முறைமன்ற நடுவத்தின் ஆணைப்படி உருவாக்கப்படும் விசாரணை குழுவில் நகராட்சி நிர்வாகத்துறையின் தலையீடு இருக்கக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலரிடம், காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - MEGA கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் 2011 - 2016 காலகட்டத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து - அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தனது பொறுப்புக் காலத்திலேயே - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் முறைமன்ற நடுவத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில்,
"ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், முறையாக செயல்படுதல் வேண்டும். குழப்பமான சூழலை பயன்படுத்தி, ஜனநாயகத்துக்கு மற்றும் அரசியல் சட்டத்திற்கு, விதிகளுக்கு, நடைமுறைகளுக்கு, எதிராக காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டுமென இம்முறைமன்ற நடுவம் விரும்புகின்றது.
எனவே, மன்ற அனுமதி பெறாமல், செயல்படுத்திய பணிகள் குறித்து நேர்மையான அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து முறைகேடுகள் குறித்து தெளிவாக கண்டறிந்து உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், நகராட்சி நிர்வாக ஆணையரை, இம்முறைமன்றம் கேட்டுக்கொண்டு அவ்வாறே இவ்வழக்கில் ஆணையிடப்படுகிறது"
என தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் தெரிவித்திருந்தது.
இவ்வழக்கை டிசம்பர் 30, 2015இல் - அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பதிவு செய்திருந்தார். இதற்கான ஆணை டிசம்பர் 3, 2016 அன்று வெளியிடப்பட்டது.
நடுவத்தின் ஆணையில் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்ட உயரதிகாரிகளில் ஒருவர் - நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் கோ.ப்ரகாஷ் IAS. வழக்கு பதிவு செய்யப்படபோதும் ஆணையராக இருந்த இவர், வழக்கு நிறைவுற்று ஆணை வெளியான பிறகும் இப்பொறுப்பில் இருப்பதால் - இவர் மூலம், நியாயமான வகையில் குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே, நடுவத்தின் ஆணைப்படி அமைக்கப்பட வேண்டிய குழுவில் - நகராட்சி நிர்வாகத் துறையின் தற்போதைய ஆணையரோ, பிற அதிகாரிகளோ நியமனம் செய்யக்கூடாது என்றும், அரசே அக்குழுவை அமைக்க வேண்டும் என்றும், காயல்பட்டினம் “மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment and Guidance Association; MEGA)” சார்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் IAS, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் விநியோகத்துறை அரசு முதன்மைச் செயலர் பனீந்திர ரெட்டி IAS ஆகியோரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைமன்ற நடுவத்தின் தீர்ப்பு குறித்து, 06.03.2017. அன்று வெளியான ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:-
[படங்கள்: கோப்பு] |