நிகழும் 2016ஆம் ஆண்டில் 15 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் நலப்பணிகள் செய்திட சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 12.02.2016 வெள்ளிக்கிழமையன்று 19.45 மணி முதல் 21.20 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
புதியவர்கள் பொறுப்பேற்க முன்வருக! - தலைவர்:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்ற அங்கத்தினரின் தொடரான ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இதுவரை மன்றப் பொறுப்புகளில் இடம்பெற்றிராத உறுப்பினர்கள், அந்த அழகிய அனுபவத்தைப் பெற்றிடுவதற்காக தாமாக முன்வந்து பொறுப்பேற்று, நகர்நலப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இமாமுக்கு நன்றி:
சுமார் 6 ஆண்டு காலம் சிங்கப்பூரிலுள்ள பள்ளியில் இமாமாகப் பணியாற்றி, விடைபெற்றுச் செல்லும் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ்வின் வருங்காலம் சிறக்க வாழ்த்திப் பிரார்த்தித்த அவர், சிங்கையில் இருந்த காலத்தில் மன்றப் பணிகளுக்கு அவரளித்த ஒத்துழைப்புகளுக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வாசித்து, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகளை விளக்கிப் பேசினார். மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும் செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார். 2013 & 2014 பருவத்திற்கான மன்ற நடவடிக்கைகள் அனைத்தும், சிங்கப்பூர் அரசின் சங்கப் பதிவாளருக்கு முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, செயற்குழு உறுப்பினர் எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ கூட்டத்தில் சமர்ப்பித்ததோடு, மன்ற உறுப்பினர்களின் நிலுவைச் சந்தாக்கள் விரைவில் வசூலிக்கப்படும் என்று கூறினார்.
நிகழாண்டு நிதிநிலையறிக்கை:
மன்றத்தின் நடப்பு 2016ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையை (பட்ஜெட்) துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் கூட்டத்தில் வெளியிட்டார்.
31,400 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் 15 லட்சத்து 55 ஆயிரம்) செலவு மதிப்பீட்டில், நடப்பாண்டில் நலத்திட்டப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மன்ற உறுப்பினர்களின் சந்தா மூலம் பெறப்படும் நிதியைப் போல, ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியே மன்றத்தின் அடுத்த மிக முக்கிய நிதியாதாரமாக உள்ளதாகவும், எனவே, அத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் தொடர்ந்து தாராளமாக நிதியளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதுகாலம் வரை, மன்றப் பணிகளுக்கு அயராமல் தாராள நன்கொடைகளைத் தந்துகொண்டிருக்கும் உறுப்பினர்கள் யாவருக்கும் நன்றி தெரிவித்த அவர், அனைத்து உறுப்பினர்களும் தமது இல்லங்களில் மன்றத்தின் உண்டியலை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், இதனால் நம்மையும் அறியாமல் நல்லதொரு நிதியை மன்றப் பணிகளுக்கு வழங்கிட இயலும் என்றும் கூறினார்.
நடப்பாண்டில் கல்வி மற்றும் மருத்துவ உதவி ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நிதிநிலையறிக்கை குறித்த மீளாய்வு:
தொடர்ந்து பேசிய பொருளாளர் ஏ.எம்.உதுமான், மன்றத்தின் நிகழாண்டு பட்ஜெட் குறித்து, அடுத்து நடைபெறவுள்ள மன்றப் பொதுக்குழுக் கூட்டத்தில் – உறுப்பினர்களின் பின்னூட்டத்தைப் (feed back) பெற்ற பின், இரண்டாம் காலாண்டில் மீளாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
நலத்திட்டப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு:
பல்வேறு தேவைகளை முன்வைத்து மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களுள் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றுக்கு,
கல்வி உதவித்தொகையாக 40,000 ரூபாய்
மருத்துவ உதவித்தொகையாக 60,000 ரூபாய்
மனிதாபிமான உதவியாக 4,500 ரூபாய்
இதர உதவிகளுக்காக 4,500 ரூபாய்
நிதியொதுக்கீடு செய்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சிங்கப்பூரிலும் தொண்டு:
சிங்கப்பூரிலுள்ள முஹம்மதிய்யா மாணவர் நல இல்லத்திற்குச் சென்ற வந்த விபரம் குறித்து செயலாளர் விளக்கிப் பேசினார்.
நாம் பொருளீட்டும் இந்நாட்டிலும் நம்மாலியன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நன்னோக்குடன், இந்த இல்லத்தில் தங்கிப் பயின்று வரும் 60 மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு காலை உணவுக்குத் தேவைப்படும் பொருட்களுக்கு மன்றம் பொறுப்பேற்கவுள்ளதாகக் கூறிய அவர், 05.03.2016. அன்று அந்த இல்லத்திற்கு மன்றத்தின் சார்பில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு வாரியாக உறுப்பினர்களிடம் கருத்து சேகரிக்க திட்டம்:
இனி வருங்காலங்களில், மன்றப் பணிகளை இன்னும் மெருகேற்றி சிறப்புற செயல்படுத்தும் நோக்கில், வரும் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றப் பணிகள் குறித்த தமது கருத்துக்களை - செயல்திட்டங்கள், ஒன்றுகூடல்கள், கூட்டங்கள், சந்தா, நன்கொடை, செயற்குழுவின் செயல்பாட்டுத் திறன், உதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள், உள்ளூரில் மேற்கொள்ளப்படும் பொதுநலப் பணிகள், மன்றத்தின் வருடாந்திர நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை, வேலைவாய்ப்பு நலத் திட்டம், விளையாட்டு என தலைப்பு வாரியாக அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுப் பெறுவதென்று தீர்மானிக்கப்பட்டதுடன்,
இதனடிப்படையில் உறுப்பினர்கள் கருத்தைப் பெறுவதற்கான கேள்வித் தாளை ஆயத்தம் செய்திட - எம்.எம்.அப்துல் காதிர், எஸ்.எம்.என்.அப்துல் காதிர், எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், சோனா அபூபக்கர் ஸித்தீக் ஆகியோரடங்கிய குழுவிடம் பொறுப்பளிக்கப்பட்டது.
இந்த தகவல் சேகரிப்பிற்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதர அம்சங்கள்...
>>> மைக்ரோகாயல் அமைப்பின் காயல் மெடிக்கல் கார்ட் திட்டம் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டதுடன், உறுப்பினர்கள் தமக்கு அறிமுகமான - தகுதியுள்ளோரை ஊக்கப்படுத்தி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
>>> வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு இதுவரை நடத்தி முடிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டிகள் குறித்து விளக்கிய - அதற்கான குழுத் தலைவர் எம்.எம்.அப்துல் காதிர், மகளிருக்கான Snow Bowling, ஆண்களுக்கான வினாடி-வினா, இறகுப்பந்து, கால்பந்து பெனாலிட்டி கிக் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், திருமறை குர்ஆன் மனனம் மற்றும் அது தொடர்பான வினாடி-வினா போட்டியும் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும்,
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் - போட்டிகள் யாவும், பொதுக்குழு நிகழ்வு நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், செயற்குழு உறுப்பினர் சொனா முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |