காயல்பட்டினத்தில் நடந்த குடும்ப அட்டைகள் குறைதீர் முகாமில் சுமார் 1000 பேர் பயனடைந்தனர். இது சம்பந்தமாக, இம்முகாமை ஒருங்கிணைத்திருந்த நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுரையின்படி, குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) குறைதீர் சிறப்பு முகாம் - இறைவனின்
நாட்டத்தினால் - இன்று (மார்ச் 11, 2017) காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பேருந்து நிலையம் அருகில் உள்ள - ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) வளாகத்தில் நடைபெற்றது. நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் முகாமை ஒருங்கிணைத்திருந்தது.
வட்ட வழங்க அலுவலர் (TSO) தலைமையில் - தாலுக்கா அதிகாரிகள், ஏறத்தாழ 1000 குடும்ப அட்டைகளுக்கு பல்வேறு சேவைகளை - முகாம் இடத்திலேயே செய்துகொடுத்தனர்.
இதன் மூலம் காயல்பட்டினம் பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உட்பட, அருகாமை ஊர்களான ஆறுமுகநேரி, வீரப்பாண்டியப்பட்டினம், உடன்குடி உட்பட பல ஊர்களில் இருந்தும் பொது மக்கள் இம்முகாம் மூலம் பயனடைந்தனர், எல்லாப்புகழும் இறைவனுக்கே.
முன்னதாக மாவட்ட வழங்கல் அலுவலர் (DSO) - முகாம் ஏற்பாடுகளை நேரடியாக பார்வையிட ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கு வந்திருந்தார். பொது மக்கள் வசதிக்காக - ஷாமியானா, குடிநீர், குளிர்பானம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
முகாமின் இறுதியில், புதிதாக அச்சிடப்பட்டு, தயார் நிலையில் இருந்த ரேஷன் அட்டைகளை - அதன் உரிமையாளர்கள் - அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
இம்முகாம் சிறப்புற நடந்தேற ஒத்துழைப்புகள் நல்கிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அலுவலர், வட்ட வழங்க அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், நடப்பது என்ன? குழும அங்கத்தினர் மற்றும் பொது மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் - இம்முகாமில் தன்னார்வ தொண்டாற்றிய நடப்பது என்ன? குழும ஆண் - பெண் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், இடம் தந்துதவிய ஐக்கிய விளையாட்டு சங்கம் நிர்வாகிகள் ஆகியோருக்கும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
|