காயல்பட்டினத்தில் அரசுத் தேர்வெழுதும் மாணவியருக்கு மகளிர் மட்டும் அமரும் தேர்வறை கோரி “நடப்பது என்ன?” சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதோடு, மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வெழுதத் தடையில்லை என தேர்வுத் துறை மூலம் தகவலும் பெறப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினத்தில் அரசுத் தேர்வெழுதும் மாணவியர் ஒரு சிலருக்கு - சில நேரங்களில், மாணவர்களுடன் தேர்வு எழுதும் அறை (EXAMINATION HALL) ஒதுக்கப்படுவதால் தேர்வெழுதத் தயங்குவதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுவிடம் சில மாணவியரின் பெற்றோர் முறையிட்டு, தம் மக்கள் தயக்கமின்றித் தேர்வெழுதிடுவதற்கான வசதியை - முயற்சித்துப் பெற்றுத் தருமாறு கோரினர்.
இன்னும் சில நாட்களில் தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக, சென்னையிலுள்ள - கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் டாக்டர் வசுந்தரா தேவி ஆகியோரிடம் நேற்று (27.02.2017. திங்கட்கிழமை) நேரில் மனு அளிக்கப்பட்டது.
பல வாரங்களுக்கு முன்பே தேர்வறைகள் ஒதுக்கும் பணி நிறைவுற்றுவிட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், அடுத்த ஆண்டு இது தொடர்பாகப் பரிசீலக்கலாம் என்றும், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத எந்தத் தடையுமில்லை என்றும், இதுகுறித்து தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்துவதாகவும் உறுதியளித்தனர்.
தேர்வெழுதும் மாணவியர் - ஹிஜாப் அணிய தடை செய்யக்கூடாது என காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், 2015ஆம் ஆண்டு, கல்வித் துறை அமைச்சர் & அதிகாரிகளிடம் மனு வழங்கியதையடுத்து, இது தொடர்பாக - மாவட்ட தலைமை கல்வி அதிகாரிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|