தமிழகத்தில் இன்னும் 90 லட்சம் குழந்தைகள், சிறுவர்களுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி குறித்த சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி ஆய்வுக் கூட்டம், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று மாலை நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பள்ளிகல்வித்துறைச் செயலாளர் த.சபிதா, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) க.குழந்தைசாமி, மருத்துவக் கல்விஇயக்குநர் (டிஎம்இ) நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தட்டம்மை-ரூபெல்லா நோய்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் அனைத்து குழந்தைகளுக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் பிப்ரவரி 28-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மார்ச் 14-ம் தேதி வரை தடுப்பூசி முகாம் செயல்பட உள்ளது. 100 சதவீதம் அனைத்து குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காகவே முகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 85 லட்சம் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 90 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் போலியோவைப் போலவே தட்டம்மை-ரூபெல்லா நோய்களை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியும்.
ரூ.1,000 மதிப்புள்ள இந்த தடுப்பூசி எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பக்கவிளைவுகளோ, பாதிப்போ ஏற்படாது. மிகவும் பாதுகாப்பானது. எனவே, இந்த தடுப்பூசி குறித்த சமூக வலைதளங்களில் உலாவரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
தகவல்:
தி இந்து |