மண்ணெண்ணெய் வாங்காதவர்களுக்கு மண்ணெண்ணெய் வாங்கியதற்கான குறுந்தகவல் அனுப்பப்பட்ட புகாரில் CP085 ரேஷன் கடை (மேலப்பள்ளி அருகில்) ரேஷன் கடையின் பொறுப்பாளர் ராக்கம்மாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் செயல்புரியும் 15 ரேஷன் கடைகளில் ஒன்று மேலப்பள்ளி அருகில் உள்ள ரேஷன் கடை (CP085). இந்த கடையில் - வெள்ளியன்று (24-2-2017), தான் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கியதாக குறுந்தகவல் (SMS) வந்துள்ளது என்றும், ஆனால் தான் மண்ணெண்ணெய் வாங்கவில்லை என்றும், நடப்பது என்ன? குழுமத்தின் - 5வது வார்டு பெண்கள் குழும உறுப்பினர் ஒருவர் பதிவு போட்டிருந்தார். அதனை தொடர்ந்து - மற்றொரு பெண்கள் குழும உறுப்பினரும், தனக்கும் இது போல குறுந்தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். தாங்கள் பெற்ற குறுந்தகவலையும் அவர்கள் குழுமத்தில் பகிர்ந்திருந்தனர்.
பெண்கள் குழும நிர்வாகிகள் மூலமாக பெறப்பட்ட இந்த தகவல்கள் - உடனடியாக, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் எஸ்.மதுமதி IAS, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS, மாவட்ட வழங்கல் அலுவலர் (DSO) மற்றும் தாலுகா வழங்கல் அலுவலர் (TSO) ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் பெறப்பட்டவுடன், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க - தான் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர், நடப்பது என்ன? குழுமத்திற்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுரையின் பெயரில் தாலுகா வழங்கல் அலுவலர் (TSO) திரு கோபால் - நடப்பது என்ன? ஆண் மற்றும் பெண்கள் நிர்வாகிகளை காயல்பட்டினத்தில், சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார். புகார் தெரிவித்த குழும அங்கத்தினரும் - இந்த விசாரணையில் கலந்துக்கொண்டனர்.
விசாரணையின் போது - வெள்ளியன்று (24-2-2017) மதியம் 12:30 முதல் 1:30 வரை, அந்த ரேஷன் கடையில் நடந்த 67 மண்ணெண்ணெய் விற்பனைகளும் (200 லிட்டருக்கும் அதிகம்) சந்தேகத்திற்குரியவை என்பதற்கான ஆதாரங்கள் தாலுகா வழங்கல் அலுவலரிடம், நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
இது குறித்து விசாரணைகள் மேற்கொண்ட தாலுகா வழங்கல் அலுவலர், அக்கடையின் பொறுப்பாளர் ராக்கம்மாள் - இடைநீக்கம் (SUSPEND) செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை இன்று நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கியுள்ளார்.
விழிப்புணர்வுடன் தங்கள் புகாரை பதிவு செய்த 5வது வார்டு பெண்கள் குழும அங்கத்தினர்களுக்கும், மேல் நடவடிக்கை எடுக்க பெரிதும் துணைப்புரிந்த நடப்பது என்ன? பெண்கள் குழும நிர்வாகிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |