காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, தைக்கா தெரு அருகில் இயங்கி வந்த - ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி) பழைய கட்டிட வளாகத்தை அளவிட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) தலைமையில் குழு வந்துள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் தைக்கா தெரு அருகில் இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி (தைக்கா பள்ளி), தற்போது சிவன் கோவில் தெருவில் புதிய கட்டிடத்தில் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது.
தற்போது வெற்றிடமாக உள்ள பழைய கட்டிடம், பாழடைந்த நிலையில் - குப்பைகள் நிறைந்து, சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையிலும், சமூக விரோதச் செயல்களுக்குக் கூடாரமாகவும் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, எந்நேரமும் விழுந்திடும் நிலையில் உள்ள இக்கட்டிடத்தை முற்றிலும் அகற்றிட - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
பெறப்பட்ட கையெழுத்துக்கள், நிழற்படங்கள் இணைக்கப்பட்டு - இது தொடர்பான விரிவான மனு, சென்னையிலுள்ள - தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை அரசு முதன்மை செயலர் டி.சபிதா IAS, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா IAS, ஆரம்ப கல்வித்துறையின் இயக்குனர் ஆர்.இளங்கோவன் ஆகியோரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கல்வித் துறையைச் சார்ந்த அதிகாரி டக்ளஸ் (AEEO) - அந்தப் பள்ளிக்கூட வளாகத்தைப் பார்வையிட காயல்பட்டினம் வந்திருந்தார்.
இவ்வாறிருக்க, சில நாட்களுக்கு முன் - பழைய தைக்கா பள்ளி கட்டிடத்தை இடித்தகற்றிட பரிந்துரைத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக - தமிழக அரசின் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபிதா IAS, “நடப்பது என்ன?” குழுமத்திடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருச்செந்தூரிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) பானு தலைமையில் பொறியாளர்கள், காயல்பட்டினம் வருகை தந்து - தைக்கா பள்ளி இயங்கிய பழைய கட்டிட வளாகத்தை அளவிட்டுச் சென்றனர். அடுத்த சில நாட்களுக்குள், முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, கட்டிடத்தை இடிக்கும்பணி நடைபெறும் என அவர்கள் – “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் & அங்கத்தினரிடம் தெரிவித்தனர்.
|