காயல்பட்டினத்தில் 2ஆவது பைப்லைன் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ், உள்ளூரில் குடிநீர் வினியோகக் குழாய்கள் பதிக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - சென்னையிலுள்ள அரசு முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) ஆகியோருக்கு நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் நகராட்சியில் 30 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம், பொன்னன்குறிச்சி அருகே - தாமிரபரணி படுகையிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவுக்குக் குழாய்கள் பதிக்கப்பட்டு (PUMPING MAIN LINE), அதன் வழியே நகருக்குக் குடிநீர் கொண்டுவரப்படவுள்ளது. இது காயல்பட்டினம் நகருக்கு மட்டுமான சிறப்புத் திட்டம்; கூட்டு குடிநீர் திட்டம் அல்ல.
இத்திட்டப்படி, அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் - நகரில் புதிதாக உள்ளூரில் பதிக்கப்படும் குழாய்கள் வாயிலாக (INTERNAL DISTRIBUTION LINE) - வீடுகளுக்கு புது இணைப்புகள் (HOUSE SERVICE CONNECTIONS) வழங்கப்பட்டு, அதன் மூலம் - விநியோகம் செய்யபபடவேண்டும்.
தற்போது நகரில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைக் கருத்திற்கொண்டு, பொன்னன்குறிச்சியிலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை, ஏற்கனவே உள்ள பழைய இணைப்புகள் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்வே.
காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் வழங்கும் துறையில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் - பல ஆண்டுகளாக செய்துவந்த முறைகேடுகள் காரணமாக, மேல ஆத்தூரிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - TWAD மூலம் அன்றாடம் வழங்கப்பட்ட 20 லட்சம் லிட்டர் குடிநீரை, ஒரு வாரம் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே - பழைய குழாய்கள் மூலம் நகரில் விநியோகம் செய்யப்பட்டது.
இரண்டாம் குடிநீர் திட்டத்தை முறைகேடுகள் நடைபெறாமல் பாதுகாத்திட, காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது குடிநீர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிஜார் அஹ்மத், இரவு நேர காவலர் பொறுப்பில் அதிகாரப்பூர்வமாக இருந்துகொண்டு - குடிநீர் விநியோகப் பணியைச் செய்யும் பாஸ்கரன் ஆகியோரை - காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து பணியிடம் மாற்ற செய்யக் கோரி, “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி தற்போது நகர பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது, பொன்னங்குறிச்சி தண்ணீரும், அதே குளறுபடிகள் நிறைந்த, பழைய குழாய்கள் மூலம்தான் தற்காலிகமாக வழங்கப்படவுள்ளது.
எனவே - உள்ளூர் குழாய்கள் பதிக்கும் பணிகளையும், வீட்டு இணைப்புகள் வழங்கும் பணிகளையும் வேகப்படுத்தக் கோரி, சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி IAS, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் கோ.ப்ரகாஷ் IAS ஆகியோரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக நேரில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.
புதிய குடிநீர் திட்டப்படி, காயல்பட்டினத்தில் உள்ளூர் வினியோகக் குழாய்களைப் பதிக்க்கும் பணி பின்வருமாறு மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:-
மண்டலம் 1:
வார்டுகள் 1,2,3,4,5,6,7,8,18 (பகுதி)
18.226 கிலோமீட்டர்
மண்டலம் 2:
வார்டுகள் 9,10,11,12,13 (பகுதி)
16.206 கிலோமீட்டர்
மண்டலம் 3:
வார்டுகள் 13(பகுதி),14,15,16,17,18 (பகுதி)
16.632 கிலோமீட்டர்
இம்மூன்று மண்டலங்களையும் இணைத்து - பதிக்கப்பட வேண்டிய மொத்தக் குழாய்களின் நீளம் - சுமார் 52 கிலோ மீட்டர் ஆகும். இதில் 75 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவுற்றுள்ளதாகத் தெரிகிறது.
|