“பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வராகிவிட சிலர் பகல் கனவு காண்கிறார்கள்!” என - காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். விரிவான விபரம்:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் 64ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முத்து தலைமையில் நடைபெற்றது.
திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர அவைத் தலைவர் கிதர் முகம்மது, மம்மி, முன்னாள் வார்டு கவுன்சிலர் சுகு, ஆறுமுகநேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட பிரதிநிதிகள் காதர் சாகிப், கசாலி மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்காதர் வரவேற்றுப் பேசினார்.
மாநில பேச்சாளர் உடன்குடி தனபால், உடந்தை மகாராஜன், பாலகிருஷ்ணன், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் பேசினர்.
திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் எண்ணத்தில் மத்திய அரசு நிதியில் உருவான திட்டம்தான் காயல்பட்டினம் 2ஆவது பைப் லைன் திட்டம். தற்போது பாபநாசம் அணையில் 54 அடி அளவிற்கும், மணிமுத்தாறு அணையில் 48 அடிக்கும் தண்ணீர் இருந்தும் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு உரிய குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து எனது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்த பிறகு இப்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இனி இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது! என்று கூறினார்.
கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி 2016இல் தொடங்கியது முதலே செயல்படாத அரசாகவே உள்ளது. ஜெயலலிதா இறப்பின் உண்மைகளை தமிழக அரசு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் ஸ்டாலின்தான். ஆனால் இந்த விஷயத்தில் திடீர் ஞானோதயம் பெற்றவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இப்போது டாக்டர்களை கொண்டுவந்து நாடகத்தை நடத்துகின்றனர். ஆனால் முன்னுக்குபின் முரண்பட்ட தகவல்களே கிளம்புகின்றன.
ஓர் அரசியல் தலைவர் இறந்து இத்தனை விமர்சனங்களுக்கு ஆளானது உலகத்திலேயே ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும். ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர்களைப் போல கம்பீரமாக வேடமிடுபவர்கள் பின் அதே வேடத்துடன் சம்பளம் கேட்டு கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் ஜெயலலிதாவைப் போன்று வேடமிடும் சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? பால்கனியில் நின்று கொண்டு தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு வருகின்றனர்.
அரசியல் தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இயக்கத்தை கட்டிக்காக்கும் திறமை, போர்க்குணம், சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக அவர் மிளிர்கிறார். தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாகவும் உள்ளார். இன்னும் 6 மாத காலத்தில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பை ஏற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ்.என்.முஹம்மத் அலீ உள்ளிட்ட சிலர், அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி,தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர் கருணாகரன், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் மந்திரமூர்த்தி, ஆறுமுகநேரி ராஜசேகர், ஒன்றிய துணை செயலாளர் அமிர்தலிங்கம் உட்பட, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். எஸ்.ஏ.கே.ஜலீல் நன்றி கூறினார்.
செய்தியாக்கம்:
ச.பார்த்திபன்
|