மருத்துவப் படிப்புக்கான NEET நுழைவுத் தேர்வுக்கு Online மூலம் விண்ணப்பிக்க, காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, காயல்பட்டினம் நகரின் ப்ளஸ் 2 மாணவ-மாணவியருக்கு இக்ராஃ சார்பில், அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை:-
திருத்தியமைக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தின்படி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளில் அனைத்து இடங்களும் நீட் (National Eligibility cum Entrance Test - NEET) நுழைவுத்தேர்வு ரேங்க் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் என்று நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.எனவே அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள், தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எதிர்வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு சிரமமாக இருக்கும் எனக்கருதி சென்ற வருடம் இத்தேர்வை எழுதுவதிலிருந்து தமிழகம் விளக்கு பெற்றிருந்தது. இந்த வருடம் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விளக்களிக்கும் மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.எனினும் இப்போது வரை அது குறித்த ஒப்புதல் கிடைக்கவில்லையாதலால் இந்த வருடம் நீட் தேர்வை கட்டாயம் எழுதியாக வேண்டிய நிலையே தற்போது வரை உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு இல்லை என நினைத்துக் கொண்டு பல மாணவ-மாணவியர் இப்போது வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதாக தெரிகிறது.ஆனால் இதற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டே தினங்கள் (மார்ச் 1, 2017) மட்டுமே உள்ள நிலையில், இதுவரை இதற்கு விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர் உடனே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வகையில் இக்ராஃ கல்விச் சங்கம் அவசர ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து இக்ராஃ மூலம் இன்று நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களை சந்தித்து இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவேளை நீட் தேர்வுக்கு தமிழகம் விலக்கு பெற்றாலும் கூட , அரசு மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் 15 சதவீத ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சேர வாய்ப்புள்ளது. அல்லாமல் நீட் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வந்தால், தேர்வு எழுதினால் மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் கலந்தாய்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே பிளஸ் டூ தேர்வில் இயற்பியல் ,வேதியியல்,உயிரியல் அல்லது பயோ டெக்னாலஜி மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளை எடுத்து படிக்கும், (மருத்துவம் படிக்க எண்ணியுள்ள) மாணவ-மாணவிகள் தாமதிக்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்.(இந்த ஆண்டு முதல் தமிழிலும் நீட் தேர்வு வினாத்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). 28-02-2017 செவ்வாய் காலை 10 மணி முதல் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் (கீழநெயினா தெரு,காயல்பட்டினம் ) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர் தேவையான ஆவணங்களை (ஆதார் கார்டு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், Email id & password, குடும்ப வருமான விபரம், கட்டணம் ரூபாய் 1400) கொண்டு வந்து விண்ணப்பித்துக் கொள்ளவும். வரும் மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காதவர்கள் நீட் தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீட் தேர்வுக்கான Coaching குறித்தும் இக்ராஃ கல்விச் சங்கம் ஆலோசித்து வருகிறது. எனவே நீட் தேர்வு எழுதவிருப்பவர்கள் இக்ராஃ அலுவலகத்தை தொடர்பு கொண்டு ( தொலைபேசி எண் : 285650 ) தங்களின் பெயர், விலாசம், தொலைபேசி விபரங்களை பதிவு செய்து கொண்டால் அது குறித்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். மாணவ-மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இதைப் படிக்கும் சகோதர, சகோதரிகள் தங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்கள், அறிமுகமானவர்களுக்கோ இதன் முக்கியத்துவத்தை தெரிவித்து, விண்ணப்பிக்காதவர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
|