ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் சார்பில், இம்மாதம் 24ஆம் நாளன்று “காயலர் தினம் - 2017” நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், குலுக்கலில் தங்க நாணயம் பரிசு வழங்கப்படவுள்ளதாகவும் - அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 24 வெள்ளியன்று “காயலர் தினம் 2017” கொண்டாடுவது என்று துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 03.03.2017 வெள்ளியன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் “காயலர் தினம் 2017”க்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் முத்து முஹம்மத் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “காயலர் தினம் 2017” நடத்துவதற்கான இடம், உணவு, வாகனங்கள், நடத்தப்பட வேண்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை விவாதிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
காயலர் தினம் நடப்பது குறித்த அறிவிப்பை நமதூர் இணையதளங்கள் மூலம் அனைத்து அமீரக காயலர்களுக்கும் தெரியப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும் துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அமீரகவாழ் காயலர்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ.
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் மார்ச் 24ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஸத்வாவில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டம் "காயலர் தினம் 2017" எனக் கொண்டாடப்படுவதால் இந்த நிகழ்வில் ஓன்றுகூடல், சாப்பாடு மற்றும் பெரியோர்-சிறார்களுக்கான விளையாட்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படும். வழமை போல் குறித்த நேரத்தில் தாங்கள், குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் புடைசூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நமது நல மன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் சிறப்பான முறையில் நடந்தேறவும் அதிகமான தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் பொது தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10 மணிக்குள் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்கு முன் வருவோருக்கும்,
அதன் பின் ஜும்ஆவுக்குப் பின் வருவோருக்கும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும். அதே போன்று தன்னார்வத் தொண்டர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கு முன்பு வரும் பெண்களுக்கு தனியாக குலுக்கல் நடைபெற்று, குலுக்கலில் வரும் பெயருக்கு தங்க நாணயம் வழங்கப்படும்.
இந்தக் கூட்டத்துக்கு ஆகக் கூடிய செலவு வகைகளுக்கு வழக்கம் போல துபை காயல் நல மன்ற உறுப்பினர்களே தாமாக முன் வந்து தாராளமாக பொருள் உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமாக சகோ. TAS மீரா சாஹிப் அவர்களுக்கு அலைபேசி எண் 050-4559791க்கு தொடர்பு கொள்ள வேண்டியது.
வழக்கம் போல முதீனா லுலு சென்டருக்குப் பின்புறம் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக 8.30 மணிக்கு முதல் வாகனமும், 9.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும். இது சம்பந்தமாக சகோ. ஹுசைன் ஃபாரூக் அவர்களை அலைபேசி எண் 052-7968499க்கு தொடர்பு கொள்ள வேண்டியது.
ஸஃபா பார்க் பகுதியில் பாலம் கட்டப்பட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன நிறுத்துமிடங்கள் குறைவாக உள்ளன. ஆதலால் வாகனங்களில் வரக்கூடிய சகோதரர்கள் முற்கூட்டியே வரும் பட்சத்தில் பார்க் அருகிலேயே கார்களை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்காத பட்சத்தில், ஸஃபா பார்க்குக்கு எதிரிலுள்ள மஸ்ஜிதின் பின்புறத்திலும், அதைத் தாண்டியும் வாகனங்களை நிறுத்த நிறைய வசதி இருக்கிறது. ஷேக் ஜெயத் (Shaikh Zayed) ரோடு வழியாக வந்தால் பார்க் கேட் நம்பர் 2 பக்கம் வருவது மிகவும் இலகுவாக இருக்கும். தேராவிலிருந்து RTA பேருந்துகளில் வரக்கூடியவர்கள், பேருந்து எண் 12 ஐ பயன்படுத்திக் கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரலும், மேலதிக தகவல்களும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அறிக்கையில் தரப்படும் என்று அறியத் தருகிறோம்.
தங்களின் மேலான நல் ஆதரவை நாடும்,
J.S.A. புகாரீ
தலைவர்
துபை காயல் நல மன்றம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபை கா.ந.மன்றம் சார்பாக...
ஐக்கிய அரபு அமீரகம் - துபையிலிருந்து….
M.S.அப்துல் ஹமீது்
|