காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கை செயல்பட விடாமல் முடக்கிய ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளைக் கூண்டோடு மாற்றியதாக, முறைமன்ற நடுவர் சோ.அய்யர் IAS ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
"காயல்பட்டினம் நகராட்சியின் பெண் நகராட்சி தலைவரைச் செயல்பட விடாமல் முடக்கிவிட்டு, ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல் செயல்படுவதாக புகார் வந்தது... நடுவத்தின் விசாரணையில் அது உண்மை என தெரிய வந்ததால் - நகராட்சி ஆணையர், பொறியாளர் உள்ளிட்ட அத்தனை உயரதிகாரிகளும் கூண்டோடு அங்கிருந்து மாற்றப்பட்டனர்."
############################
"உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் மீது 2 ஆண்டுகளில் 840 புகார்கள்: உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் தகவல்" என்ற தலைப்பில் - இன்று (மார்ச் 6, 2017) செய்தி வெளியிட்டுள்ள "தி இந்து" தமிழ் நாளிதழ், காயல்பட்டினம் நகராட்சி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் நடுவர் சோ.அய்யர் IAS கூறியதாக பதிவு செய்த வாசகங்களே மேலே உள்ளவை.
"தி இந்து" நாளிதழில் வெளிவந்துள்ள நடுவரின் பேட்டி - காயல்பட்டினம் நகராட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பிரச்சனைகளின் உண்மையான காரணகர்த்தாக்களை அடையாளம் காட்டியுள்ளது.
ஒரு பெண்ணாக இருந்து, ஒரே ஒரு நேர்மையான உறுப்பினரின் ஆதரவை மட்டும் கொண்டிருந்த நிலையில் - நகரின் ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கங்கள், ஊழலில் திளைத்த அரசியல் கட்சிகள் (சமுதாய கட்சிகள் என தங்களை பறைசாற்றிக் கொண்ட கட்சிகள் உட்பட) ஆகியோரின் அவதூறு செயல்பாடுகளுக்கு இடையிலும் - இந்நகருக்கு தன்னால் முடிந்த அனைத்துப் பணிகளையும் நிறைவாகச் செய்து முடித்த – நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களின் நேர்மையான செயல்பாடுகளை நன்றியோடு நினைவு கூறும் தருணம் இது!
உள்ளாட்சி மன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் - ஊழலுக்கு ஆதரவான அமைப்புகள், கட்சிகளைப் பொதுமக்கள் புறக்கணித்து, நேர்மையானவர்களை நகர்மன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி, உறுதி எடுக்கவேண்டிய தருணம் இது!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|