காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் உள்ள குடும்ப அட்டைகளின் பயனாளிகள் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதாகவும், 16 குடும்ப அட்டைகள் மட்டுமே கைபேசி எண் இணைக்கப்படாதவை எனவும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் - நவம்பர் மாத இறுதியில் இருந்த குடும்ப அட்டைகள் குறித்த புள்ளிவிவரங்களோடு ஒப்பிடுகையில், தற்போது பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
>>> நகரில் புழக்கத்தில் இருந்த அட்டைகளின் எண்ணிக்கை சுமார் 192 குறைந்துள்ளது.
>>> நவம்பர் இறுதியில் புழக்கத்தில் இருந்த மொத்த அட்டைகளின் எண்ணிக்கை 9603. தற்போது (19-2-2017), அது 9411 ஆகக் குறைந்துள்ளது.
குடும்ப அட்டைகளின் பயனாளிகள் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. நவம்பர் இறுதியில் 47,350 ஆக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை, தற்போது 35,414 ஆகக் குறைந்துள்ளது. ஏறத்தாழ 12,000 பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இவை தவிர, மொத்த பயனாளிகளில் - 34952 பேர் தமது ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைத்து விட்டதாகவும் அரசு இணையதளம் (tnpds.com) தெரிவிக்கிறது.
மேலும், நகரில் புழக்கத்தில் உள்ள 9411 அட்டைகளுள், 16 அட்டைகளைத் தவிர அனைத்து அட்டைகளுடனும், கைபேசி எண்கள் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் அரசு இணையதளம் (tnpds.com) தெரிவிக்கிறது.
^^^^^^^ இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்கள் - சரியானவைதானா?
^^^^^^^ பொருட்கள் வாங்கும்போது - தாங்கள் வாங்கிய பொருட்கள் குறித்த குறுந்தகவலை (SMS), பொதுமக்கள் தமது கைபேசியில் பெறுகின்றனரா?
^^^^^^^ அவ்வாறு வரும் குறுந்தகவல்களில் - தாங்கள் வாங்காத பொருட்கள் குறித்த தகவல்களும் வருகிறதா?
^^^^^^^ தமது குடும்ப அட்டையில் இணைக்கப்படவேண்டிய அனைவரும் இணைக்கப்பட்டுவிட்டனரா?
இது போன்று பல கேள்விகள் உள்ளன.
இறைவன் நாடினால் – இவை குறித்த, விரிவான விழிப்புணர்வு முயற்சிகளை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மேற்கொள்ளவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |