற்றனர். 'கதை வழியே கணிதம் பயில்வோம்'இ 'தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?' (How to Score High
Marks?) போன்ற முக்கியத் தலைப்புகளில் தலைசிறந்த வல்லுனர்கள் மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
கட்டணங்கள் ஏதுமின்றி அனைத்து மாணவ மாணவியரையும் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், சிறந்த கேள்விகளைக்
கேட்டவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவிகள், பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டது. மாணவ மாணவியரின் சங்கம
நிகழ்ச்சி பற்றிய நேர்முக வர்ணனைணை நமது இணையதள வாசகர்களுக்காக தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்நிகழ்ச்சிக்கு நமது அல்ஜாமிவுல் அஜ்ஹர் ஜூம்ஆ பள்ளியின் தலைவர் ஹாஜி அபுல்ஹஸன் கலாமி அவர்கள் தலைமை தாங்கினார். நமதூர்
விஸ்டம் பப்லிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேராசியர் ஹனிஃபா அவர்களும், நமதூர் சமுதாயக் கல்லூரியின் தாளாளர் பேராசியர் புஹாரி
அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு வாழும் ராமானுஜர் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற பேராசியர் ஜெயச்சந்திரன் அவர்களும், சுமார் 30 ஆண்டுகாலம் மாணவர்களுக்கு
தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளித்து இதுவரை 600 மருத்துவர்களை உருவாக்கியுள்ள பேராசியர் மங்கை மணவாளன் அவர்களும் சிறப்பு
அழைப்பாளராக வருகை தந்து மாணாக்கருக்கு பயிற்சி அளித்தனர்.
முற்கூட்டியே வருகை தந்த மாணவ மாணவியர்!
மாணவர்களைப் பொறுத்தவரை காலை 9:30 மணிக்கு ஒரு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவித்தால், தமதமாக 10 மணிக்குத்தான் வருகை
தருவார்கள் என்ற எண்ணம் தவறானது என்பது இந்நிகழ்சியின் வாயிலாக பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு
முன்பாகவே மாணவ மாணவியர் சாரை சாரையாக அரங்கத்திற்கு வரத் துவங்கினர். 500 பேர்வரை வரலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
முற்கூட்டியே கணித்திருக்க, சுமார் 10 மணிவரை அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் வருகை தந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 1300-ஐ தொட்டது.
நாமக்கல் பள்ளிகள் உட்பட, தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்தும் பொதுத் தேர்வுகளில் மாநில அளவு தேர்ச்சி பெற்ற பல மாணவர்கள்
இப்பயிற்சிகளைப் பெற்று கற்றுத் தேர்ந்து சாதித்தவர்கள். இச்செய்திகள் மாணவர்களிடையே பரவியதால் தாங்களும் சாதிக்க வேண்டும் என்று
ஆர்வமுடன் கலந்து கொண்டதாக மாணவர்களில் சிலர் கூறினர். வருகை தந்த அனைத்து மாணவ மாணவியருக்கும், குறிப்பெழுத நோட்டுகள்,
பேனாக்கள், டோக்கன்கள், கருத்துப் படிவங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் அஹ்மதுமீரா தம்பி தொகுத்தளித்தார். மாணவர் அல்-ஹாபிழ் ஹாரிஸ் இறைமறையின்
வசனங்களை ஓதி துவக்கி வைக்க, நிகழ்ச்சியின் துவக்க உரையை ஹாஜி அபுல்ஹஸன் கலாமி அவர்கள் சுருக்கமாக ஆற்றினார். இந்நிகழ்ச்சி ஏன்
எதற்கு? என்ற தலைப்பில் சகோதரர் அஹமது ஸாஹிபு அறிமுக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கதை வழியே கணிதம் பயில்வோம் என்ற
தலைப்பில் பேராசியர் ஜெயச்சந்திரன் அவர்கள் தனது பயிற்சி வகுப்பைத் துவங்கினார்.
பேராசியர் ஜெயச்சந்திரன் அவர்கள் உரையிலிருந்து:
மாணவர்களிடம் ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு கேட்டு அதன் கிழமையை சரியாகச் சொன்னது அனைவரையும் வியக்க வைத்தது. பின்னர் இது
எப்படி சாத்தியம்? என்பதையும் விளக்கினார்.
ஒரு எண்ணிற்கான இரண்டு அடுக்கு (Square), மூன்றடுக்கு (Cube) மற்றும் அடுக்குத் தொடர் (Series) போன்ற கணித சூத்திரங்களை எவ்வாறு
புரிந்து கொண்டு கணக்கிடுவது என்பதை விளக்கினார்.
நியூட்டனின் இயக்க விதிகளை ஒரு எருமை மாட்டின் கதையைச் சொல்லி விளக்கியது அனைவரையும் கவர்ந்தது. அதாவது, ஒரு தெரு முனையில்
எருமை மாடு ஒன்றுசென்றது. அதை ஒரு மாணவன் குச்சியை எடுத்து வேகமாகக் குத்தினாhன். அது 'மா' என்று கத்திக் கொண்டு அவனை
முட்டியது - இது கதை.
பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும் (F=MA, ie Force = Mass x Accelaration).
அதாவது அந்த மாணவன் குச்சியை எடுத்து வேகமாகக் குத்தியதால் எருமைமாடு 'மா' என்று கத்தியதை நினைவில் கொள்ளலாம். அதுபோல
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. (For Every action, there is an equal and opposite reaction) மாட்டை நாம்
உதைத்தால், மாடும் நம்மை உதைக்கும் என்றார்.
பேராசிரியர் ஹனீஃபா அவர்கள் அறிவுரையிலிருந்து :
மாணவர்களே! முதலில் நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகுங்கள். அடுத்தவரைப் போல ஆக வேண்டும் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். தேர்வு
காலங்களில் விடியற்காலை வேலையில்தான் எழுந்து படிக்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு எப்போது படித்தால் மனதில் பதியும் என்று
நினைக்கின்றீர்களோ அந்த நேரத்தில் படியுங்கள்.
தேர்வு குறித்து அச்சமோ, பதட்டமோ அடையத் தேவையே இல்லை. மேலும் இதுவரை படிக்காத புதிய பாடங்களை படிக்கும் நேரமல்ல தேர்வுநாள்.
தேர்வு அறையில் கவனத்தை சிதைவடையச் செய்ய வேண்டாம்.
விடைகளின் பிரிவுகளை மாற்றி மாற்றி குழப்பி எழுத வேண்டாம். இரண்டு மதிப்பெண்கள் பிரிவுகளின் கேள்விக்கு விடை எழுத தொடங்கினால் அதன்
பகுதியை முழுவதுமாக முடித்துவிட்டு, ஐந்து மதிப்பெண்கள் பகுதிக்கு செல்லுங்கள். விடை தெரியாத கேள்விகளுக்கு இடம் விட்டு வையுங்கள்.
மூன்று மணி நேரங்கள் தேர்வு என்றால் குறைந்தது கால் மணி நேரத்திற்கு முன்னரே விடைகள் அனைத்தையும் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். மீதி
கால் மணி நேரங்களும் உங்கள் பதில்களை சரி பார்க்க உதவும்.
இன்னும் அதிகமான உணவை வயிறு நிரம்ப உண்டுவிட்டு தேர்வு அறைக்குள் செல்லாதீர்கள். அதனால் தூக்கதம்தான் வரும். காய்கறிகள் போன்ற
எளிதாக ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.
மேலும் அரசு பொதுத் தேர்வுகள் என்பது தேர்ச்சி பெறுவதற்கு மிகவும் எளிதான ஒரு தேர்வுமுறை. அதில் தோல்வியடைபவன் உண்மையிலேயே
திறமையற்றவனாக கருதப்படுவான்.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை என்றும் மற்றொரு மாணவரோடு ஒப்பிட்டுக் கூறாதீர்கள். ஆசிரியர்களே! தேர்வு நாட்களில் நீ இத்தனை
மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும், எனவே படி படி என்று மாணவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று அழகிய அறிவுரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளர் பேராசிரியர் மங்கை மணவாளன் அவர்கள் பயிற்சியளித்தார்.
பேராசிரியர் மங்கை மணவாளன் அவர்களின் அறிவுரையிலிருந்து சில பகுதிகள் :
மாணவ மாணவியரே! மாதா பிதா குரு தெய்வம் என்று நீங்கள் படித்திருப்பீர்கள். முதலில் உங்கள் தாய் தந்தையரை மதித்து நடங்கள்.
அவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்களுக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள். கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு உங்களை படிக்க வைக்கிறார்கள்
என்பதை சற்று எண்ணிப் பாருங்கள் உங்களின் கவனத்தை படிப்பில் செலுத்த அது முதற்படியாக இருக்கும்.
அடுத்ததாக உங்கள் ஆசிரியர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆசிரியர்களை மதிக்கத் துவங்கினாலே கல்வி ஞானம் உங்களுக்குப் பொங்கி
வருவதை உணரலாம்.
தேர்வு எழுதப் போகும் முன்னர் அனைத்து பாடங்களின் கேள்விகளையும் படித்து முடித்து விட்டுத்தான் தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்ற
நிலை இன்றில்லை. பாடங்களில் வரும் கேள்விகளின் சாய்ஸ் ஆப்ஸன் - விருப்பக் கேள்விகள் அறிந்து படிக்க வேண்டும். இது நீங்கள் அதிக
மதிப்பெண்கள் பெற உதவும்.
தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமானால் முதலில் நீங்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும். அதற்காக ஒரு கால அட்டவணையை
நீங்களே தயார் செய்யுங்கள். கணிதம், வேதியல், இயற்பியல் சூத்திரங்களை எழுதி உங்கள் வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்து, அடிக்கடி அவற்றை
பார்வையிடுங்கள். சூத்திரங்கள் மறக்காமல் இருக்க இது உதவும்.
எடுத்த உடனேயே கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற ஒருமதிப் பெண்களுக்குரிய கேள்விகளுக்கு பதில் எழுதத் தொடங்காதீர்கள். முதலில்
வினாத்தாளை முழுவதுமாகப் படியுங்கள்.
அதிகாலை காலையில் எழுந்ததும் உங்கள் கடன்களை முடித்துவிட்டு ரிலாக்ஸாக படிப்பை தொடருங்கள். ஒரே இடத்திpல் அமர்ந்து கொண்டு ஒரே
பாடத்தை படித்துக் கொண்டிராதீர்கள். நீங்கள் சோர்வடையும் போது இளைப்பாருங்கள். நீங்கள் அமர்ந்த இடத்தையும் படிக்கும் பாடத்தையும் மாற்றிக்
கொள்ளுங்கள்.
உணவுகள் முக்கியப் பங்காற்றும். கனரக உணவுகளைத் தவிர்த்து எளிதில் ஜீரமாகக்கூடிய முள்ளங்கி, பொரக்கோலி போன்ற சத்துக்கள் நிறைந்த
உணவுகளை உட்கொள்ளுங்கள் என்று அறிவுரை நிகழ்த்தினார்.
'நீங்களும் சாதிக்கலாம்' என்ற இந்நிகழச்சியின் தலைப்பில் 'கலாம்' என்ற சொல்லை நான் காண்கிறேன். இது மறைந்த அப்துல் கலாம் அவர்களை
எனக்கு நினைவூட்டுகிறது. நீங்களும் அந்த அப்துல் கலாமைப் போல சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவியர்களின் கேள்விகளுக்கு பேராசியர்கள் விடையளித்தனர். பின்னர்; கலந்து கொண்ட அனைவருக்கும்
நல்லொழுக்க போதனையை மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி அவர்கள் வழங்கினார்கள். மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக
பள்ளியின் செயலாளர் ஹாஜி AAC நவாஸ் அஹமது அவர்கள் நன்றியுரை நவிழ, கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது –
அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
மௌலவி நூஹூ அல்தாஃபி
தொகுப்பு:
M.N.அஹமது ஸாஹிபு |